‘ த ஷேப் ஆஃப் வாட்டர்’ – அன்பின் வழியது ‘உயிர் நிலை’ – திரை விமர்சனம் : பரமன் பச்சைமுத்து

shape of water - Copy

shape of water

அவள் (வாய்) பேசா மடந்தை. எவ்வளவோ பேர் வாழும் இவ்வளவு பெரிய உலகில் தனியாகவே இருக்கிறாளவள். அமெரிக்கா – ரஷ்ய பனிப்போர் நிகழ்ந்து கொண்டிருந்த அந்தக்காலத்தில், ஒரு வார்த்தைக் கூட பேசாத எலிசா என்னும் அவள் எப்போதும் எதைப்பற்றியாவது தொணத்தொணவென்று பேசிக்கொண்டே இருக்கும் செல்டாவுடன்   அரசின் ரகசிய ஆய்வுக்கூடமொன்றில் சுத்தம் செய்பவளாக தன் வாழ்க்கையை ஓட்டுகிறாள்.

அலாரம் அடித்து எழுதல், வேகவைத்த முட்டை – கேரட் சமையல், வேலை என்றே ஓடிகொண்டிருக்கும் அவள் வாழ்வில் தென் அமெரிக்க அமேசான் நதியிலிருந்து பிடித்துக்கொண்டு வரப்பட்ட ‘மிருகம் பாதி மனிதன் பாதி கலந்து செய்த கலவை’யாய் ஓர் உயிரினம் வர நேரிடுகிறது. அவளது வாழ்வு மட்டுமில்ல, அவளைச் சுற்றியுள்ளோர் சிலரின் வாழ்வும் மாறிப்போகிறது. இது ‘சயின்ஸ் ஃபிக்ஷன்’னா, ‘ஃபேரி டேல்’லா, ‘ரோமான்ஸ்’ஸா, ‘த்ரில்லர்’ரா… என்று நீங்கள் கேட்டால் ‘ஆமாம், இது எல்லாமும்தான்!’ என்று சொல்ல வைக்கிறார் இயக்குனர்.

வாய் பேச முடியாத அவள் அந்த உயிரினத்தின் மீது கொண்டிருக்கும் அன்பை வெளிப்படுத்தும் அந்தக் காட்சியில், ஏன் தனக்கு ஈர்ப்பு வருகிறது என்று அவள் வெளிப்படுத்தும் அந்தக் காட்சியில் அசத்திவிடுகிறார் நடிகை.

அன்பென்பது, வார்த்தைகளின் இரைச்சல்கள் நிறைந்த மனங்களினால் அறியப்படுவதல்ல; அது கனத்த மௌனத்தின் வழியே உயிரின் மூலத்தில் கண்டறியப்படுவது. அது பால், திணை, கடந்து பொங்கிப் பெருகி உயிர்களை இணைப்பது என்பதை வலியுறுத்துகிறது படம். (‘அன்பின் வழியது //உயிர் நிலை//’ – வள்ளுவப் பேராசான்)

அருமையான படம். அதனால்தான் அத்தனை ஆஸ்கார் விருதுகளை அள்ளியிருக்கிறது படம். ‘பேர்ட் மேன்’ ‘ரெவெனன்ட்’ போல ஆஸ்கார் விருதுகள் வென்ற படங்கள் என்றால் தூங்க வைக்கும் படங்கள் என்று இல்லாமல், நல்ல படமாகவே இருக்கிறது.

வி டாக்கீஸ் வெர்டிக்ட்: ‘ த ஷேப் ஆஃப் வாட்டர்’ – அன்பின் ஊற்று நீர் – நிச்சயம் பார்க்கலாம்.

 

: திரை விமர்சனம் : பரமன் பச்சைமுத்து

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *