‘சூப்பர் டீலக்ஸ்’ – திரை விமர்சனம் : பரமன் பச்சைமுத்து:

p_ho000066265157473412004423994.jpg

திருமணத்திற்கு முன்பு உயிராய்க் காதலித்த பழைய காதலன், கணவன் இல்லாத போது வீட்டிற்கு வரவே, அவனோடு உறவு கொள்கையில் அவன் இறந்து விடுகிறான்; வீட்டை விட்டு ஓடிப் போன மனிதன் ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு திரும்பி வருகிறானே என்று மனைவியும் மகனும் தவித்துக் காத்திருக்க, அவன் அப்பாவாக வராமல் அம்மாவாக வருகிறான்; பதின்ம வயது விடலைகள் பள்ளிக்குச் செல்வதாய் சொல்லிவிட்டு திருட்டுத்தனமாய் பலான ‘மல்லு ஒன் கட்’ பார்க்கையில், அந்தப் பலானப் படத்தின் நடிகை இவர்களின் ஒருவனின் அம்மா ; வாழ்வை வெறுத்துத் தற்கொலை செய்து கொள்ள கடலுக்குள் போனவன், அனைவரையும் அழிக்கும் ஆழிப்பேரலையில் சிக்கி ஒரு சிலையின் வழியே காக்கப்பட்டு சுனாமி ஆண்டவரின் அற்புதங்களை விளக்கும் போதகராக மாறி நிற்கிறான்; இப்படி, பொதுவாக இறுதி உச்சக் காட்சியில் உரிக்கும் நிகழ்வுகளை தொடக்கத்திலேயே வைத்துத் தொடங்கி சூடேற்றி, அதற்கப்புறம் என்னவாகிறது என்று ஓட விட்டு நிமிர வைக்கிறது திரைக்கதை.

நிச்சயமாக திரைக்கதையும், வசனங்களுமே நடிகர்களோடு போட்டி போட்டு அவர்களைத் தாண்டி நிற்கிறது.
‘ஏடிஎம்ல இல்லன்னா இருநூத்தம்பது ரூவா தருவாங்களா?’ ‘நமக்குப் புடிச்சா மாதிரி முடியை மாத்திக்கறது, நகம் வெட்டிக்கறது இல்ல? நான் அப்படி ஒடம்ப மாத்திக்கிட்டேன்’ ‘ஆண்டவன் செருப்ப மாத்திப் போட்டுட்டான்’ ‘அம்மா மாதிரி அப்பா இருந்தா என்னடா தப்பு?’ ‘அது வெறும் செலைதானே சார்!’ ‘ஒரு டெடிபேர் பொம்மைய புடிச்சி மெதந்திருந்தா?!’ ‘மவன என்ன அக்கான்னு மட்டும் கூப்டாத!’ என படம் முழுக்க வருகின்றன பட்டாசு வசனங்கள்.

முக்கிய குறிப்பு: இது குழந்தைகளோடும் குடும்பத்தோடும் சென்று பார்க்கும் படமாக இருக்காது. (இதை விட மோசமான காட்சிகள் வசனங்கள் கொண்ட ‘மேட் இன் ஹெவன்’ (அமேசான் ப்ரைம்) போன்ற வெப் சீரியல்கள் வீட்டிற்குள் வந்து விடுகின்றன என்பதும் இன்றைய யதார்த்தம்)

திரைப்படமென்றால் இப்படித்தான் இருக்க வேண்டும், இப்படி முடிய வேண்டும் என்று எந்த விதிகளுக்குள்ளும் தன்னை இறுக்கிக் கொள்ளாமல், ‘இப்படி இருக்கட்டுமே, போவியா… என்னா இப்போ!’ என்று செம தில்லாக வித்தியாசமாகத் தந்திருக்கிறார் தியாகராஜன் குமாரராஜா.

விஜய் சேதுபதி, சமந்தா, ஃபகத் ஃபாசில், அந்த பதின்ம வயது பையன்கள், மிஷ்கின், ரம்யா கிருஷ்ணன், காலை மாற்றி வைத்து விளையாடிக் கொண்டே குச்சி ஐஸ் தின்னும் விஜய் சேதுபதியின் குட்டிப்பையன், வரம்பேயில்லாத காமாந்தகனாக வரும் காவல்துறையதிகாரி, பிணமாக வரும் காதலன் என நடிகர்கள் அனைவருமே படு கச்சிதம். சமந்தா போகப் போக அள்ளுகிறார், ஃபகத் இறுதியில் அப்ளாஸ் வாங்குகிறார். இந்த மாதிரி ஒரு பாத்திரத்தை தேர்வு செய்து அதைக் கொடுத்த விதத்தில் படத்தைத் தாண்டி மிரள வைக்கிறார் விஜய் சேதுபதி.

இளையராஜாவின் பாடல்களை பின்னணியில் ஓட விட்டு பட்டையைக் கிளப்புகிறார்கள்.

வி டாக்கீஸ் வெர்டிக்ட்: ‘சூப்பர் டீலக்ஸ்’ – ‘சூப்பர் டிஃபரண்ட் அடல்ட்ஸ் ஒன்லி’ – எத்தனைப் பேருக்குப் பிடிக்கும் என்பது தெரியவில்லை.

– திரைவிமர்சனம் : பரமன் பச்சைமுத்து

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *