சிட்னி ஷெல்டனின் காட்சிகளை தமிழ்ப்படுத்தி கண் முன்னே நிறுத்தியவர் ரீ.கி. ரங்கராஜன்.

ஆங்கில நாவல் உலகில் அடித்து ஆடியவர் சிட்னி ஷெல்டன். அக்காலங்களில் அதிகம் விற்றது அவரது நாவல்கள்தான் என்று சொல்வோர் உண்டு.

ஆங்கிலமறியாமல் இருந்த அந்த இளம்பிராயத்தில் சிட்னி ஷெல்டனின் நாவல்களை என்னுள் போட்டு, அந்தக் கதாபாத்திரங்களோடு என்னை உலவ விட்டவர் ரா.கி. ரங்கராஜன். ‘குமுதம்’ வார இதழில் வரும் ‘ட்ரேஸி விட்னி’க்காக வாரம் முழுக்கக் காத்திருந்து வாசித்து, வாசிக்கும் வரிகளினூடே கற்பனை செய்து வாழ்ந்து பார்த்தது ஒரு வித ஆழனுபவம் அப்போது.

‘அவர் பெரிய இலக்கியவாதியெல்லாம் இல்லை. எஸ்ஏபியின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய வார இதழை முதன்மையில் வைக்க எழுதுவார்’ என்றெல்லாம் சொல்வார்கள். அவ்வயதில் அதெல்லாம் அதிகமெனக்கு. ‘1500 சிறுகதைகள், 50 நாவல்கள், 3 திரைப்படங்கள் எழுதிய குமுதத்தின் கர்மயோகி, சக எழுத்தாளர்களை பொறாமையின்றி கொண்டாடியவர்’ என்று சுஜாதா சொன்னதை நினைவு கூர்கிறேன்.

கனவான வாழ்க்கையை நோக்கி நகரும் ட்ரேஸி விட்னி என்னும் இளம் அழகிய பெண் தனது வாழ்க்கையில் சந்திக்கும் அடுத்தடுத்த அதிர்ச்சிகள், நியூ ஆர்லியன்ஸ் நகரின் சிறைக் கொட்டடி, அதிலிருந்து எப்படி மீண்டு சாகசக்காரியாக மாறி அதகளம் செய்தாள் என்று திகிலும், திருப்பங்களும், உணர்ச்சிகளும் நிறைந்த சிட்னி ஷெல்டனின் நாவலை அப்படியே அட்டகாசமாக தமிழ்ப்படுத்தி நம் முன்னே காட்சிகளாக ஓட விட்டவர் ரா.கி. ரங்கராஜன்.

சிறுவயதில் படித்ததாலோ என்னவோ, பாத்திரங்களும் காட்சிகளும் உள்ளத்தினுள்ளே பொதிந்து போயின. அதனால்தான் ‘மகாநதி’ திரைப்படத்தின் காட்சிகளை திரையில் பார்த்ததும் ‘இது நியூ ஆர்லியன்ஸ் ஜெயில் சீன். ட்ரேஸியை கமலுக்கு மாத்திட்டாங்க. பிக் பெர்த்தாவை துலுக்கானமா ஆக்கிட்டாங்க!’ என்று அவர்களின் பின்னலைப் பிடிக்க முடிந்தது. திரைக்கதையில் ரா.கி. ரங்கராஜன் இருக்கிறார் என்று பெயர் படித்ததும் ஊகம் உறுதியானது. ஸ்ரீதேவியின் வெற்றிப் படமான ‘ரூப் கி ராணி, சோரன் கா ராஜா’வை பெங்களூரின் திரையரங்கில் பார்த்த போது, ‘ட்ரேஸி – ஜெஃப் கதையை கொஞ்சம் எடுத்து கதை பண்ணிருக்காங்க!’ என்று பார்க்கும் போதே சொல்ல முடிந்தது.

ஆங்கிலம் கற்று ஆங்கில நாவல் வாசிக்கத் தொடங்கிய நாட்களில், ட்ரேஸி விட்னியைத் தேடினேன். நெடிய தேடலுக்குப் பின்னே, ‘ஈஃப் டுமாரோ கம்ஸ்’ நாவல் அது என்று புரிய அதை அள்ளி எடுத்துக் கொண்டது இன்னும் நினைவில் இருக்கிறது. அமெரிக்க – ஐப்பானிய – ஐடி பணி காலங்களில் எனது கனவுகளை விரிக்க உதவியவர்களில் சிட்னி ஷெல்டனும் ஒருவர்.

முப்பதாண்டுகளுக்குப் பிறகு மலர்ச்சி மாணவரொருவருக்காக காத்திருந்த வேளையில் பக்கத்திலிருந்த ‘ஈஸ்வரி லெண்டிங் லைப்ரரி’க்குள் போனேன். கல்கி, திஜ, பிரபஞ்சன், லாசாரா, சுஜாதா… என்று நுனிப்புல் மேய்ந்து விட்டு திரும்பியவன் கண்ணில் பட்டது ‘ரா.கி. ரங்கராஜன்’ என்று எழுதி ஒட்டப்பட்ட வில்லை. ‘ட்ரேஸி விட்னி இருப்பாளோ!’ என்று ஓடிச் சென்று ஒவ்வொன்றாய் தேடியதில் ஏழாவது புத்தகத்தைப் பிரித்த போது, ‘தாரகை – சிட்னி ஷெல்டன் – தமிழில் ரா.கி. ரங்கராஜன்’ என்றிருந்த பக்கத்தைப் புரட்டுகையில், விரல்களின் வழியே என்னுள் நெருப்புப் பற்றிக் கொண்டது.

படமெடுத்துக் கொண்டு ‘இந்தப் புத்தகம் வேண்டும்’ என்று வெளியே வினவிய போது, மலர்ச்சி மாணவர் ராஜேந்திர குமார் பிடிஎஃப் வடிவில் அனுப்பினார். செங்கல்பட்டு மூர்த்தி ‘இரண்டாம் பாகம்தான் கிடைத்தது’ என்று சொல்லி அனுப்பியிருந்தார். கண்ணதாசன் பதிப்பகத்தில் முதல் பாகம் இல்லை, அல்லயன்ஸில் இரண்டும் சேர்த்து ஒரே நூலாக என்பதையெல்லாம் கண்டறிந்து ‘தாரகை’யை வாங்கி வந்து வாசித்தாயிற்று.

சிறு வயதில் பெரிதாகத் தெரிந்தது வளர்ந்த போது தெரிவதில்லை. ஆனால், இந்த நாவல் இன்னும் அதே விறுவிறுப்பைத் தந்தது நல்லனுபவம்.

த்ரில்லர், க்ரைம், ஃபிக்‌ஷன் வாசிக்கும் பருவத்தைக் கடந்து விட்டேனென்றாலும், ‘தாரகை’யை ரசிக்க முடிந்தது.

ரா.கி. ரங்கராஜன் அட்டகாசமாகச் செய்திருப்பார். ‘பிக் பெர்த்தா’வை ‘குண்டு பெர்த்தா’வாக தமிழ்ப்படுத்தி அசலை குறைக்காமல் அழகாகத் தந்திருப்பார்.

த்ரில்லர்கள், ஃபிக்‌ஷன்களை இன்னும் படிப்பவர் என்றால், சிட்னி ஷெல்டனின் ‘ஈஃப் டுமாரோ கம்ஸ்’ஸை படித்தவர்கள் படிக்காதவர்கள், தமிழில் அதைப் பெற வேண்டுமென்றால்…’தாரகை’.

வாழ்க! வளர்க!

– பரமன் பச்சைமுத்து
சென்னை
11.12.2018

Facebook.com/ParamanPage

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *