சாமானியப் பதிவுகள்: எப்படி பத்து மணிக்கு உங்களால் தூங்க முடிகிறது, தூக்கம் வருகிறது?

basheer


wp-image-401722906.jpg

‘ஒழுங்காப் படிச்சு, ஒரு நல்ல வேலைக்கு போயிட்டா உருப்படலாம்!’ என்பது பொதுவிதியாகப் போனது இன்று. படித்து பட்டம் பெற்றால்தான் பெருநிறுவனங்களில் வேலை பெற முடியும் நிறைய சம்பாதிக்க முடியும் என்ற நிலையிருக்கும் இந்நாளில் பெரு நிருவனங்களும், படித்து பட்டம் பெற்று ஆராய்ச்சி மேற்கொள்பவர்களும் படிக்காத சாமானிய மனிதர் ஒருவரிடம் வந்து ‘வியாபாரம் செய்யும் விவரம் என்ன?’ என்று நின்றால் எப்படி இருக்கும்!

நிப்பான் பெயின்ட் இந்தியாவில் நுழைவதற்கு இவரைத்தான் முதலில் தேர்ந்தெடுத்தது, பிறகே கேரளத்திற்குள்ளும் மற்ற இடங்களிலும் பரவியது.  தான் உண்டு தனது வேலை உண்டு என்று கடமையைச் செய்து கொண்டு இருக்கும் சாமானிய மனிதர் அவர்.

சென்னையின் ப்ராடுவேயில் மண்ணடியில் உள்ள ‘இந்தோ பர்மா ஹார்டுவேர்ஸ்’ உரிமையாளரான அஹ்மது பஷீர்  என்ற அந்த அறுபத்தியாறு வயது அசாத்திய மனிதரை ‘வளர்ச்சி’ சுய முன்னேற்ற இதழ் வாசகர்களுக்காக நாம் கொண்ட சந்திப்பு:

கேள்வி: எப்படி வந்தீங்க இந்த தொழிலுக்கு?

பதில்: ராமநாதபுரம் மாவட்டதில இருக்கற முதுகளத்தூர் எங்க ஊரு. சின்ன வயசிலேயே அத்தா (‘அப்பா’) கடைக்கு கூட்டிட்டு வந்துட்டாங்க. அதனால படிக்கவும் இல்லை. கடைதான் எல்லாம்.

கேள்வி: இதுல பிடிச்சது என்ன?

பதில்: எல்லாம்தான். மக்களுக்கு சேவை செய்யறோமே. இத வியாபாரம்ன்னு மட்டுமா பாக்கறீங்க, சேவை. தேவையானதை கொடுக்கறோம், உதவறோம். நல்ல தரமான பொருளை தரோம்.

ஆதாயம் கடவுள் கொடுப்பாரு.

தெனம் தெனம் மக்களை பாக்கறோம், பழகுறோம், நெறைய கத்துக்கறோம். பல வருஷமா இத செய்யறோம். அது புடிக்கும்.

வியாபாரம் செய்ய பிடிக்கும். நேத்து துபாய்ல இருந்தேன். ராத்திரி முழுக்க விமானத்துல இருந்தோம். தூங்கல. காலைல வந்ததும் கடைக்கு வந்துட்டமே. தூங்கி ஓய்வு எல்லாம் வேண்டியதில்லை. கடை பிடிக்கும். வியாபாரம் பிடிக்கும்.

கேள்வி: உங்க அப்பா உங்கள இந்தத் துறைக்குள்ள கூட்டிட்டு வந்தாரு. அப்படியே தொடர்ந்திட்டீங்க. இந்தக் கடையை எப்போ ஆரம்பிச்சீங்க?

பதில்: 1973.  சின்னதா தொடங்கினோம். அப்புறம் அந்த இடம் பத்தல, இங்க வந்தோம். அப்புறம் பக்கத்துக்கு இடம் எல்லாம் சேர்த்து ஒரே கடையா விரிவு படுத்தி இருக்கோம். 2400 சதுர அடி.

கேள்வி: சாதனைன்னு எதை சொல்லுவீங்க?

பதில்: வாடிக்கையாளர்களோட இருக்கோம். அப்போல்லாம் ஒரு நாளைக்கு ஆயிரம் ரூவாய்க்கு வித்தா பெரிய காசு அது. அந்த நிலையிலேருந்து வந்து சில நாள் கோடிகளைத் தொட்டிருக்கோம். பெயிண்ட்ல இந்தியாவில் நம்பர் ஒன் அப்படீன்னு சாதனை படைச்சிருக்கோம். அப்பேருந்து இப்பவரைக்கும் வாடிக்கையாளரை விட்டுக்கொடுத்தது இல்லை. கூட இருப்போம்.

கேள்வி: உங்களுக்கு கஷ்டம் என்ன?

பதில்: அதெல்லாம் ஒண்ணும் கெடையாது. அதத அப்பப்ப பார்த்துட்டு போக வேண்டியதுதான், நேத்து இரவு விமானத்தில வந்தேன். தூங்கல. இதோ கடைக்கு வந்து வியாபரத்துல ஒக்காந்தாச்சி. இத கஷ்டம்ன்னு பார்த்தா கஷ்டம்.

கேள்வி: கடினம் என்பது எப்படிப் பார்க்கிறோம் என்பதைப் பொறுத்து இருக்கிறது. சரி. இப்படிக் கேட்கிறேன், நீங்கள் கடந்து வந்த கடினமான தருணங்கள்?

பதில்: அப்போ கடை அங்க இருந்தது.  ராத்திரி வியாபரத்த முடிச்சிட்டு கடையை கட்டிட்டு கையில பையோட வர்றேன். இருட்டுல ரெண்டு பேரு நிக்கறாங்க. மாடியிலேருந்து இறங்கி வர்றேன், திடீர்னு கத்தியைக் காட்டி பணத்தை புடுங்க பாக்கறாங்க. அவங்க முன்னால வர்றாங்க. பாத்துகிட்டே பின்னால நகர்றேன். தளம் முடிஞ்ச இடம் அது. அப்படியே தவறி மாடியிலேருந்து கீழே தரையில விழறேன். சரியான அடி. அடி பட்டு காது அறுந்து போச்சி. கீழே இருந்த ஒருத்தர் நிலைமையை உணர்ந்து பணப்பையை கொண்டு போயி பாதுகாப்பா உள்ள வச்சிட்டு வந்து என்னைக் காப்பாத்த வந்தார். அடி முதுகில சரியான அடி. தண்டுவடம் பாதிக்கப் பட்டு நகரமுடியாம கெடந்தேன். படுக்கையிலேயே கெடந்தேன். இனி முடியாது அப்படீங்கற நிலை. எட்டு ஒன்பது மாசங்கள் ஆச்சு. எழுந்து வந்தாச்சே! கடினமான நேரம்தான். கடினமான நேரமா அன்னைக்குத் தெரிஞ்சது. இப்ப இல்லை. போயிட்டே இருக்க வேண்டியிருக்கு இல்ல!.

(கல் போன்று இருந்த மனிதர் பேசிக்கொண்டிருக்கும் போதே திடீரென்று கண்கலங்கி தேம்புகிறார்)

என் பையன் இறந்து போயிட்டான். கல்யாணம் பண்ணி ஒரு ஆம்புளப் பையனையும் பெத்து நல்லாதான் இருந்தான். உடல் நிலை சரியிலாமல் இறந்து போயிட்டான். அத விட்டு இன்னும் வெளிய வரமுடியல என்னால.  இறைவன் குடுத்தான், இறைவனே கூட்டுக்கிட்டான்.

கேள்வி: எப்ப எழுவீங்க? எப்ப தூங்குவீங்க?

பதில்: காலை நாலு மணிக்கு எழுந்துவிடுவேன். எழுந்த உடனே தொழுதுடுவன்.

கேள்வி: முதல் தொழுகை அதிகாலை ஐந்தரை வாக்கில்தானே வரும்?

பதில்: ஆமாம். அது பள்ளிவாசல்ல போயி தொழறது. நான் எழுந்தவுடனே அவனைத் தொழுதிடுவேன். நல்லதில்லையா!

கேள்வி: ஐந்து வேளை தொழுவதை செய்யறீங்களா?

பதில்: ஆமாம்.  நமக்கு கொடுப்பினை பாருங்க. கடை பக்கத்திலேயே பள்ளி வாசல் இருக்கு. அப்படியே போயி கலந்துக்குவேன்.

கேள்வி: எப்ப தூங்கப் போவீங்க?

பதில்: இரவு ஒன்பது வரை கடையில் இருப்பேன். பத்து மணிக்கு தூங்கிடுவேன்.

கேள்வி: உங்க மனைவி?

பதில்: அவங்களாலதான் இப்படி ஒரு வாழ்க்கை. எங்க ஊர் பக்கம்தான் அவங்களும். நிறைய எனக்காக உழைச்சவங்க. நிறைய உதவி செய்வாங்க. கொடுப்பினை.

கேள்வி: உங்க ஆசை என்ன?

பதில்: கடனே இல்லாம ஹஜ்க்கு போயிட்டு வரணும். ஏற்கனவே போயிருக்கேன். கடனே இல்லாமா போயிட்டு வரணும். உம்ரா போயிட்டு வரணும்.

கேள்வி: ஹஜ் போயிட்டே இருக்கலாமா?

பதில்: அடுத்தவங்களுக்கு வாய்ப்பு குடுக்கணும் இல்ல! உம்ரா போயிட்டு வரலாம்.

கேள்வி: உங்க இறை நம்பிக்கை பற்றி சொல்லுங்க.

பதில்: எந்த பொருளுக்கும் சக்தியில்லை.  இறைவன் மிகப் பெரியவன். அவன்தான் ஆதாயம் கொடுப்பான்.

கேள்வி: அவன்தான் முடிவு செய்யறான், அவன்தான் கொடுப்பான் என்றால்,  அப்போ வேலை செய்ய வேண்டாமா?

பதில்: வேலை செய்தால் கொடுப்பான்.

கேள்வி: ஐந்து வேளை தொழுகை, இறையச்சம், ஹஜ், உம்ரா ஆசை என இஸ்லாத்தின் வழியில் பயணிக்கும் நீங்கள், ஜக்காத் என்னும் ஏழை வரி கொடுக்கறீங்களா? ( இல்லாத ஏழைகளுக்கு வருமானத்திலிருந்து இரண்டு சதவீதம் எடுத்து கொடுப்பது)

பதில்: கொடுக்கறோம். கணக்குப் பாத்து சரியா கொடுக்கறதில்லை. ஜக்காத் சரியா கொடுக்காததால்தான் இவ்வளோ பிரச்சினைகள். ஒழுங்கா கொடுத்தா பிரச்சினை வராது.

கேள்வி: நீங்கள் செய்த தவறு? இதை செய்திருக்க வேண்டாம் என எண்ணுவது?

பதில்: இந்த கடைய வாங்கினது. வாங்காம இருந்திருக்கலாம்.

கேள்வி: புரியல. இந்து உங்கக் கடைதானே!

பதில்: இடம். கடையோட இந்த இடம். இந்த இடத்தை வாங்கியிருக்க வேண்டாம். பல வருஷமா இங்க வாடகைக்கு இருந்தோம். எடத்துக்காரங்க இந்த எடத்த விக்கப் போறோம், நீங்க வாங்கிக்கீங்க அல்லது வெளிய குடுத்துருவோம்னாங்க. பெரிய கடன வாங்கி இந்த இடத்தை வாங்கிட்டோம். இடம் இப்ப சொந்தம். ஆனா மாசாமாசம் வட்டி ரொம்ப அதிகம் கட்ட வேண்டியிருக்கு.

நம்ம கடைக்குன்னு ஒரு பெயர் இருக்கு, வாடிக்கையாளர்கள் இருக்காங்க. இந்த எடம் இல்லைன்னா பக்கத்துல ஒரு எடம் பாத்து வச்சிருந்தாலும் கடை நல்லாத்தான் போகும். வியாபாரம் நல்லா இருக்கும். அவசரப்பட்டுட்டேன். வாடகை கூட கொடுத்து வேற எடத்தில இருந்திருக்கலாம். இப்ப நிறைய வட்டிக் கட்டவேண்டியிருக்கிறது. அது பெரிய தவறு, செய்திருக்க வேண்டாம்.

கேள்வி: அப்போ நீங்க மட்டும்தான் இருந்தீங்க. இன்னைக்கு நெறைய கடைங்க வந்தாச்சு. தொழில் போட்டி பத்தி?

பதில்: அச்சப்படலை. அச்சம் தேவையில்லை. இறங்கி வேலை செஞ்சா மேல வரலாம்.

கேள்வி: ஜிஎஸ்டி மாதிரியான புதிய திருந்தங்கள் உங்களை பாதிக்காதா?

பதில்: நல்லதுதானே. ஒழுக்கமா இருக்கலாம். ஒழுக்கம் இருந்தால் மேல வரலாம். நான் என் புள்ளைய ஒழுக்கமா வளக்கறேன்னு வையுங்க. அந்த ஒழுக்கம் அவன தடம் புரள விடாது. ஒழுக்கம் இருந்தாலே பின்னால பெரிய வளர்ச்சிதான!

கேள்வி: ‘வட்டி கட்டாம கடன் இல்லாம ஹஜ்க்கு’ என்று சொல்லும் அளவிற்கு இந்த வட்டி கட்டும் விஷயம் உங்களுக்கு உள்ளே பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது, இது தவிர தினசரி வியாபார சுமையும் உங்களை அழுத்துமே.  எப்படி பத்து மணிக்கு உங்களால் தூங்க முடிகிறது, தூக்கம் வருகிறது?

பதில்: கடைய கடையோட விட்டுடுவேன். வீட்டுக்கு எடுத்திட்டு போக மாட்டேன். கடைப் பிரச்சினையை நாளைக்குப் பாத்துக்கலாம்ன்னு போய்டுவேன். படுத்த ஒடனே தூக்கம் வரும்.

கேள்வி: இப்படி ஒரு கடைய இப்படி நிர்வாகம் பண்ற நீங்க படிக்கல. அத பத்தி வருத்தப்பட்டிருக்கீங்களா? ஒரு வேளை படித்திருந்தால்?

பதில்: வீணாப் போயிருப்பேன். தைரியமா நின்னுருக்க மாட்டேன். மக்களை நம்பியிருக்க மாட்டேன். நிறைய படிச்சவங்க நெறைய கணக்குல்லாம் போடுவாங்க. அடுத்தவங்கள நம்ப மாட்டாங்க.

எம்பிஏ படிச்சவங்கல்லாம் இங்க வந்து நின்னு ‘சொல்லுங்கன்னு’ கேட்டு கத்துகிட்டு போறாங்க.

யாருக்கும் பெரிய கடன் குடுக்கறதே இல்லை. காசு குடுத்திட்டு வாங்கிக்கோ. இப்படிதான்னு நிக்க முடியுது.

இந்தியாவிலயே மொதல் மொதல்ல நிப்பான் பெயிண்ட்டு அறிமுகம் செஞ்சது நம்ம கடையிலதான். அப்புறம்தான் கேரளாவில. ஆனா, எவ்வளவோ பெரிய கம்பனிகாரங்க வந்தாலும் ஓரமா நிக்கவச்சி என்னன்னு கேக்கமுடியும். மனிதனுக்கு மரியாதைங்கறது வேற. தேவையில்லாம கொழஞ்சி நிக்கறது வேற. இந்த தைரியம் படிச்சிருந்தா இருக்காது.   

 #வளர்ச்சி சுய முன்னேற்ற இதழ்

    பரமன் பச்சைமுத்து

 சென்னை

  23.08.2017

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *