சிக்கிம் பயணிப்போர் செய்ய வேண்டியவை, செய்யக்கூடாதவை:

சிக்கிம் – நிறைவுக் கட்டுரை:

சிக்கிம் பயணிப்போர் செய்ய வேண்டியவை, செய்யக்கூடாதவை:

நாதுலா பாஸ் எனப்படும் சிக்கிம் சீன எல்லையில் பயணிப்பதற்கு முன்பே கடவுச்சீட்டு வாங்க வேண்டும். சிக்கிம் புறப்படும் முன்னரே அதற்கான சரியான ஏற்பாடுகளைச் செய்யவும். ஒரு நாளைக்கு 100 பேர்களுக்கு மட்டுமே அனுமதி என்பதால், இங்கு வந்த பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்று வருவது உங்களுக்கு ஏமாற்றத்தைத் தரும்.

நாதுலா பாஸ், சங்கு ஏரி போன்றவை உங்களது பட்டியலில் இருந்தால் குளிர் தாங்கும் உல்லன் உடைகளை கொண்டு செல்லுங்கள். கீழே கேங்டாக்கின் 20 டிகிரையை கணக்கில் வைத்து மேலே சென்றால் நடுங்குவீர்கள். மற்ற எல்லா இடங்களிலும் நன்றாக நடந்து கொள்கிறார்கள் என்றாலும் ‘யாக் எருமை’ச் சவாரி நடைபெறும் இடத்தில் பணம் பிடுங்க நிற்பார்கள். போய் இறங்கிய உடனேயே எருமைச் சவாரிக்குச் செல்லாதீர்கள். இடங்களைப் பார்வையிடுவது, படம் எடுப்பது, ரோப் கார் ஆகியவற்றிற்குப் போய் விட்டு எருமைக்காரர்கள் பக்கம் திரும்புங்கள். பேரம் படியும்.

சங்கு ஏரி, நாதுலா ஆகியவை இராணுவ – எல்லைப் பாதுகாப்புப் பகுதியில் வருவதால், அனுமதிச் சீட்டு வாங்க உங்கள் அடையாள அட்டைகள், புகைப்படங்கள் தேவைப்படும். இங்கிருந்து புறப்படும் போதே பாஸ்போர்ட் / ஆதார் நகல்கள் நான்கு, பாஸ்போட் அளவு ஃபோட்டோ 4 என்று எடுத்துக் கொண்டே செல்லுங்கள்.

விளம்பரங்களில் ‘எங்கள் நெட்வொர்க் எல்லா இடங்களிலும்!’ என்று மலைப்பிரதேசங்களை எல்லா நிறுவனங்களும் காட்டினாலும், பல இடங்களில் கவரேஜ் இல்லை. பிஎஸ்என்எல் சிக்கிமின் எல்லா இடங்களிலும் வேலை செய்கிறது, மற்ற நெட்வொர்க்குகள் வேலை செய்யாத 12,000 அடி உயரத்திலும்.

சிக்கிம் பயணத்திற்கும் புதிய அனுபவத்திற்கும் மிகச்சிறந்த இடமென்றாலும், மழைக்காலமென்றால் போவதைத் தவிர்ப்பதே நல்லது. ‘யோவ்… அறிவுப் பயப்படற நாங்க?’ என்பது கேள்வியாக இருக்கலாம். மழை அற்புதமானது. ஆனால் உயர்ந்த இடத்தில் இருக்கும் சிக்கிமின் மலைச் சரிவுகள் மழையில் அப்படியே அங்கங்கே சரிந்து விடுகின்றன. ஒரு மலையின் சரிவே சரிகிறதென்றால், இத்துனூன்டு ரோடு என்னவாகும் என்று சிந்தியுங்கள். ஒருவராலும் ஒன்றும் செய்ய முடியாது. பல மணிநேரங்கள் அப்படியே நிற்க வேண்டியதுதான் பார்டர் ரோடு் ஆர்கனைஸேஷன் ஆட்கள் வந்து அனைத்தையும் சரி செய்யும் வரை.

நிலச்சரிவு என்பது ஆபத்தானது, அந்த நாட்களில் அங்கே பயணிப்பது நல்லதல்ல.

சென்னை பெங்களூரிலிருந்து விமானத்தில் பயணித்தால், இதுவும் அதிகாலை 5 மணி விமானமென்றால், 3 மணிக்கு நீங்கள் செக் இன் செய்ய வேண்டி, இரவு இரண்டு அல்லது ஒன்றரை மணிக்கு வீட்டிலிருந்து கிளம்புவீர்கள். பாக்தோக்ரா விமான நிலையத்தில் 08.30க்கு இறங்கியதும் நேராக நீங்கள் உங்கள் ஹோட்டலுக்கு செல்ல முடியாது. நெரிசலும் குப்பையும் இங்கிதமும் இல்லாமையும் நிறைந்த பாக்தோக்ரா விமான நிலையத்தில் உங்கள் பயணப்பைகளைப் பெற்றுக் கொண்டு வெளியே வரவே 40 நிமிடங்கள் ஆகலாம். அதன் பிறகு உங்களுக்கான டாக்ஸியில் ஏறினால், பாக்தோக்ராவிலிருந்து சிலிகுரி, ராங்போ, சிம்டாங் வழியான மலைப்பாதையில் கேங்டாக் சென்றடைய மதியத்திற்கு மேல் ஆகிவிடும். தவிர, நீங்கள் நேராக ஹோட்டலுக்குப் போய் குறித்தும் திருத்தி வரும் வரையெல்லாம் காத்திருக்க மாட்டார்கள் ஒப்பந்த டாக்ஸிவாலாக்கள். போகும் போதே அன்றைக்கான சைட்ஸீயிங்கை முடித்து விட்டே உங்களை ஹோட்டலில் கொண்டு போய் விடுவார்கள். வழியில் ஏதாவது கடையில் நிறுத்தி ஷாப்பிங் செய்ய வேண்டும் என்றாலும் யூனியன் வழியே வந்து அதிக தொகை கேட்பார்களாம். சைட் ஸீயிங்கிற்கு மட்டுமே அவர்கள் நேரம் ஒதுக்குவார்கள்.

இரவு 3 மணிக்கு சென்னையில் ஏற வேண்டுமென்றால், 01.30க்கு வீட்டிலிருந்து புறப்படும் போதே குளித்து விட்டுக் கிளம்புங்கள். பாக்தோக்ராவில் இறங்கியதுமே ஒதுங்குமிடத்திற்குச் சென்று உங்களை தயாராக்கிக் கொள்ளுங்கள். இறங்கியதுமே நீங்கள் தயார்! வழியில் சிற்றுண்டியும் முடித்து உற்சாகமாக செல்ல முடியும்.

சிக்கிமில் ஒப்பந்தமாகி வரும் டாக்ஸிக்காரர்கள், அவர்களுக்குக் கொடுக்கப்பட்ட சைட்ஸீயிங் தாண்டி கொஞ்ச நேரம் கூட அதிகம் செலவிட விரும்பமாட்டார்கள். ஷாப்பிங், வெளியே போய் உணவருந்த என எதற்கும் வர விரும்புவதில்லை. அது தனி சர்வீஸாம். யூனியன் சம்பந்தப் பட்டிருக்கிறதாம். சைட்ஸீயிங் முடித்து ஹோட்டலில் விட்டுவிட்டால் அவ்வளவுதான்.
சிக்கிம் புறப்படும் முன்பே உங்கள் பயண ஏற்பாட்டாளரிடம் பேசி, நீங்கள் தங்கும் ஹோட்டலிலேயே காலைச் சிற்றுண்டியோடு இரவு உணவையும் ஏற்பாடு செய்து கொள்ளலாம்(எம்ஏபி). மதியம் வெளியில் வெளுத்துக் கட்டலாம்.

தீஸ்தா நதியில் ‘ரிவர் ராஃப்டிங்’ இருக்கிறது. பாக்தோக்ராவிலிருந்து கேங்டாக் போகும் போதே முடித்து விடுவது உங்களுக்கு நல்ல அனுபவத்தைத் தரும். திரும்ப வரும் போது விமானம் பிடிப்பதில் இருக்கும் மனதால் ரிவர் ராஃப்டிங் பற்றி சிந்திக்க முடியாது.

….
லேடீஸ் ஸ்பெஷல்: ஊரிலுள்ள உறவினர்கள் நண்பர்களுக்கு சிக்கிமிலிருந்து ஏதும் கிஃப்ட் வாங்க விரும்பினால், நினைவில் கொள்ளுங்கள் – சிக்கிமின் முக்கிய மார்க்கெட்டான எம்ஜி மார்க் சனியன்று இயங்குவதில்லை. கடைகளுக்கு விடுமுறை. முன்தினம் அல்லது மற்ற தினங்களில் முடித்துக் கொள்ளுங்கள்.
….

திரும்ப வரும் போது பாக்தோக்ரா வழியே கல்கத்தாவிற்கோ சென்னைக்கோ பறக்க வேண்டுமென்றால், கணக்காக நேரத்தை வைத்துக் கொண்டு பாக்தோக்ரா விமான நிலையத்திற்கு வராதீர்கள். ‘ஒழுங்கு என்றால் கிலோ எவ்வளவு?’ என்று கேட்கும் அந்த விமானநிலையத்தில் எந்த வரிசையும் இல்லாமல் எவரும் எங்கும் நுழையலாம் என்ற நிலையில் குளறுபடிகள் நடக்கும், சரியான நேரத்திற்கு வந்தீர்களேயானால், போர்டிங் பாஸ் வாங்கி – பேக் செக்கின் பண்ணி செக்யூரிட்டி செக்கின் வருவதற்குள் தாவு தீர்ந்து விடும். தவிர, மிகக் குறைவான இடமும் வசதியும் ஊழியர்களும் கொண்ட இந்த விமான நிலையம் கூட்டத்தைக் கையாள முடியாமல் நிர்வாகப் பிதுங்களில் திணறுகிறது. தவிர, இது மேற்கு வங்காளம் என்பதையும் நினைவில் கொள்ளுங்கள். ‘இது இன்னைக்கு மட்டுமா, தெனமும் இதே கதைதானா?’ என்று கேட்ட என்னிடம் ‘நீயாவது கேட்டியே டார்லிங்!’ என்று என் தோளில் சாய்ந்து அழாத குறையாக புலம்பிய இண்டிகோவின் சிம்ரனின் முகமும் கௌரவ்வின் முகமும் இன்னும் நினைவில் இருக்கிறது. (சென்னை, பெங்களூர், மும்பை ஏர்போர்ட் மீது பெரும் மரியாதை வரும் உங்களுக்கு)

இரண்டு மணி நேரம் என்பதற்குப் பதிலாக மூன்று மணி நேரம் முன்னதாக வரவும். பாக்தோக்ரா ஏர்போர்ட்டில் உணவு மிக மிக சுமார் என்பதை நினைவில் கொண்டு வெளியிலேயே சாப்பிட்டு விட்டு அல்லது வாங்கிக் கொண்டு வரவும்.

ஏற்பாடுகளைச் சரியாக செய்து கொண்டு, சிக்கிம் செல்லுங்கள். அட்டகாசமான இடம். அனுபவித்து மகிழ்வீர்கள்.

அதி உன்னதமான பகுதிகளைத் தன்மைகளைக் கொண்டிருக்கும் இந்தியா அதி அற்புதமான நாடு. பயணியுங்கள்! அனுபவம் கொள்ளுங்கள்!

#Sikkim
#Gangtok
#ParamanInSikkim
#SikkimDiary

வாழ்க! வளர்க!

– பரமன் பச்சைமுத்து
மேற்கு வங்காளம்,
02.06.2019

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *