இணைப்பில் இல்லாதபோதே பார்த்ததும் சார்ஜ்…

‘இன்னைக்கு என்னவோ நடந்திருச்சி. வளர்ச்சிப்பாதையில ரெண்டு எடத்துல உள்ளுக்குள்ள அப்படியே ஒரு உதறல் வந்துடிச்சி! இதுவரைக்கும் நடந்த எல்லாத்தையும் விட இந்த வளர்ச்சிப்பாதை வேற ஆழம்!’ – திருவண்ணாமலையில் வளர்ச்சிப்பாதை முடிந்தவுடன் பாபு பகிர்ந்தது.

‘இன்னும் க்ளாஸ் வைக்கலியே. ஏம்மா எப்பம்பா க்ளாஸுன்னு எல்லாருகிட்டயும் ஃபோன் பண்ணி கேட்டுகிட்டே இருந்தேன். பரமன், வாரம் ஒரு வீடியோ மெசேஜோ, வாய்ஸோ அனுப்பிடுங்க. எங்களுக்கு உடனே சார்ஜ் ஆயிடும்!’ – நான் காரில் ஏறும் முன் மீனா சொன்னது.

வேலூரில் காலையில் கண் விழித்த போது ‘நேத்து நைட் அர்ஜண்டினா ஜெயிச்சிட்டாங்களா, இல்லையா?’ என்று வந்த முதல் எண்ணத்திற்குப் பிறகு வந்தவை மேலுள்ள இரண்டு பகிர்வுகளுமே. திருவண்ணாமலை மலர்ச்சி மாணவர்களை நினைத்துக் கொண்டே காலை உடற்பயிற்சிக்கு பாலாற்று பழைய பாலத்தை நோக்கி் நடந்தேன்.

கிரீன் சர்க்கிளைக் கடந்து ஹோட்டல் ஆர்யாவைக் கடக்க முடியவில்லை. பழைய நிகழ்வுகள் பல்லாயிரம் கிளர்ந்தெழ, ஆர்யாஸின் கவுண்ட்டருக்கு போய் நிற்கிறேன். பன்னிரெண்டு ரூபாயாக இருந்த காப்பியை நினைத்துக் கொண்டு பலகையைப் படிக்கிறேன் ‘காப்பி 24 ரூபாய்’ என்றிருந்தது.

மீதி சில்லரையை வாங்குவதற்குள், ‘பரமன் எப்படி அப்படியே இருக்கீங்க? இவ்ளோ வருஷத்துல வயிறு அடிச்சி தொப்பைகிப்ப போட்டிருப்பீங்கன்னு நெனைச்சேன்!’ என்று குரல்.

தாயம் பதினேழாவது பேட்ச்சின் மாணவரொருவர்.

‘ஹாய்!’

‘பரமன்… பத்து வருஷம் ஓடிப்போனது!’

‘ம்ம்.. நீங்க இப்ப தனியா ஒரு இயக்கம் ஆரம்பிச்சிட்டீங்க போல. பாத்தேன்!’

‘ஆமாம், மலர்ச்சி!’

‘அப்ப நீங்க குடுத்தது எல்லாம் இன்னும் உள்ள ஓடிட்டே இருக்கு பரமன். தினமலர்ல வர்றத தொடர்ந்து படிக்கறேன். பிள்ளைங்கள படிக்கச் சொல்றேன்.’

‘இப்ப எங்க இருக்கீங்க? வெங்கடேசன் எப்படி இருக்காரு?’

‘அங்கயே, அதே ஜெயின் கார்ஸ்தான். இப்ப மேனேஜரா ப்ரமோட் ஆயிட்டேன் பரமன்!’

‘பத்து வருஷம் கழிச்சிப் பார்த்தும் இடைவெளியே இல்லையே பரமன். நேத்துப் பார்த்த மாதிரி ஓடி வந்து நிக்கறேன் பாருங்க. ஒரு தயக்கம் இல்ல, உங்களத் தொந்தரவு பண்ணாலும் பரவாயில்லைன்னு ஓடி வந்து பேசிட்டேன் பாருங்க. ஆச்சரியமா இருக்கு! தொடர்பில இல்லன்னாலும் தொட்டதும் ஒரு சார்ஜ் வந்திடிச்சி!’

பாலாற்றுப் பாலத்தில் ஓட்டப்பயிற்சி செய்யும் போது மனதில் சில ஓடின.
நேற்று திருவண்ணாமலையில் மீனா சொன்னதும் இன்று வேலூரில் இவர் சொன்னதும் ஒரே கோட்டில் பயணிக்கும் உண்மை.

நானே சொல்லிக் கொண்டேன்.

‘இணைப்பில் இல்லாத போதே, தொட்டதும் ஒரு சார்ஜ் வந்தது என்றால், தொடர்ந்து இணைப்பில் இருந்தால்…. !’

வளர்ச்சிப்பாதைக்கும், வெற்றிப்பாதைக்கும் வருபவர்களுக்கே அது புரியும். இல்லையா?

– பரமன் பச்சைமுத்து,
ஜிஆர்டி ரீஜென்சி, வேலூர்,
22.06.2018

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *