செம்பியன் மாதேவியின் மண்ணை…

திருவையாறு அருகேயிருந்த செம்பியன்குடி குறுநில மன்னன் மழவராயனின் மகள் செம்பியன் மாதேவி, சிவன் மீதுள்ள பக்தியால் சிவாலயங்களுக்குச் செலவது வழக்கமாம். அப்படி ஒரு நாள் செல்லும் போது தஞ்சை மன்னன் கந்தராதித்யர் பார்த்து காதல் கொண்டு திருமணம் செய்து கொண்டாராம். அவர்களுக்குப் பிறந்தவன் மதுராந்தகன் (உத்தம சோழன்) என்பதும், கந்தராதித்யர் இளம் வயதிலேயே இறந்து போக அவரது தம்பி அருஞ்சிய தேவரை ஆட்சியில் அமர்த்தியதும், அவரது மகன் சுந்தர சோழன் என்பதும் ஊருக்கே தெரிந்த வரலாறு. (சுந்தர சோழனின் இளைய மகன்தான் அருண்மொழி என்னும் ராஜராஜ சோழன் என்று நான் சொல்லவே வேண்டியதில்லை)

செம்பியன் மாதேவி பற்றி தங்களது புனைவுகளில் கல்கியும், பாலகுமாரனும் எழுதித் தள்ளியிருப்பதால், வரலாறு விரும்பும் வாசகர்களுக்கு செம்பியன் மாதேவி நன்கு பரிச்சயமானவர். விருத்தாசலம், திருமணஞ்சேரி, திருவக்கரை ஆகிய இடங்களில் சிவாலயங்கள் அமைத்தவர் என்பதால் கல்வெட்டுப் பார்க்கும் ஆராய்ச்சியாளர்களுக்கும் பரிச்சயம் ஆனவரே.

அத்தகைய செம்பியன் மாதேவி பற்றி ஒரு செய்தி காணப்படுகிறது இன்றைய செய்தித்தாள்களில்.

செம்பியன் மாதேவியின் மகன் மதுராந்தகன் (அண்ணன் கொலையுண்டு, தந்தையும் இறந்து விட, இலங்கையிலிருந்து வந்த ராஜராஜன் ‘ஆட்சியும் வேண்டாம், ஒண்ணும் வேண்டாம்… நீங்களே வச்சுக்கோங்கடா!’ என்று ஒதுங்கி தென்னாற்காடு மாவட்டத்தில் வாழ்ந்த காலத்தில் ஆட்சி புரிந்தவன் இந்த மதுராந்தகன் என்னும் உத்தம சோழன். இவனது பெயரையே தன் மகனுக்குச் சூட்டி மகிழ்ந்தான் ராஜராஜன். (மதுராந்தகன் என்னும் ராஜேந்திர சோழன்)) தனது அன்னையை ஐம்பொன்னால் வடித்து அந்தச் சிலையை நாகை மாவட்டத்திலுள்ள கோணேரிராசபுரத்தில் உள்ள கந்தராதித்தேஸ்வரம் என்ற சிவாலயத்திற்கு அளித்தானாம். நாகை மாவட்டம் செம்பியன் மாதேவி கிராமத்தில் கைலாசநாதர் கோவிலில் ஒரு கற்சிலையும் உள்ளதாம். உத்தம சோழன் தந்த அந்த செம்பியன் மாதேவி ஐம்பொன் சிலை நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போய் விட்டது. அமெரிக்காவின் வாஷிங்டன் பிரியர் அருங்காட்சியத்தில் இருக்கிறது அந்தச் சிலை என்று கண்டுபிடித்து படம் வெளியிட்டிருக்கிறது சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு.

‘அப்பவே திருடிட்டானுங்களா?’ என்றும், ‘சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவுக்கு ஒரு சபாஷ்!’ என்றெல்லாமும் தோன்றும் எண்ணங்களுக்கிடையே, அவைகளைத் தாண்டி இன்னொரு எண்ணமும் வருகிறது.
‘ராஜராஜனை, குந்தவையை வளர்த்த அந்த செம்பியன் மாதேவி இருந்த ஊருக்கு ஒரு முறை போய், அந்தத் தெருக்களில், அந்த மண்ணில் நின்று பார்க்க வேண்டும்!’

– பரமன் பச்சைமுத்து
சென்னை
23.09.2018

Facebook.com/ParamanPage

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *