’96’ – திரை விமர்சனம் : பரமன் பச்சைமுத்து

96_153856405820.jpg

ஆழ் கடல் உயிரிகள், பனிமலைகள், பறவைகள் என அதிகம் பேச்சற்று இயற்கையில் கரைந்து வேறு கண் கொண்டு பார்க்கும், மற்றவர்களால் சிறுபிள்ளைத் தனம் கொண்டவனாகப் பார்க்கப்படும் ஒரு காட்டுயிர் ஒளிப்படக் கலைஞன், இருபத்திநான்கு ஆண்டுகள் கழித்து தனது வகுப்புத் தோழர்களை சந்திக்கும் போது தனது அகத்தைத் திறந்து கொஞ்சம் வெளிப்படுத்தி, அதன் ஆழத்தால்… சிரிக்க, நெகிழ, மிரள, அதிர வைக்கிறான்.தஞ்சாவூரின் பள்ளியில் 1996ஆம் ஆண்டு பன்னிரெண்டாம் வகுப்பு முடித்து வெளியேறிய மாணவர்கள் (94ல் பத்தாம் வகுப்புப் படித்தவர்கள்) நடத்திய மறுசந்திப்பும் அதைத் தொடர்ந்த அடுத்த நாள் வரையிலான முழு இரவிலும் நடக்கும் நிகழ்வுகளை நகை, நெகிழ், காதல் என உணர்ச்சிகளைக் கலந்து திரைக்கதையமைத்து வெற்றி பெற்றுவிட்டார் இயக்குநர். குத்துப்பாட்டு, நாயக சாகசங்கள், பழி வாங்குதல்கள், இடையூறு செய்யும் வில்லன்கள் என எந்த வித லாகிரி வஸ்துக்களையும் கலக்காமல் மெதுவாக ஓடும் ஒரு நீரோடையைப் போல படம் தந்து வியக்க வைக்கிறார்.ராமச்சந்திரனாக விஜய் சேதுபதியும், ஜானகி தேவியாக த்ரிஷாவும், மற்ற நண்பர்களும் மிகச் சிறந்த தேர்வு. இளம் வயது மாணவர்களாக வருவோரும் மிக நன்றாகச் செய்துள்ளனர்.விஜய் சேதுபதி வெளுத்து வாங்குகிறார். ‘உன்னைப் பத்தி எல்லாமே தெரியும். நீ வாங்கன மார்க். உன்ன மூனு பேரு லவ் பண்ணாங்க. அதில ஒருத்தன் வாய குத்திப் பேத்து போலீஸ் கேஸாயிடிச்சி…’ என்று குளியலறையில் உட்கார்ந்து பேசுவதாக வரும் அந்தக் காட்சியில் த்ரிஷாவை மிரளவைப்பதோடு, அதற்கடுத்து நடக்கும் நிகழ்வில் த்ரிஷாவோடு நம்மையும் சேர்த்து துவைத்துப் போடுகிறார். சிங்கப்பூரில் செட்டிலாகிவிட்ட ஜானகிதேவியாக த்ரிஷா வேண்டியதை செய்து விஜய்சேதுபதியோடு சேர்ந்து படத்தைத் தோளில் சுமக்கிறார்.ஒளிப்படக்கலைஞனின் கதை என்பதாலோ என்னவோ, ஒளிப்பதிவை நேர்த்தியாகச் செய்திருக்கிறார்கள். விஜய்சேதுபதியின் வாழ்வு முறையை விவரிக்கும் முதல் சில நிமிடக் காட்சிகள், ‘அந்த இடங்களுக்கு நாமும் போனால் என்ன!’ என்று தூண்டும் வகையிலான காட்சிப்பதிவுகள்.’வராதவன் ரத்தம் கக்கிச் சாவான்’ ‘மகிழ்ச்சியா இருக்கனான்னு சொல்ல முடியாது, ஆனா நிம்மதியா இருக்கேன்’ ‘தேவலோகத்துல ஆடுவாங்களே அவங்க பேரு என்ன?’ என வசனங்களும் நன்று.ஐரோப்பிய, மலையாளத் திரைப்படங்களைப் போன்ற கதை சொல்லும் பாணி கொண்ட இந்தப் படம் நிச்சயம் வேறு மொழிகளில் மறுஆக்கம் பெறும்.முப்பது வயதிற்கு மேற்பட்டவர்கள் கொண்டாடுவார்கள் என்றாலும், பதின்ம வயதினருக்கு இது பிடிக்குமா, 94ல் ஏஆர்ரஹ்மான் வந்துவிட்டாரே, சில இடங்களில் படம் மெதுவாகப் போகிறது போன்ற பலவீனங்கள் இருந்தாலும் மற்ற சங்கதிகள் படத்தோடு நம்மை ஒன்ற வைத்து விடுகின்றன.வி- டாக்கீஸ் வெர்டிக்ட்: ’96’ – மெதுவாகப் பயணிக்கும் ஆழமான ஆறு, நல்ல நாவல் படித்த உணர்வு தரும் பதிவு. நிச்சயம் பாருங்கள்.- திரை விமர்சனம்: பரமன் பச்சைமுத்தWww.ParamanIn.com

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *