நினைவூட்டும் வசதிகள்

தொலைபேசி வழியே மட்டுமே தொடர்பு என்றிருந்த அந்தக்காலங்களில் முக்கிய நபர்களின் எண்களை மனனம் செய்து பதிய வைத்திருந்த தலைமுறையின் கடைசி எச்சங்களில் நானுமொருவன். அதே வழக்கத்தில் செல்லிடப்பேசி எண்ணையும் உள்ளே பதிய வைக்கும் பழக்கம் வந்தது. செந்தில்நாதன் என்றால் 9841025530 என்று பதினெட்டாண்டுகளுக்கு முன்பு பதிய வைத்தது இன்றும் உள்ளே நிற்கிறது.

நவீன முறையில் சேமிக்கும் வசதிகள், நினைவூட்டல் வசதிகள் கொண்ட தொழில்நுட்ப வசதிகளால் வாழ்க்கை முறை மாறிவிட்டது இன்று. நிறைய சங்கதிகளை நினைவில் வைத்துக் கொள்ளத் தேவையில்லை, வேண்டாம் என்ற மனப்பான்மையும் கூட ஒரு காரணம்.

மனைவியின் தொடர்பு எண்ணைக் கூட செல்லிடப் பேசியின் காண்டாக்ட்டைப் பார்த்தே சொல்ல முடியும் என்ற நிலைக்கு வந்துவிட்ட பலபேர்களில் என்னையும் சேர்த்துக் கொள்ளலாம். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சிங்கப்பூரிலுருக்கும் செந்திலின் பிறந்தநாளை தெரியாமல் தவறவிட்டுவிட்டேன். ‘தினம் பேசறீங்க, அவ்ளோ க்ளோஸ் ஃப்ரெண்டுன்னு சொல்றீங்க! பொறந்த நாளுக்குக் கூட விஷ் பண்ணல உங்க ஃப்ரெண்டு! த்தூ!’ என்று காரி உமிழ்ந்தாராம் செந்திலின் மனைவி அவனிடம். திருட்டுப் பயல் பத்து நாட்கள் கழித்தே சொன்னான்.

இந்தப் பிறந்த நாள் விஷயத்தில் முகநூல் ஒரு வரப்பிரசாதம். அன்றன்று நினைவுகூர்ந்து பேருதவியைப் புரிந்துகொண்டிருக்கிறது என்றாலும் முகநூலுக்கு ஒரு பிறந்த நாளும் உண்மைக்கு ஒரு பிறந்த நாளும் வைத்திருக்கிறார்கள் செந்தில்நாதனைப் போன்ற சிலர். அதில் வரும் பட்டியலைப் பார்த்துவிட்டு அழைத்து ‘ஹேப்பி பர்த்டே…’ சொன்னால், ‘அது சர்ட்டிஃபிகேட் பர்த்டே! கெக்கேக்கே!’ என்பார்கள்!

‘ரஜினி பிறந்த நாள் மட்டும் ஞாபகம் இருக்கு!’ என்று கிண்டல் வேறு செய்வான். ‘தம்பி காந்தி பிறந்த நாளும் ஞாபகம் இருக்கு!’ என்று உள்ளுக்குள் சொல்லிக்கொள்வேன். இயல்பிலேயே நிறைய சங்கதிகளை நினைவில் வைத்துக் கொள்ளவதில்லை நான்.

வாட்ஸ்ஆப் க்ரூப்புகள் காப்பாற்றிவிடுகின்றன இத்தகைய நேரங்களில். ‘ஹேப்பி பர்த்டே செந்தில்!’ என்று அதிகாலையிலேயே வாட்ஸ்ஆப் க்ரூப்பில் பதிவிட்டு நினைவூட்டிப் புன்னியம் கட்டிக்கொண்டான் ராஜவேலு.

செந்திலுக்கு பிறந்த நாள் வாழ்த்து சொல்ல வேண்டும், அவன் மனைவியின் ‘த்தூ’விலிருந்து முகத்தைக் காக்க.

– பரமன் பச்சைமுத்து
20.11.2018
சென்னை

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *