வைரமுத்துவிற்கு மதிப்பு கூட்டித் தந்த மதன் கார்க்கி…

கவிப்பேரரசு வைரமுத்துவின் தமிழ் மேல் மரியாதையும், கொடுக்கப் பட்ட தலைப்பிற்கு எப்போதும் அவர் மதிப்பு கூட்டுவார் என்பதில் நம்பிக்கையும் உண்டெனக்கு.

தி இந்து நாளிதழின் ‘யாதும் தமிழே’ தலைப்பிலிருந்து அரங்கு அதிர ‘தமிழே யாதும்’ என்று மாற்றி உரைத்ததில், நவோதயாப் பள்ளிகள் வந்தால் இருமொழிக் கொள்கையோடு வரட்டும் என்று முழங்கியதில், பாணன் – பாடிணி பற்றிய சங்கக் கவிதை விளக்கித் தமிழின் சுவை சொன்னதில் என பல இடங்களில் அசல் வைரமுத்து அசரடித்தார். அடுத்த தலைமுறை இளைய கவிஞர்களின் கவிதைகளைச் சொல்லி சிலாகித்த இடத்தில் புதிய வைரமுத்து தெரிந்தார்.

இதையெல்லாம் தாண்டி வைரமுத்து மீது ஒரு புதிய மரியாதை வளர்ந்தது வேறொரு விஷயத்தில்.

பாடல்கள், வசனம், காளகேயப் பாஷையை கண்டுபிடித்தவர் என்றே தெரிந்த மதன் கார்க்கியின் நிஜ முகம் நம்மை நிமிர வைத்தது. அவர் செய்து்ள்ள வேலைகளைக் கண்டு அதிசயித்துப் போனேன். ‘பய புள்ள எவ்ளோ வேலை செஞ்சிருக்கு!’ என்று எழுந்து நின்று கைதட்டத் துடித்தேன்.

‘தமிழ் மேல் கொண்ட காதலால் அண்ணாப் பல்கலைக் கழகத்தில் இருந்த ஊழியத்தை துறந்துவிட்டு ஆராய்ச்சியில் இறங்கினோம்’ என்று சொல்வதெளிது. தமிழ்ச் சொற்களையும் ஒலியியலையும் அடிப்படையாக வைத்துக் கொண்டு ஒன்பது் லட்சம் பெயர்களைத் தரும் ஆற்றல் கொண்ட ‘பேரி’ செயலி, சொற்களை வரிகளை தமிழ் – ஆங்கில ஒலி பெயர்த்துதவும் ‘ஒலிங்கோ’ செயலி, தமிழ்ச்சொற்களுக்கு எதுகை மோனை இயைபைக் கண்டறிய உதவும் ‘எமோனி’ செயலி, எண்களை அவற்றுக்கு நிகரான தமிழ்ச்சொல்லில் தரும் ‘எண்’ செயலி, சொல் – பொருள் – வரிசை கொண்டு அவற்றிக்கு நிகரான குறளைக் கண்டறிந்து எடுத்துப் போடும் ‘குறள்’ செயலி, குழந்தைகள் தமிழ்ச் சொற்கள் கண்டறிந்து விளையாட ‘ஆடுகளம்’ செயலி என இத்தனை செயலிகளை உருவாக்கி அவற்றை பொதுவெளியில் எவரும் தரவிறக்கம் செய்து கொள்ளலாம், ஆப்பிள் வாட்ச்சில் கூட வைக்கலாம் என்று உலகிற்கு அளித்தது எளிதல்ல. உழைப்பு. அர்ப்பணிப்பு. திருக்குறளை எடுத்து நேரடியாக அதை பத்து மொழிகளில் படிக்கலாம் என்று செயலியில் காட்டியது முத்தாய்ப்பு.

கார்க்கி பவுண்டேஷன் தமிழாராய்ச்சிக் கட்டுரைகள் உலக மாநாடுகளில் சமர்ப்பிக்கப் பட்டுள்ளன, உலகக் குழந்தைகள் தமிழ் கற்கும் பாடத் திட்டங்கள் உருவாகின்றன என்பதையெல்லாம் பார்த்த போது தமிழ் நிச்சயம் படர்ந்து வளரும் என்று பரவசம் வந்தது பலருக்கு. மொழிக்கலப்பில்லாமல் தமிழிலேயே அவ்வளவு நேரம் சரளமாக அளவளாவிய கார்க்கியின் பேச்சு சுகம்.

தமிழ் மேல் காதல்,
தமிழையும் கணிப்பொறியையும் ஒரு புள்ளியில் இணைக்க ஆசை என்று, தான் புறப்பட்ட காரணத்தைச் சொன்ன போது ‘பேச்சு குறைவு பாய்ச்சல் அதிகம்!’ கொண்ட மதன் கார்க்கி மீது மரியாதை வந்தது.

அதிக புகழ் வெளிச்சம் கொண்ட ஆளுமைகளின் வீட்டில் வளரும் பிள்ளைகள் பெரும்பாலும் சோடை போய் நிற்பதே உலகில் அதிகம் காணக் கிடைப்பது. மதன் கார்க்கி ‘கார்க்கி பவுண்டேஷன்’ நண்பர்கள் மூலம், பதினாறு அடி பாய்ந்து விட்டார்.

தனக்கு கிடைத்த தமிழை தன் மகனுக்கும் ஊற்றி வளர்த்துவிட்டார் என்பதால் வைரமுத்து மீது ஒரு புது மரியாதை வந்தது.

பரமன் பச்சைமுத்து
19.09.2017

Www.ParamanIn.com

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *