நான் மங்கல்யான், செய்வாய் கிரக விண்கலம் பேசுகிறேன்…

Naan Mangalyaan Feb1st

Naan Mangalyaan Feb1st

“வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடினேன்,” என்றுப் பாடிப்போன வள்ளலார் வாழ்ந்திருந்த பகுதிகளில் வளர்ந்ததாலோ என்னவோ, வயல், வரப்பு, விவசாயம் என்றால் ஒரு தனி உற்சாகம் ஓடி வந்து ஒட்டிக்கொள்ளும் என்னுள்ளே.

பச்சைப் பசேலென்று தலை நிமிர்த்தியோ அல்லது நன்றாய் விளைந்து, தங்க நிறத்தில் நெல்மணிகளின் கனத்தில் தலைசாய்த்தோ நிற்கும் நெல்வயல்களினூடே நடந்து போயிருக்கிறீர்களா? புல்மூடிய வரப்புகளில் வெறும் காலோடு நடந்திருக்கிறீர்களா? கலப்படமில்லா நல்ல காற்று உங்கள் நுரையீரல் பைகளை நிரப்பி, உள்ளே உயிர் ஊறச்செய்யும். கண்ணுக்கெட்டிய தூரம்வரை தெரியும் காற்றிலாடும் பயிர்கள், கண்களைக் குளிரச்செய்யும். வரப்பிலிருக்கும் புற்கள், சூரிய ஒளியிலிருந்து தாங்கள் சேர்த்து வைத்திருக்கும் க்ளோரோஃபில்லை தானமாகத் தந்து உங்கள் குதிகால் வழியே உடலுக்குச் சேர்த்து ஆரோக்கியம் கூட்டும். அந்தச் சூழல், நாசி நிறைக்கும் பசுமை மணம் உங்கள் மனம் மயக்கும். அப்படி ஒரு அனுபவம் கிடைத்தது எனக்கு சமீபத்தில்.

பொங்கல் திருநாளைக் கொண்டாட கிராமத்திற்குப் போயிருந்த நான், மாலைவேளை நடந்து ஊருக்கு வெளியே இருக்கும் எங்கள் வயலுக்குப் போனேன். மாலைச் சூரியனின் மஞ்சள் கதிர்கள், அறிவுடை சான்றோர்களைப் போல தலை குனிந்து பணிவாய் நிற்கும் விளைந்த நெற்கதிர்கள், விருந்தினராய் வந்திருந்த வெள்ளை வெளேர் கொக்குக் கூட்டம், விருந்தினர்களுக்கு விருந்தாகப் போவது தெரியாமல் கொடுக்கை தூக்கிவைத்துக் கொண்டு அங்கும் இங்கும் ஓடும் குட்டி நண்டுகள், நீண்ட நீலவானம், நெல் வாசம், தூரத்துப் பறவைகளின் கீதம், அருகில் இருக்கும் வாய்க்காலில் இருந்து வரும் ஒரு தவளையின் சத்தம் என எல்லாமும் சேர்ந்து ஒரு மனம் மயக்கும் சூழல் அது. வைரமுத்து தனது முதல் பாடலில் எழுதுயிருப்பாரே ‘இது ஒரு பொன் மாலைப் பொழுது…’., அப்படி ஒரு பொன்மாலைப் பொழுதெனக்கு. அந்தச் சூழலில் மனம் மயங்கிக் கிறங்கிப் போனேன் நான். (உங்கள் வயலில் மீன்கள் இருந்தால் – ஓங்கு பெரும் செந்நெல் ஊடு கயலுகள என்னும் ஆண்டாள் வரிகளையும், கரையேறி மீன் விளையாடும் காவிரி நாடு என்னும் கண்ணதாசன் வரிகளையும் கவனிக்கவும்.)

என் கைப்பேசி சிணுங்கியது. ஒரு பன்னாட்டு நிறுவனத்தின் உயர் பொறுப்பிலிருக்கும் உயிர் நண்பன் அழைத்திருந்தான். எடுத்துப் பேசி, கொஞ்ச நேரம் கழித்துக் கூப்பிடுவதாய் சொல்லி ஃபோன் காலைக் கட் செய்த பின்னும், அவனது கதறல் இன்னும் காதுகளில் ஒலித்தது. “பரமன், என்னால முடியலடா, ஒரே பாலிடிக்ஸ் மச்சி. இங்க வளரவே விடமாட்டேங்கறாங்க. எல்லாப் பக்கமும் தடை போடறாங்க. ஒண்ணும் செய்ய முடியல. சீனியர்ஸ் நெருக்கடித் தராங்க. இப்படி அப்படி நகர முடியல. ஒரு பக்கம் ரிசைன் பண்ணிட்டு, ’போங்கடா போக்கத்தப் பசங்களா…’ன்னு சொல்லிட்டுப் போயிடலாமான்னு தோணுது. இன்னொரு பக்கம், ஃபெயிலியரா பயந்து ஓடக்கூடாதுன்னு தோணுது. என்னால முடியல மச்சி…!” என்று வெட்கம் விட்டு பெருங்குரலெடுத்து அவன் அழுதபடியே சொன்னது இன்னும் ஒலிக்கிறது என்னுள்ளே. கைப்பேசியை ஒரு பக்கம் வைத்துவிட்டு அப்படியே வரப்பில் சாய்ந்து வானத்தில் லயித்தேன்.

அப்போது அது நடந்தது. என் வாழ்வில் நான் எதிரே பார்க்காத, இப்போது நினைத்தாலும் என் அடிவயிற்றில் அமிலம் சுரக்க வைக்கும் அந்த நிகழ்வு நடந்தது.infini Jan 14 wrapper.jpg

‘ஹாய்…. ‘

யாரோ என்னை அழைத்தார்கள். மிக அழுத்தமான ஒரு குரல். அதிர்ந்துபோய் எழுந்து பார்த்தேன். என்னைத் தவிர வேறு யாருமில்லை அங்கே.

‘ஏதோ கற்பனை!’ என்று சொல்லித் திரும்பவும் சாய்ந்தேன். திரும்பவும் வந்தது அதே குரல், இன்னும் வலிமையாய் ‘ ஹாய்… !’

அலறியடித்து எழுந்தேன். தூரத்தில் ஒற்றைக் காலில் நிற்கும் சில கொக்குகளையும், என் அருகே ஓடிக் கொண்டிருக்கும் ஒரு குட்டி நண்டையும் தவிர வேறு யாருமே இல்லை அங்கே. “விட்டலாச்சாரியார் படத்தில் வர்றது மாதிரி அந்த ஒத்தக் கால்ல நிக்கற கொக்குதான் பேசியிருக்குமோ, நல்லா இங்கிலீஷ் படிச்ச ஒரு ஃபிகரா இருந்து, யாரவது சாபம் வுட்டு இப்படி கொக்கா மாறி இங்க வந்து நிக்குதோ!” என்றெல்லாம் யோசித்து நாலாபுறமும் தேடினேன். அப்போது மறுபடியும் அந்த உலோகக் குரல் கேட்டது.

“ஹாய்… மேல… மேல… மேல பாரு!” என்று குரல் வர, மேலே பார்த்தேன். ‘அய்யோஓஒ !’ என்று கத்திவிட்டேன். அங்கே… அங்கே…

வயல் வெளிக்கு மேல் வானவெளியில் ஒரு இயந்திரம் இறங்கி அந்தரத்தில் அப்படியே நின்றது. உறைந்து போய் நின்றிருந்த என்னை உலுக்கி விட்டது அந்தக் குரல், “ ஹாய்… ஐ ஆம் மங்கல்யான், த மார்ஸ் ஆர்பிட்டர்…”

எந்திரன் படத்தில் வரும் சிட்டி ரோபோ ரஜினி போல பேசியது அது. ஆடிப்போய் அப்படியே வாய் பிளந்து நின்றேன் நான். நான் ஏதும் பேசாதது கண்டு இயந்திரமே மறுபடியும் பேசியது, “ஓ.. தமிழா… நான் மங்கல்யான், செவ்வாய்கிரகம் போகும் விண்கலம்…”

“ஓ… ஐயோ… செவ்வாய் கிரகத்துக்குப் போகும் விண்கலம்! ஸ்ரீஹரிக்கோட்டா, சதீஷ் தவான் ஸ்பேஸ் சென்டர்லேருந்து அனுப்சாங்களே!”

“ஆமாம்”

“ஐய்ய்யோ… சூப்பர். நாங்கல்லாம் ரொம்பப் பெருமைப்பட்டுக் கொண்டாடினோமே!”

“ம்ம்ம்.. நிச்சயமாய், நீங்களெல்லாம் பெருமைப்படவேண்டும். அமெரிக்கா, ரஷ்யா, ஐரோப்பிய யூனியனைத் தொடர்ந்து செவ்வாய்க்கு கிரகத்துக்கு விண்கலத்தை ஏவியிருக்கும் நாலாவது தேசம் நமது தேசம்தான் என்பதில் நம் எல்லோருக்கும் ரொம்பப் பெருமை. சரி. விஷயம் தெரிந்தவர்களும், பத்திரிகை ஊடகங்களும், விஞ்ஞானிகளும் இதை ஒரு பெரிய சாதனையாக் கொண்டாடுகிறார்களே, ஏன் தெரியுமா?”

“ம்ம்ம்.. நியூஸ்பேப்பர்ல படிச்சேன், இந்திய விஞ்ஞானிகள் வெறும் 450கோடி ரூபாயில் இப்படி ஒரு பெரிய திட்டத்தை முடிச்சிருக்காங்க. இப்படி ஒரு திட்டத்தை முடிக்க வெறும் 450கோடி பத்தாது. வளர்ந்த நாடுகளால கொட்டிக் குடுக்க முடியும்.  இந்தியா மாதிரி இருக்கும் ஒரு நாட்டில், இது பெரிய தொகை. இவ்வளோ குறைவான பணத்தை வச்சி இப்படி ஒரு திட்டத்தை செயல் படுத்தியிருக்காங்க, அது மிகப்பெரிய சாதனைன்னு மற்ற நாட்ல இருக்கிற விண்வெளி மையங்களே கூடப் பாரட்டித்தள்றாங்க.“

“கரெக்ட். கிடைத்த குறைந்த அளவு பணத்தை வைத்து, பெரிய சாதனை புரிந்திருக்கிரார்கள் இந்திய விஞ்ஞானிகள். உலக விண்வெளி வரலாற்றில், இந்தியாவின் பெயரை செவ்வாய்க்கு விண்கலம் அனுப்பிய நாலாவது தேசம் என்று மிக அழுத்தமாக பொறித்து விட்டார்கள் நம் விஞ்ஞானிகள். சரி, விஷயத்திற்கு வருகிறேன். இந்த வெற்றி, சாதனை எல்லாம் எதனால் வந்தது தெரியுமா? “

“இந்திய விஞ்ஞானிகளால்! கே.ராதாகிருஷ்ணன் வழிகாட்டுதலில், சுப்பையா அருணன், மயில்சாமி அண்ணாதுரை மற்றும் அவர்களது குழுவைச் சேர்ந்த ஒவ்வொரு விஞ்ஞானியின் வேர்வையால், அவர்களது பகலிரவு பாராத உழைப்பால், இந்திய மக்களின் ஆதரவால்…”

“கரெக்ட். இந்திய விஞ்ஞானிகளின் வேர்வையால், இந்திய மக்களின் ஆதரவால்.. சரி. இவையெல்லாமே இன்று நிஜமாய் ஆக ஒரு ஆதி காரணம் இருக்கிறது தெரியுமா? வரலாற்றின் பக்கங்களில் இருக்கிறது.”

“சந்த்ராயனின் வெற்றி?”

“ம்… இன்னும் முன்னே.. முதல் மூலக் காரணம்?”

“தெரியவில்லை. சொல்லேன்!”

“சொல்கிறேன். உன் பெயர் என்ன சொன்னாய் நண்பா?”

“பரமன்!”

“ம்ம்ம். சொல்கிறேன் பரமன். 1974இல் அன்றைய இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி தந்த ஊக்கத்தால் முதலாவது ‘பொக்ரான்’ அணு சோதனையை நடத்தியது இந்தியா. வெற்றிகரமாய் நடந்த அந்த சோதனை, உலக அரங்கில் ஒரு பெரும் புயலைக் கிளைப்பியது. அதைத் தொடர்ந்து, அமெரிக்க, ஐரோப்பிய நாடுகள் நம் மீது தடையை விதித்தனர். விண்வெளி வளர்ச்சி காண விரும்பிய இந்தியாவிற்கு அது ஒரு பேரிடி ”

“ஓ மை காட், ஓ மை இண்டியா!“

“அன்றைய நிலையில், இந்தியா போன்ற தேசங்களுக்கு விண்வெளி தொழில் நுட்பங்கள் பற்றி ஏதும் பெரிதாய் தெரிந்திருக்கவில்லை. மற்ற நாடுகளின் உதவியிருந்தால் மட்டுமே வளரமுடியும் என்ற நிலை. ஆனால், இந்தியாவின் வளர்ச்சி, அன்று சில தேசங்களின் வயிற்றில் புளியைக் கரைத்தது. பயங்கொள்ளச் செய்தது அல்லது வயிற்றெரிச்சல் வரச் செய்தது. அதனால் போட்டார்கள் இந்தியா மீது ஒரு தடை. தொழில் நுட்பமும் தரமாட்டோம், தெரிந்தையும் சொல்லித் தரமாட்டோம் என்று, இப்படி அப்படி நகர முடியா சூழலை தந்தார்கள். அன்றிலிருந்து இன்று வரை தொழில் நுட்ப உதவியளிக்க மறுத்து வருகின்றார்கள். இந்திய விஞ்ஞானிகள் இந்தத் தடையைத் தகர்த்து உழைத்தார்கள். அவர்கள் போட்ட தடாவை, போடா என்று பொடி செய்து வென்றார்கள். இன்று நெஞ்சை நிமிர்த்தி பெருமையாய் சொல்லலாம் நாம், “ முழுக்க முழுக்க நமது உள்நாட்டுத் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி நாமே தயாரித்திருக்கும் விண்கலம் இது. குறைந்த செலவில் பெரிய சாதனை!” என்று. இந்தியா உலக அரங்கில் தலை நிமிர்ந்த நிற்கிறது.”

“ஆமாம்… எங்கள் பாரத தேசமென்று தோள் தட்டுவோம்…”

“அப்படி ஒரு தடை இந்தியா மீது விதிக்கப்படவில்லை, அப்படி ஒரு சர்வதேச அரசியல் நெருக்கடி இல்லாதிருந்தால், தொழில் நுட்பங்கங்கள் பகிர்ந்து கொள்ளப்பட்டிருந்தால், இந்த ‘வெறும் 450 கோடியில், முழுக்க முழுக்க நமது தொழில் நுட்பத்தில் நாமே தயாரித்த விண்கலம்’ என்ற பெரும் வளர்ச்சி கிட்டியிருக்காது. இன்று மற்ற தேசத்து விண்வெளி மையங்கள் வியந்து பார்க்குமளவிற்கு விண்வெளி அரங்கில் நாம் உயர்ந்து நிற்கும் இந்தச் சாதனை நடந்தேறியிருக்காது. ‘இவ்வளவுதான் இருக்கு, எல்லாப் பக்கமும் தடை. யார் உதவியும் இல்லை. வேற வழியும் இல்லை. இருப்பதை வைத்துதான் வளர்ந்தாகவேண்டும்,” என்ற அந்தச் சூழல், அந்தச் சூழலிலும் தளராமல் முன்னேறி மேலே வரவேண்டும் என்று முடிவு செய்த நம் விஞ்ஞானிகள், அவர்களது உழைப்பு, இவைதான் முதல் மூலக் காரணங்கள். வளரவேண்டும் என்று முடிவு செய்துவிட்டால், எந்தத் தடையாலும், எவராலும் வளர்ச்சியைத் தடுக்க முடியாது. ‘இருக்கும் இந்தச் சூழலில் இன்னும் வளர்வதெப்படி?’ என்று சிந்திக்க வைத்து அவர்களை இன்னும் வளர்க்கும் தடை. இந்தியாவின் இந்த வளர்சிக்குக் காரணமே அந்தத் தடைதான். புரிந்துகொள் நண்பா, புரியாதவர்களுக்கு தடை ஒரு முடை. புரிந்தவர்களுக்கு அது அவர்கள் ஏறப்போகும் சாதனை மேடை.

எந்தத் தடை இருந்தாலும் வளரவேண்டும் என்று முடிவு செய்தால், அண்ணாந்து பார்க்குமளவிற்கு வளரலாம். வானில் பறக்கலாம். வானமே எல்லை. அதற்கு நானே சாட்சி. சரி நண்பா நான் இன்னும் 3௦௦ நாட்கள் பயணித்து செவ்வாய் கிரகத்தை அடையவேண்டும். நீயும், நானும் அவரவர் வட்டத்தில் (ஆர்பிட்) பயணித்து சாதனைகளை குவிப்போம். வாழ்த்துக்கள். வருகிறேன். வணக்கம்.”

‘வணக்கம்’.

விர்ரென்று பறந்து வானவீதியில் மறைந்து போனது மங்கல்யான். திடுக்கிட்டு கண்விழித்தேன். நெற்கதிர்கள் காற்றிலாடிக்கொண்டிருந்தன. ஒரு குட்டி நண்டு என் கைப்பேசிக்கு அருகில் நின்று கொடுக்கைத் தூக்கி நின்று கொண்டிருந்தது,

நான், என் கைப்பேசியை எடுத்தேன். என் நண்பனுக்கு கால் பண்ணவேண்டும்.

“வளரவேண்டும் என்று முடிவு செய்து விட்டால், எந்தத் தடையாலும் வளர்ச்சியைத்தடுக்க முடியாது. எந்தத் தடை இருந்தாலும், வளரவேண்டும் என்று முடிவு செய்தால், அண்ணாந்து பார்க்குமளவிற்கு வளரலாம். வானில் பறக்கலாம். வானமே எல்லை.” இந்த வார்த்தைகள் உள்ளே ஓடிக்கொண்டே இருந்தன என்னுள்.

– பரமன் பச்சைமுத்து

நன்றி: இன்ஃபினி இதழ்

1 Comment

  1. Pandiyan Natarajan

    வளரவேண்டும் என்று முடிவு செய்து விட்டால், எந்தத் தடையாலும் வளர்ச்சியைத்தடுக்க முடியாது. This line is amazing…

    Reply

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *