யாரைக் குற்றம் சொல்ல…

மன்னம்பந்தலில் கல்லூரி விடுதியின் பின்பக்க வேலி திறந்து நடந்தால் வாழைக் கொல்லை. வாழைக் கொல்லையை ஊடறுத்து கொஞ்சம் போனால் எப்போதும் நீரோடும் காவிரி. இப்படியொரு வழியிருக்கிறதென்று எனக்கு ‘கேட்டீ’தான் எனக்குக் காட்டினார்.

பெண்ணாடம் பழனிவேலு, இன்னும் சிலரோடு நாங்கள் காவிரிக்குள் பாய்ந்து ஊறித் திளைத்து மகிழ்வோம். நீச்சல் தெரியா நெய்வேலி ஜமுக்குப் பாண்டியன் ஆழமில்லா கரையோரம் ஜட்டியோடு உட்கார்ந்திருப்பான். மெக்கானிக்கல் பிரிவின் தங்கதுரை பிரின்ஸ்பாலிடம் இதைச் சொல்லி வைக்க (போட்டுக் கொடுத்தல்!) விஷயம் வெடித்தது, ஹாஸ்டல் ட்யூட்டருக்கு தலைவலி வந்தது.

பிரச்சினை வெடிக்க அடிக்கடி காவிரியில் குதிக்கிறார்கள் என்று கோபம் கொண்ட நிர்வாகம் ‘எதனா ஆச்சுன்னா, ஒங்கொப்பனுக்கு எவன் பதில் சொல்றது?’ என்ற வகையில் காட்டமான எச்சரிக்கையை நோட்டீஸ் போர்டில் ஒட்டியது. அதோடு காவிரிக் குளியல் முடிந்து போனதென்றாலும் கரையோடே நடந்து மகிழ்ந்து கரைந்து களித்தல் அடுத்த சில ஆண்டுகள் நடந்தன.

சில இடங்களில் சுழித்தும் சலசலத்தும் பல இடங்களில் அமைதியாகவும் ஓடும் காவிரியால்
மன்னம்பந்தலும், ஆறுபாதியும், செம்பனார் கோவிலும் எப்போதும் செழித்திருக்கும்.

எங்கள் ஊர்ப்பகுதியில் காவிரி தண்ணீரே வாழ்வாதாரமென்றாலும் காவிரி நேரடியாக ஓடுவதில்லை. கரிகாலன் திருப்பிய கொள்ளிடத்தில் கலந்து பயணித்து வெள்ளாற்றில் பிரிந்து வீராணத்தில் புகுந்து நிரம்பித் தஞ்சமடைந்து பின் திறக்கப்படும் போது மானம்பாத்தான் வாய்க்கால் வழியே எங்கள் நிலங்களையடைந்து, நெல் மணிகளில் செழித்து எங்கள் உடல்களில் உயிர் நிரம்பும் காவிரி. பொன்னி, பொன்மணி என்று முதல் போகம் நெல்லும் அதனறுவடைக்கு முன்னேயே ஊடாக விதைக்கப்படும் உளுந்தும் பச்சைப்பயிரும் என இரண்டு போகங்கள் மட்டுமே செய்ய முடியும் பொதுவாய். நிலத்தடி நீர் கொண்டும் இஞ்சின் வைத்து இறைக்க சக்தியும் உள்ள கருப்பு செட்டியார், பழமலை உடையார், கணபதி படையாச்சி, பாபு ஐயர் போன்றோர் தற்காலிக வேலியிட்டு அடுத்த போகம் எள் போடுவார்கள். எள்ளுத் தழையைப் பறித்து வந்து நீரில் கரைத்து வரும் கொழகொழ திரவத்தை தலையில் ஊற வைத்து ‘ஷாம்ப்பூ’ என்று மகிழக் கற்றுக் கொடுத்தாள் உமா அக்கா.

இரண்டு போக விளைச்சல்தானென்றாலும் செழிப்பாக விளைந்ததால் முறுக்கு மீசை மிடுக்கு பரமானந்தம் மாமா மயிலக்காளைகளை அடிக்கடி மாற்றிக் கொண்டிருப்பார். கொம்புகளுக்கு வண்ணம் பூசி கழுத்தில் மணிகள் கலகலக்க வைத்திருந்த மாடுகளுக்கு பதிலாக வேறொரு சோடி மாடுகள் நிற்கும் வீட்டின் பக்கத்தில். ‘போன சந்தையில மாட்டை மாத்திட்டேன் மாப்ள!’ என்பார். வண்டி, தார்க்குச்சி என எல்லாவற்றையும் வண்ண மயமாக வைத்திருப்பார்.

பழனிவேலு உடையாரும், பூராயர் படையாச்சியும் மாற்றி மாற்றி உழுதும் நாற்றடித்தும் அறுத்தும் உதவிக் கொள்வர்.

காய்ச்சார் மேட்டில் சரவணன் வீட்டு மாடியில் நெல்லைக் காய வைத்து, அங்கிருந்தே ஒரு துளையின் மூலம் வீட்டுக்குள் தள்ளி நிரப்புவார்கள். எல்லார் வீட்டுத் தொம்பையிலும் நெல்மணிகள் நிறைந்திருக்கும். அண்டிப் பிழைக்கும் நெல் வியாபாரிகளின் கை தாழ்ந்தே இருக்கும். அண்ணன்களும் சித்தப்பாக்களும் சைக்கிளில் அதிகம் பயணித்தார்கள், வலிமையாக பொலிவாக பெருஞ்செழிப்போடு இருந்தார்கள்.

உழவு ஓட்ட, நாற்று நட, களையெடுக்க, அறுப்புக்கு, நெல்லடிக்க, அப்புறம் உளுந்து புடுங்க, உளுந்து அடிக்க என ஆண்டு முழுதுக்கும் செய்ய சிவலிங்கம் வூட்டு அக்கா, மருதையன் வூட்டு அக்கா, நாய்க்கடிச்சான் மனைவி, திருவாம்பூராங்க, கனகாம்பரம் என பலரிருந்தனர்.

மழையை மட்டுமே நம்பி விவசாயம் என்ற நிலைக்குத் தள்ளப்பட்டு விட்டது எங்கள் பகுதி. தொடர்ந்த நல்ல விளைச்சலை எங்கள் ஊர் பார்த்து வெகு நாட்கள் ஆகி விட்டது. அப்படி இப்படி விளைந்தாலும் கொள்முதல் விலையும் உரம் மற்றும் மருந்து விலையும் கூலி கொடுப்பதும் முடிய வில்லை. ஒன்றும் மிஞ்சுவதில்லை. விளை நிலங்கள் விலை நிலங்கள் ஆகி வெகு காலமாயிற்று.

மன்னம்பந்தல், ஆறுபாதி, செம்பனார் கோவில் பகுதிகளில் நீர் ஓடிய மணல் பாதை மட்டுமே உள்ளதாம்.

பழனிவேலு உடையார் உயிரோடிருந்த காலத்திலேயே நிலங்களை விற்று விட்டார். பாபு ஐயர் எல்லா நிலங்களையும் விற்று விட்டு சென்னை திருமழிசைக்கு மகனோடு வந்து விட்டார். பழமலை உடையாரின் மகன் சென்னையில் டிரைவராக இருக்கிறான்.

செழிப்பாக இருந்த சித்தப்பாக்கள் நகரத்து துணிக் கடைகளிலும், நிறுவனங்களில் செக்யூரிட்டிகளாகவும், ஆயத்த ஆடை நிறுவன நிறுவனங்களிலும், மொபைல் சிம் விற்பவர்களாகவும், தனியார் நிறுவன வாகன ஓட்டுனர்களாகவும், செய்தித்தாள் விநியோகிப்பாளராகவும் உருமாறி நிற்கின்றனர் ஊரை விட்டு வெளியேறி. ஊரிலேயே இருக்கும் அடுத்த தலைமுறையின் பெரும்பகுதி நாளை பற்றிக் கவலையின்றி டாஸ்மாக்கில் திரண்டு கிடக்கிறது.

நிலத்தை விற்கவும் மனதில்லாமல் விவசாயமும் செய்ய முடியாமல் நொடித்துப் போய் வேறு வேலை தேடிக்கொண்டு அங்கேயே வறுமையில் இருப்பவர்களும் ஓட்டுக்கு விலை போகும் நிலையில் இருக்கின்றனர்.

காவிரியால் செழித்த என் ஊர் காவிரியாலேயே நசிந்த கதையை கண் முன்னே காண்கிறோம் நாங்கள். ஒரு நாளில் நடந்ததில்லை இந்த உருமாற்றம். ஒவ்வொரு நாளாக நடந்தது. ஒன்றும் செய்ய முடியவில்லை. அரசியல் கட்சிகள் ஐபிஎல் போராட்டங்களை வெறுமனே கடந்து போகிறேன்.

பரமானந்தம் மாமா அதே மீசையில், ஆனால் ஏதோ திரிகிறார் வாழ்வாதாரம் இன்றி.

நாய்க்கடிச்சான் மனைவியும், கனகாம்பரமும், சிவலிங்கம் வூட்டு அக்காவும் இப்போதெல்லாம் நூறு நாள் வேலைக்குப் போகிறார்களாம்.

அடுத்த முறை அவர்களைப் பார்க்கும் போது இதையெல்லாம் நான் நினைத்து அவர்களை நோக்குகிறேன் என்பது அந்த அக்காக்களுக்குத் தெரியாது. எப்போதும் போல, ‘சிவா… எப்ப வந்த? பிரியா வந்துருக்கா? பசங்க எப்படி இருக்கு? காலேஜா போவுதுங்க!’ என்பார்கள்.

பதில் சொல்ல முடியாமல் நான் தவிப்பேன்.

– பரமன் பச்சைமுத்து
சென்னை
10.04.2018

Facebook.com/ParamanPage

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *