நதி போல ஓடிக் கொண்டிரு… தொடர் 

nathi

nathi​‘லுக் அட் திஸ்! ஹீ கேன் குக் வாட் ஹீ வாண்ட்ஸ் அட் ஹிஸ் வொர்க் டெஸ்க்!’
சிவநெறித்தேவனின் மேசையைக் காட்டி ஜப்பானிலிருந்து வந்திருக்கும் பெரும்நிறுவன வாடிக்கையாளப் பெண்மணியிடம் சொன்னார் நிறுவன இயக்குனர்.
‘ஆய்… ஆய்…!’ என்று மாடு ஓட்டி வாய் பிளந்து பார்த்தாள் அவள்.
‘சிவா! ஜப்பான்காரி அப்படிப் பாக்குறா உன்ன. ப்ராஜெக்ட் வந்தா உனக்குத்தான் போல!’ என்று அருகில் வந்து சொல்லிப் போன ஆனந்திடம் ‘வரட்டுமே மச்சீ! மவுன்ட் ஃப்யூஜில ஏறுவோம்! ஜென் மாஸ்டர்ஸ் கிட்டப் போயி ஏதாவது கத்துப்போம். ஹிரோஷிமா நாகசாகி பக்கம் போயி ஜப்பானிய பேய்களை பேட்டி எடுப்போம்!’ என்று சொல்லி விட்டு, நேற்று வாங்கிவந்து வைத்த அஸ்ஸாம் டீ அட்டையை பிரித்தான் சிவநெறித்தேவன்.
தனது அலுவலக மேசையில் ஒரு எலக்ட்ரிக் கெட்டில் வைத்துக் கொண்டு சுடு தண்ணியோ, அதில் தோய்த்து தேநீரோ போட்டுக் கொள்வது அவனது வழக்கம். வேறு ஊர்களுக்கு அலுவலக வேலையாகப் பயணப்பட்டால், அவனோடு அந்த கெட்டிலும் பயணப்படும்.  கொதிக்கக் கொதிக்க டீயை உறிஞ்சுபவன் அவன். சர்க்கரை, பால் சேர்க்காமல் அஸ்ஸாம் தேநீரை கசக்க கசக்க உறிஞ்சும்போது அதன் அசல் சுவையும் நற்குணங்களும் கிடைக்கும் என்று நம்புபவன் அவன்.
டீயை உறிஞ்சியபடியே கணினித் திரையில் தெரிந்த அந்த நூலைப் பார்த்தான்.

அது ‘ஃபால் ஆஃப் எ ஸ்பேரோ – சாலிம் அலி’. நண்பர் ஒருவர் பரிந்துரைத்து ஒரு இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து படித்த நூல் அது. இதுவரை மூன்று முறை படித்துவிட்டான் அதை. சாலிம் அலி என்ற பறவைகளை வேட்டையாடும் குடும்பத்தை சேர்ந்த ஒரு சிறுவன் கொஞ்சம் கொஞ்சமாக பறவைகளை நேசிக்க ஆரம்பித்து பின் வாழ்வு முழுக்க பறவைகளைத் தேடித் தேடி ஆராய்ச்சி செய்த கதை. இன்று படிக்கும்போது அந்த நூல் என்னவோ செய்து விட்டது அவனது உள்ளே. எதையோ கிளறி விட்டு விட்டது அவனுள்.
பறவைகள் பறந்தன அவனுக்குள்ளே!

காகங்கள், காட்டுக்கோழிகள், கொட்டாப்புளி குருவிகள், கறிக்குருவி என்னும் கருவேட்டு வாளி, சிட்டுக் குருவிகள், தேன் சிட்டுக்கள் என எத்தனையோ வந்து போயின அவனுள்ளே. தேநீரை பக்கத்தில் வைத்துவிட்டு நாற்காலியில் தலையைச் சாய்த்தான். கண்கள் மூடிக்கொள்ள, மனம் எங்கோ பறந்தது, வாய் முணுமுணுத்தது ‘செரவி.. செரவி…’
அப்போது அவன் நான்காவதோ ஐந்தாவதோ படித்துக் கொண்டிருந்தான் உள்ளூர்ப் பள்ளியில். ‘நீயும் வரியாடா?’ என்றார் சித்தப்பா. எதற்கு எங்கே என்று எதுவும் தெரியாமல் முதலில் ‘ம்ம்ம்…’ என்றான், அதற்கப்புறம் ‘எங்க?’ என்றான். ‘கொல்லைக்கு செரவி ஓட்ட!’. என்னவென்றே புரியவில்லை அவனுக்கு ‘சரி’ சொல்லிவிட்டு அக்காவிடம் ஓடினான். சேற்றில் காலை ஊன்றி நடப்பது, வரப்பில் பதிய நடப்பது, மஞ்சள் கரிசலாங்கண்ணியைக் கொண்டு பல் துலக்குவது என அவனுக்கு அந்த வயதில் சங்கதிகளை சொல்வது அக்காதான். செரவியைப் பற்றித் தெரிந்துகொள்ள அக்காவிடம் ஓடினான்.
‘மலையான் மலையான் பூப்போடு… மலைக்கு ரெண்டு பூப்போடு…’ கைவிரல்களை மடக்கி இடது கை விரல்களின் நகங்களை வலது கை விரல்களோடு உராயும்படி தேய்த்துக் கொண்டிருந்தாள் அவள். மேலே பறக்கும் கொக்கு இவர்கள் பாடியதைக் கேட்டு பூ ஒன்றை போட்டால் அது நக கண்ணில் வெள்ளையாக இருக்கும் என்று நம்பப்படும் கிராமத்து சிறுமியர்களின் விளையாட்டு அது.
‘மலையான் மலையான் பூப்போடு… மலைக்கு ரெண்டு பூப்போடு…’
‘அக்கா… செரவின்னா என்ன?’
‘செரவியா! அது பறவை. கூட்டம் கூட்டமா பறந்து வரும். அப்படியே எதாவது ஒரு வயல்ல இறங்கும். எறங்குச்சின்னா ஒரு நெல் கூட உடாம உருவி தின்னுட்டு போயிடும். மொத்த வயலையும் சாப்டுடும். ஏன் கேக்கற! நீ செரவி ஓட்ட போறியா?’
‘ஆமாம், சித்தப்பா கூட!’
ஊரைக் கடந்து வயல்களை அதன் வரப்புகளின் வழியே கடந்து சித்தப்பாவை தொடர்ந்து போனான் அவன். வயலாமூரில் இருக்கும் அவர்களது வயலை அடையும்போது இருள் கவ்வத் தொடங்கியிருந்தது. நன்றாக விளைந்து இன்னும் இரு வாரங்களில் அறுக்கலாம் என்ற நிலையில் இருந்தது நெற்பயிர். மேற்கு வானத்தில் தூரத்தில் எதுவோ பறப்பதை போல இருந்தது. சித்தப்பா கையில் வைத்திருந்த பித்தளைத் தாம்பாளத்தை கழியால் அடித்தும், ‘ஹோய் ஹோய் ஹோய்’ என்று கத்தியும் சத்தமெழுப்பினார். செரவி பறவைகள் இறங்கி விடாமல் இருக்க சத்தமெழுப்பி விரட்ட வேண்டும். இறங்கிவிட்டால் அதோகதிதான். விரட்ட முடியாது. செட்டியார் வீட்டு வயலில் செரவி இறங்கியதாகவும் ஒரு நெல்மணி கூட மிச்சம் கிடைக்கவில்லையென்றும் அம்மா சொல்லியிருந்தார்கள். அவனும் தன் கையிலிருந்த தட்டைத் தட்டினான். அந்த வயதிற்கே உரிய கூச்சத்தினால் வாய் விட்டு கத்தாமல் வாயெல்லாம் பல்லாக பித்தளைத் தட்டை தட்டினான்.
இரவாகிப் போனதும் இனி செரவி வராது என்ற நிலையில் அவர்கள் வீடு நோக்கி நடந்தனர். செரவி வரவில்லை என்று நிம்மதியோடு நடந்த சித்தப்பாவின் பின்னல் ‘ச்சே! செரவி வரவே இல்லை! செரவியை பாக்கவே இல்லை!’ என்று வருத்தத்தோடு நடந்தான் அவன்.
செரவியைத் தேடிக்கொண்டே இருந்தான் அவன். எது செரவி என்றே தெரியாததால், செரவியை பார்த்தேயிராததால் பார்க்கும் பறவைகளிலெல்லாம் செரவியைத் தேடினான் அவன். பயணித்த பல தேசங்களிலெல்லாம் பார்க்கும் பறவைகளில் கூட ‘இது இந்த ஊரு செரவியா இருக்குமோ!’ என்றே பார்ப்பான் அவன்.  இன்று வரை செரவியை பார்த்ததில்லை அவன்.

‘செரவி… செரவி….’

‘என்னாது செல்வியா!’ என்று ஆனந்து கேட்டதும் கண்விழித்து வெளியுலகத்திற்கு வந்தான் சிவநெறித்தேவன்.
‘மச்சி… நான் ரெண்டு நாலு லீவ். வெளிய போறேன்!’
‘ஊருக்கா?’
‘இல்ல. காட்டுக்கு’
‘அட.. நக்கல் போதும்.’
‘நக்கல் இல்லை. நிஜம்! செரவி பாக்க காட்டுக்கு போறேன்!’
‘செரவி? அது யாரு மச்சி. ஜப்பான்காரிய புடிப்பன்னு பார்த்தா, ஏதோ டார்சான் மாதிரி காடுவாசிய புடிக்கற! யாரு அது செரவி!’
‘டேய்… செரவி பொண்ணு இல்லை. பறவை. குருவி! மைசூர் ரோட்டுல போகப் போறேன். காட்டுக்குள்ள போகப் போறேன். ரங்கன் திட்டு பறவைகள் தீவு கூட போனாலும் போவேன்!’
‘பைக்லதான் போறேன். கார் எடுத்திட்டு போகல! திரும்பி வர ரெண்டு நாலு ஆகும்!’
‘டேய்.. எங்க தங்குவ? எங்க சாப்பிடுவ?’
‘தெரியல! எல்லாம் கெடைக்கும்!’
‘வாங்கற சம்பளத்துக்கு வேலை பாக்கவே சக்தி இல்லை. இதுல காட்டுக்கு போயி அலைஞ்சி திரிஞ்சி திரும்பி வந்து..யப்பா… ஏம்பா?’
‘ஒரே மாதிரியா இயங்கற வாழ்க்கை ஒரு நிலைக்கு மேல நம்ம உணர்வுகள உளுத்துப் போக வச்சிடும். மாற்றம் வேணும். சுற்றியிருக்கிற சூழல் மாறும்போது மனித மனதுக்குள்ள எல்லாம் மாறிடும். உள்ள இருக்கற உளைச்சல்கள் எல்லாம் பொல பொலன்னு உதிர்ந்திரும். அதவிட முக்கியமா இயற்கையோட இருக்கும்போது உள்ள ஒருவித உற்சாகமும், சக்தியும் வந்திடும். உயிராற்றல் பெருகும்.’
‘வேலை வேலைன்னே இருக்கறவன விட வெளில போயி கொஞ்சம் விளையாடிட்டு வர்றவன் வேலையில வெளுத்து வாங்குவான், வீரியமா இருப்பான்!

என் சுவாசக் கோளங்களுக்கு அந்த சுத்தமான காற்று வேண்டும். என் கண்ணுக்கு மட்டுமில்ல, எனது ஐம்புலன்களுக்கும் பறவைகள் வேண்டும் இப்போது. இயற்கையில் இணைந்து கரையப் போறேன் நான்!’
‘காட்டுவாசிகள் யாரையாவது புடிச்சிட்டு வந்துராதடா!’
‘அப்படி நடந்தா மகிழ்ச்சி!  காடு ஒரு பெரிய அதிசயம் மச்சி. காது இருந்தால் காடு பேசுவதை கேட்க முடியும். காடு அமைதியானது. சத்தம் போடுகிறவனால் காட்டை கவனிக்க காது கொடுக்க முடியாது. காட்டுவாசிகள் மிக அமைதியானவர்கள். காட்டுவாசிகள் காடுகளில் வாழ்கிறார்கள், காடுகளோடு வாழ்கிறார்கள். காடுகளுக்கு காது கொடுக்கிறார்கள். காட்டின் ஒவ்வொரு அசைவும் அறிந்தவர்கள் அவர்கள். அசையும் ஒவ்வொரு செடியை வைத்தே அதன் பின்னே நகரும் விலங்கு எது என்று சொல்லும் தேர்ச்சி பெற்றவர்கள். ஒரே ஒரு காட்டுவாசி கிடைத்தால் போதும் மச்சி! கடைத்தேறிவிடுவேன்!”
கீழே வந்து காரின் பின்புறத்திலிருந்து சிவப்பு நிற ‘அமெரிக்கன் டூரிஸ்ட் பேக்’கை எடுத்தான். எப்போது வேண்டுமானாலும் பயணிக்கலாம் என்றே தயார் நிலையில் இருக்கும் பை அது.  அங்கேயே பேண்ட்டையும் ஷூவையும் மாற்றிக் கொண்டு, காரை பூட்டி விட்டு, ஜெர்கினையும் கருப்பு நிற கையுறைகளையும் கருப்பு நிற ஹெல்மெட்டையும் அணிந்துகொண்டு கருப்பு நிற ‘அப்பாச்சீ’யை எடுத்தான்.
இஞ்சினுக்கு உயிர் கொடுத்தான்… அதன் ஓசை கூட அன்று வித்தியாசமாக இருந்தது.

‘செரவி… செரவி…. செரவி….’ என்றது அது.
(தொடரும்)

‘வளர்ச்சி’ மாத இதழில் நான் எழுதும் “நதி போல ஓடிக் கொண்டிரு…” கதை + தன்னம்பிக்கைத் தொடர்
Facebook.com/ParamanPage

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *