l6.. உள்ளே சமநிலை இழந்த யானை சுற்றியிருப்போரைத் தாக்கும்:

குழந்தைகள் என்றால் இத்தனை முறை, பெரியவர்கள் என்றால் இத்தனை முறை என்று ஒரு நிமிடத்தில் எத்தனை முறை இதயம் துடிக்க வேண்டும்… குறைவாகவும் துடிக்கக் கூடாது மிக அதிகமாகவும் துடிக்கக் கூடாது என்றெல்லாம் கூறப்படும் பரிந்துரைகளுக்கு முற்றிலும் எதிராக இதயம் துடிப்பதே நின்று போனது சிவநெறித்தேவனுக்கு.  அந்தக் காட்சியில் அவனது ரத்தம் உறைந்து போனது. 
செடியிலிருந்து வெண்டைக்காயைப் பறித்து வரப்பிலிருக்கும் காய்க்குவியலில் வீசுவதைப் போல, ஒரு யானை சாலையில் டிவிஎஸ் ஃபிஃப்டி வண்டியில் இருந்த ஒரு மனிதனை தும்பிக்கையால் பிடித்து உயரே தூக்கி ஓரத்தில் இருந்த மரத்தின் மீது வீசியது.  தூரத்திலிருந்து பார்க்கும் சிவநெறித்தேவனுக்கே அதிர்ச்சியில் ரத்தம் உறைந்து நா இயங்க மறுத்ததென்றால், தும்பிக்கையில் அகப்பட்ட அந்த மனிதனின் நிலை என்னவாக இருக்கும்! ‘அம்மா!’ என்று கூட குரலெழுப்பமுடியா அச்சநிலையில் அந்தரத்தில் பறந்துபோய் ஓரத்தில் இருக்கும் வேங்கை   மரமொன்றில் வயிறை ‘நச்’சென்று முட்டி தோள்பட்டை கைகள் தரையில் படுமாறு ‘பொத்’தென்று விழுந்தான்.  

யானை இப்போது கீழே சாய்ந்து கிடந்த அவனது வண்டியின் பக்கம் திரும்பியது.  மனித மூளை மிக மிக நுட்பமானது. அதிகம் சிந்திக்காதவன் என்று கருதப்படும் ஒருவனுக்குக்கூட உயிர் என்று வந்துவிட்டால் அந்த ஆபத்து தருணங்களில் அதிவிரைவாக வேலை செய்யும் வல்லமை கொண்டது அது. 

சாய்ந்து கிடக்கும் வண்டியை நோக்கி யானை செல்லும் தருணத்தில் சரிந்து கிடந்தவன் சரேலென மின்னல் வெட்டு சிந்தனை கண்டான்.  வண்டியின் பக்கம் முன்னேறிய யானை கீழே கிடந்த அந்த டிவிஎஸ் ஃபிஃப்டியிலிருந்து இடப்புறம் கொஞ்சம் விலகி கொஞ்சம் முன்னே சென்றது. கிடக்கும் வண்டிக்கு இணையாக சென்றதும் நின்று வலது காலால் அந்த வண்டியை அப்படியே மிதித்தது.  பாதம் பட்ட அந்தப் பாகங்கள் வளைந்து நசுங்கி வடிவம் மாறிப் போயின சில வினாடிகளில்.  மென்மையான பாதத்தின் அடிப்பகுதி வலித்திருக்க வேண்டும் அந்த யானைக்கு, காலை எடுத்துவிட்டு கொஞ்சம் பின்னே நகர்ந்து தனது துதிக்கையால் வண்டியை தொட்டு நகர்த்தி தூரத் தள்ள முயற்சித்தது.  இந்த இடைவெளி போதுமானதாக இருந்தது அந்த மனிதனுக்கு. யானை வண்டியை துவைக்கும் அந்த நேரத்தில் சரேலென எழுந்து பின்னங்கால் பிடரியில் அடிக்க உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு ஓடினான் அவன்.  வண்டியை தள்ளிவிடும் முயற்சியிலிருந்த யானை திரும்பி வரும்போது அவன் ஓடி இருந்தது கண்டு சில வினாடிகள் நின்று நிதானித்து திரும்பியது. அந்த மனிதன் சிவநெறித்தேவன் நின்ற திசையில் ஓடி வந்து அவனைக் கடந்து எங்கேயோ ஓடிக் கொண்டிருந்தான். யானை இப்போது சிவநெறித்தேவன் இருந்த திசை நோக்கி வரத் தொடங்கியது. 

அதற்குள் எங்கிருந்தோ வந்த வனச்சரக அதிகாரி ஏதோ ஒரு வானத்தை 

(மேலே சென்று வெடிக்கும் பட்டாசு) கொளுத்தி யானையின் பக்கம் விட்டார். ‘ஸ்ஸ்ஸ்ஸ்… டமார்’ என்று அது வெடித்த சத்தத்தில் யானை மிரண்டு சாலையை தவிர்த்து சட்டென்று காட்டுக்குள் புகுந்து பெரு வேகமெடுத்து ஓடி விட்டது. யானையிடம் அடிபட்டு ஓடிய மனிதன் என்னவானான், எங்கே போனான் முதலுதவி செய்யப்பட்டதா என எதையும் சிந்திக்க முடியவில்லை. ‘சார்… யாவு பக்கம் போறீங்க? ஊரி போறீங்களா? வர்லாமா?’ என்று கன்னடமும் தமிழும் கலந்து மஞ்சள் பற்களால் சிரித்துக் கேட்டான் ஒருவன். ‘ஏறுங்க!’ என்று சொல்லி அவனை ஏற்றிக் கொண்டு வண்டியை இயக்கினான் சிவநெறித்தேவன். 

‘எங்க போறீங்க?’ 

‘பக்கத்துல இருக்கற ரிசார்ட்டுக்கு சார்!’ 

‘அங்க என்ன செய்யறீங்க?’

‘புதுசா சேர்ந்திருக்கிற குக்கு நானு!’

‘எந்த ஊரு நீங்க?’

‘ஹூப்பளி, ஒன் வீக்தா ஆவுது வந்து!’

‘உங்க பேரு?’

‘ஹனுமந்தப்பா’

‘சரிப்பா!’

‘சார்.. அந்த ஆனே ஏன் சார் அவர அடிச்சது?’

‘டீ சாப்பிடலாமா?’ 

‘ஹாங் சார்!’

தமிழ் கன்னடம் மலையாளம் ஆங்கிலம் என எல்லா மொழிகளிலும் ‘டீ கிடைக்கும்’ என்று எழுதப்பட்டிருந்த சாலை ஓர டீக்கடையொன்றின் அருகில் வண்டியை நிறுத்தினார்கள்.  டீ போடும் பெண்மணியின் மஞ்சள் நிற சேலையும் நெற்றியிலிருந்த பெரிய்ய்ய்ய பொட்டும் எல்.ஆர்.ஈஸ்வரியின் பல அம்மன் பாடல்களை நினைவுபடுத்தின.  ‘ரெண்டு டீ குடுங்க’ என்று சொல்லிவிட்டு சிவப்பு வண்ணத்தில் இருந்த ஸ்டூல்களில் அமர்ந்தார்கள். 

‘என்ன கேட்டீங்க?’ 

‘அந்த ஆனே ஏன் சார் அவர அடிச்சது? நம்மளையும் அடிக்குமா சார்?’

‘கும்பலா இருக்கற யானைங்க யாரையாவது அடிச்சதாகவோ, தாக்கியதாகவோ இதுவரைக்கும் நீங்க கேள்விப்பட்டு இருக்கீங்களா? செய்திதாள்கள்ல படிசிருக்கீங்களா?’

‘இல்லே சார்!’

‘அதுதான் விஷயமே! ஒத்த யானைங்கதான் மனிதர்களைத் தாக்கும், ஊருக்குள்ள புகுந்து நாசத்தை ஏற்படுத்தும்!’ 

‘ஓ!’

‘ஒத்த யானைங்கதான் தாக்குதல் செய்யும். இந்த ஒத்த யானையும் தனியா வாழற விலங்கு இல்ல. இதுவும் ஒரு கூட்டத்தை சேர்ந்ததுதான். ஏன் தனியா வருது, தாக்குதுன்னு பார்த்தா ஒரு ஒரு பெரிய உளவியல் காரணத்தைக் கண்டுபிடிக்கலாம். மனிதர்களாகிய நம்மில் பலபேருக்கு நடக்கக் கூடிய ஒரு பெரிய வாழ்க்கை பிரச்சினைக்கு எளிதான தீர்வு கண்டுபிடிக்கலாம்!’ 

 ‘என்னா சார் சொல்றீங்க?’

‘யானை ஒரு அருமையான உயிரினம். யானைகளுக்கு மனிதர்கள் இருக்கற இடங்களுக்கு வந்து ஊருக்குள் புகுந்து சேதம் செய்யவேண்டும் என்றெல்லாம் விருப்பம் இல்லை. அது பாட்டுக்கு அதனது வாழ்க்கையை காட்டுக்குள்ளே வாழ்ந்திட்டு போகவே அதுங்களுக்கு ஆசை.’ 

‘சார், அவ்ளோ பெரிய காட்டை விட்டு பின்ன என் சார் அது கீழ எறங்கி ரோட்டுக்கு வர்ருது?’

‘நான்கு காரணங்கள். ஒன்று – தண்ணீர் கிடைப்பதில்லை. தண்ணீர் குடிக்க வருகிறது.   இரண்டு – பசுந்தீனி கிடைக்காமல், கிடைக்குமிடம் தேடி வெளியே வருகிறது. மூன்று – ஒவ்வொரு பருவத்திலும் சில இடங்களை விட்டு வேறு இடங்களுக்கு அவை பயணிக்கின்றன. அப்படி அவை வழக்கமாக பயணிக்கும் பாதையை ஆக்கிரமித்து நாம் பட்டா போட்டு வேலியடைத்து விடுகிறோம். நான்கு இரவில் கொசுக் கடி தாங்கமுடியாமல் அவை கீழே இறங்கி சாலைகளுக்கு வந்து விடுகின்றன.’

‘ஒத்த யானை பத்தி ஏதோ சொன்னேங்களே சார்’ 

‘ம்ம்ம்ம். ஒத்த யானைங்கதான் தாக்குதல் செய்யும்! யானைங்க பெரிய கூட்டமா போனாலும் பொதுவா பெரிசாக எதையும் அழிப்பதில்லை. போகிற போக்கில் சாப்பிட்டுட்டு போயிடும். பெருசா மரங்கள் கூட முறிஞ்சி கிடக்காது. லத்தி மட்டும்தான் கிடக்கும்.’

‘அப்புறம் ஏன் சார் அது ஒத்த யானையா வந்து தொல்லை பண்ணுது?’

‘ஒழுங்காக தன்னுடயை இயல்பில் இருந்த யானையை யாரோ சீண்டுவதால், தொந்தரவு செய்வதால், அது உள்ளே சமநிலை இழக்கிறது. முக்கியமாய் இரு சக்கர வாகனங்களில் வருவோர் அதனருகில் போய் கடப்பது, அதன் அருகில் போய் ஃபிளாஷ் அடிக்கும் வண்ணம் படமெடுப்பது, கிட்டே போய் குரங்குத்தனம் செய்வது, அது ஆண்டு ஆண்டுகளாக ஒவ்வொரு பருவத்திலும் நீர் அருந்த இடம் பெயர பயன்படுத்தும் பாதையை ஆக்ரமித்துக் கொண்டு வேலி அல்லது சுவர் எழுப்பி அதை போக விடாமல் செய்வது… போன்ற செயல்களால் அது தொந்தரவு செய்யப் படுகிறது. கொஞ்சம் கொஞ்சமாக சம நிலை இழக்கிறது.

சில நேரங்களில் செல்ஃபோனை வைத்துக் கொண்டு படமெடுத்து வெறுப்பேற்றியவன் ஒருவனாகவும், சில நேரம் கழித்து சினம் கொண்ட அந்த யானையிடம் சிக்குபவன் வேறு ஒருவனாகவும் ஆகிவிடுவது ஒரு கொடுமை.’

‘ஓ…’

‘உள்ளே சமநிலை இழந்த யானை தன் கூட்டத்தோடு இயல்பாக இசைந்து இருக்கமுடிவதில்லை. உள்ளே சமநிலை இழந்த அது வெளியே தாக்குதல்களை செய்து தான் இருக்கும் இடங்களில் சேதங்களை ஏற்படுத்துகிறது. இதே கதைதான் மனிதர்களது வாழ்விலும்!’

‘என்ன சார் சொல்றீங்க?’

‘உள்ளே சமநிலை இழந்த மனிதன் உண்மையில் தனது சுற்றத்தாரோடு சேர்வதில்லை. உள்ளே சமநிலை இழந்த ஒருவன் உள்ளே ஒருவித வெறி வந்து வெளியில் தெரியாமல் உறுமிக் கொண்டு திரிகிறான். ஒரு நிலையில் தான் இருக்கும் இடங்களில் வெளியே தாக்குதல்கள் செய்கிறான், சுற்றி இருப்போரை காயப்படுத்துகிறான்.  யானையை செல்ஃபோனில் படமெடுத்தது யாரோ, அதற்காக மிதிபடுவது வேறு யாரோ என்பதைப் போலவே சில சமயங்களில் அம்மனிதர்களின் சம நிலை சீர்கெடக் காரணமானவர்கள் யாரோ காயம் படுபவர்கள் யாரோ.’

‘கரெக்ட் சார்! சில சமயத்தில கிச்சன்ல உதவி வேல செய்யற பையன போட்டு திட்டி அடிச்சர்றேன் சார்! ஆனா, கோவம் வேற எடத்துல வந்தது!’

‘இயற்கை சமநிலை தவறும்போது பூகம்பம், சுனாமி என பேரழிவுகள் ஏற்படுகின்றன. அதே போலவே மனிதன் உள்ளே சம நிலையை இழக்கும்போது சுற்றி இருப்பவற்றை தாக்கி பேரழிவுகளை ஏற்படுத்திக் கொள்கிறான். இந்த நேரங்களில் அவனோடு பணிபுரிவோர், உடன் வசிப்போர் என சுற்றியோருப்போர் காயப்பட்டுப் போகின்றனர். சில காயங்கள் சரியே செய்யமுடியாத உறவுச் சிக்கல்களை ஏற்படுத்துகின்றன.’

‘சமநிலை தவறிய மனிதன் அவனாகவே இருப்பதில்லை. உணர்ச்சிக் கொந்தளிப்பில் அடுத்தவர்களை காயப் படுத்தவேண்டும் என்ற ஒரே இலக்கில் அப்போது தோன்றியதை எடுத்து வீசுகிறான், பேசுகிறான், காயப் படுத்துகிறான். அந்த நேரங்களில் அவன் தனது இயல்பில் இருப்பது இல்லை.’

‘உள்ளே சமநிலை – இதுவே நம் உள் இயல்பைக் காக்கும். உன்னதமான மனிதத்தை வளர்க்கும்.’  

தேநீர் அருந்தி பயணத்தை தொடர்ந்தார்கள் அவர்கள். 
‘இங்கதான் சார். இதுக்குள்ள நான் போவணும் சார்! இங்கயே விட்டுடுங்க சார்! தாங்க்ஸ் சார்!’ என்றார் ஹனுமந்தப்பா. 

சிவநெறித்தேவன் அவர் முகம் பார்த்து சிரித்து கைகொடுத்தான்.

‘சார்… நாம தனியா சுத்தற ஒத்த யானையா இருக்கக் கூடாது! நான் பாத்துக்கறேன் சார் இனிமே என்னை!’

சிவநெறித்தேவன் தமிழகம் நோக்கிய சாலையில் தனது வண்டியை விட்டான். 

ஜெயமோகனின் ‘யானை டாக்டர்’  கட்டுரை நினைவுக்கு வந்தது அவனுக்கு. 

‘யானை! எவ்வளவு அற்புதமான விலங்கு! பெரும் நினைவாற்றல் கொண்ட, இயல்பிலேயே அதிகம் நேசிக்கும், கூட்டமாய் வாழும் பெரும் உடல் கொண்ட விலங்கு. அதை காட்டிலும் வாழவிடாமல் தொந்தரவு செய்து, நாட்டிலும் வாழவிடாமல் சிறைபிடித்து கொண்டு வந்து கோயில்களில் பிச்சைஎடுக்க வைத்து விடுகிறோம்!’

சிவநெறித்தேவனின் செல்லிடப் பேசி சிணுங்கியது. வண்டியை ஓரமாக நிறுத்தி விட்டு செல்லிடப் பேசியை எடுத்துப் பார்த்தான். ‘மத்வமைந்தன்’ என்று மின்னிய பெயர் அவனுக்குள் உற்சாகத்தை வரவழைத்தது. 

அவன் நின்ற இடத்திற்கு பின்புறத்தில் ‘புஸ்ஸ்ஸ்’ என்று பெரிய மூச்சு எறியும் சத்தம் வந்ததை அவன் கவனிக்கவில்லை. அந்த இடத்திலிருந்து திடீரென சில மான்கள் சிதறி ஓடின.  இரண்டு கண்கள் அவனையே கவனிப்பதை அவன் அறியவில்லை.

(தொடரும்)

‘வளர்ச்சி’ தமிழ் மாத இதழில் நான் எழுதிக் கொண்டிருக்கும் கதை + தன்னம்பிக்கைத் தொடர் ‘நதி போல ஓடிக் கொண்டிரு…’ பகுதி – 6

Www.ParamanIn.com

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *