​பரிமேலழகர்…  

​பரிமேலழகர்…  

சிறு வயது பள்ளி நாட்களில்

இரண்டு மதிப்பெண் என்ற கணக்கிற்காக படித்து வைத்த வார்த்தை. மணக்குடவருக்கு அடுத்த இடத்தில் இருப்பவர் என்று அந்த வயதில் அறியப்பட்டவர். வள்ளுவப் பெருந்தகை தந்த வாழ்வையே மாற்றும் குறளுக்கு உரை எழுதியவர்களில் ஒருவர். 
தமிழ் மீது ஆர்வம் அதிகரித்த காலங்களில் அதே பெயர் வேறு பல உணர்வுகளை தந்தது. ‘ பரி மேல் அழகர்!’ அட… குதிரை மேல் வரும் அழகர், கள்ளழகரைக் குறிப்பிட்டு வைத்த பெயரோ, சூரியநாராயண சாஸ்திரி என்றிருந்த பெயரை பரிதிமாற்கலைஞர் என்று மாற்றிக் கொண்டாரே அவர், அவர் போல இதுவும் வைத்துக் கொண்ட அழகுப் பெயரோ என்றெல்லாம் அசந்திருக்கிறேன்.
வள்ளுவப் பெருந்தகை உலகிற்குக் கொடுத்த கொடை எத்துணை பெரியது! அதை உள்வாங்கி உரைதந்து மக்களை மேன்மை பெறச் செய்த இவர்களின் செயல் எத்துனை பெரிது என்று புரிய தொடங்கிய காலத்தில் பரிமேலழகர் மீதும் இன்ன பிற ஆசிரியர்களின் மீதும் அளவு கடந்த மரியாதை கூடியது.
பரிமேலழகர் தந்துவிட்டுப் போனதை, அவர் தந்ததை உள்வாங்கி அடுத்த தலைமுறைகள் தந்ததை பார்க்கிறோம். பரிமேலழகர் இருந்த ஊழியம் செய்த இடத்தைப் போய் பார்த்தால் எப்படி இருக்கும்!
‘எஸ்… திஸ் ஈஸ் வேர் லார்ட் நாராயணா கெப்ட் ஹிஸ் ஃபீட் ஆன் தட் கிங்… எஸ்..’ என்று வெள்ளை வெளேர் ஐரோப்பியர்கள் கையில் குறிப்பேடு வைத்துக் கொண்டு ஒவ்வொரு கல்லாக பார்க்கும், ‘நிற்பதுவும் அமர்ந்ததும் கிடந்ததுவும் என்னுள்ளே’ என்று திருமழிசையாழ்வார் பாடிய அதே தலத்தில்தான் ஊழியம் செய்தாராம் அவர்.  கல்வெட்டுக்களும் அதை விளக்கி் எழுதப் பட்ட தமிழ் பதாகையும் வைக்கப்பட்டுள்ளது வெளிப் பிறகாரத்தில். 
காலங்களைக் கடந்து நிற்கும். மிகச் சிறந்த பல்லவச் சிற்பங்கள் காற்று-பனி-வெயில்-மழையால் கொஞ்சம் கொஞ்சமாக அழிவதை பார்க்க முடிகிறது. அழியும் நிலை சிறு சிற்பங்களே இப்படி இருந்தால் அந்நாளில் எப்படி இருந்திருக்கும் இவை!
கல்வெட்டுகள், நெல்லி மரம், சில சிற்பங்கள் நிறைய பக்தர்கள் என்றிருக்கிறது திருவூரகம் என்று வைணவம் சொல்லும் காஞ்சிபுரம் உலகளந்த பெருமாள் கோவில். 
:பரமன் பச்சைமுத்து 

காஞ்சிபுரம்

07.01.2017
Facebook.com/ParamanPage 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *