உலகிலேயே மிகச்சிறந்த இடம்…

images-255619014787562127170..jpg

பூங்கானத்தாயா என்று பேரப்பிள்ளைகளால் அழைக்கப்பட்ட பூங்காவனம் கிழவி இறக்கும் வரை படுக்கவேயில்லை. கம்பும் கேழ்வரகும் களியும் உண்ட திருவண்ணாமலைச் சீமையின் அந்தக் காலத்து உடம்பு கிழவிக்கு, கடைசி நாள் வரை நடமாடிக் கொண்டேயிருந்தது. வயதானவர்களுக்கு வரும் அல்ஜைமர் என்னும் மறதி நோய் பற்றி விழிப்புணர்வு இல்லாத அந்நாளில் கிழவி அந்நோயினால் பாதிக்கப்பட்டிருந்தது. எங்காவது புறப்பட்டு நடந்து போய்க்கொண்டேயிருக்கும். கிராமம் என்பதால் எவராவது கண்டு இழுத்து வந்து வீட்டில் விட்டுவிடுவார்கள். நகரமாயிருப்பின் நினைக்கவே முடியவில்லை, ‘ஓக்கே கண்மணி’ படத்து ப்ரகாஷ்ராஜின் மனைவி கதையாயிவிட்டிருக்கும். மழையிலும் வியர்க்க வைக்கும் காட்சி அது. பூங்காவனம் கிழவிக்கு, இளம் வயது நினைவுகள் மட்டுமே தங்கிட மற்றது அழிந்து போனதாம்.

‘தண்ணி வச்சிருக்கன் பாரு, மொண்டு ஊத்திக் குளி!’ என்பது மாதிரி குளிப்பது, உண்பது, உடுத்துவது, உறங்க வைப்பது என எல்லாமும் அவரது மருமகள் சொல்ல சொல்ல செய்து விடும் கிழவி. கொஞ்ச நேரம் ஆள் அசந்தாலும் சிறையிலிருந்து தப்பி ஓடும் கைதியைப் போல செருப்பை மாட்டிக் கொண்டு விடுவிடுவென்று எதையோ நோக்கிப் புறப்பட்டுவிடும். பல முறை இப்படிக் கிளம்பிப் போனக் கிழவியை கண்டு வழிமறித்துக் கொண்டு வந்து சேர்த்துள்ளனர் பலர். ‘வயசாயிடிச்சி நினைவு தப்பிடிச்சி, மரை கழண்டிருச்சி, வெளிய ஓடுது!’ என்று அவரவர் கருத்தைச் சொல்லியே கொண்டு வந்து சேர்த்தனர். ‘எங்குதான் புறப்பட்டுப் போகிறது, எங்கு போக முயற்சிக்கிறது இந்தக் கிழவி?’ என்ற ரீதியில் எவரும் கண்டறிய முற்பட்டதாகத் தெரியவில்லை.

பெங்களூருவிலிருந்து பொங்கல் விடுமுறைக்கு ஊருக்குப் போன போது, அதன் வீட்டு வாசலில் கிழவி நின்றதைப் பார்த்தேன். கிழவிக்குக் காதும் சரியாகக் கேட்காது. கத்திப் பேச வேண்டும்.

‘என்ன்ன! எங்க போறதுக்கு நிக்கற?’

தனது மனநிலையை ஒருவன் புரிந்து கொண்டான் என்று நினைத்ததோ என்னவோ, முகமெல்லாம் உறுதி பரவ, என்னைப் பார்த்துச் சொன்னது, ‘நம்ம வீட்டுக்குப் போயிடலாம்பா!’

வீட்டு வாசலில் நின்று கொண்டு ஊருக்கு வெளியே செல்லும் சாலையைக் காட்டி ‘நம்ம வீட்டுக்குப் போயிடலாம்பா!’ அதுதான் கடைசியாக பூங்காவனம் கிழவி என்னிடம் பேசியது. அடுத்த சில மாதங்களில் இறந்து போனது அது.

ஆழ் மனதில் தான் எப்போதோ வாழ்ந்த ஒரு வீடு அதன் மனதில் பதிந்து போனது. மற்றதெல்லாம் அல்ஜைமரில் அழிந்து போனாலும், தனக்கான வீடு, தான் வசித்த வீடு இன்னமும் மனதில் உட்கார்ந்திருக்கிறது. அதை நோக்கி ஓடுவதிலேயே அதன் உள்ளம் உழன்றிருக்கிறது.

கட்டிடங்களெல்லாம் வீடாவதில்லை. வீடுதான் வீடு. வீதியில் பனங்காய் வண்டி ஓட்டினாலும், சைக்கிள் டயர் வண்டி ஓட்டினாலும், புழுதியில் கிட்டிப்புள் விளையாடினாலும் திரும்ப ஓடி வந்து அன்னையின் மடியில் தஞ்சம் அடைந்து மகிழ்ச்சி பெறும் ஒரு சிறுவனைப் போல எங்கு போனாலும், எங்கு சுற்றினாலும் திரும்ப வந்து தஞ்சம் புக படுத்துக் கிடக்க வீடு தேவைப் படுகிறது மனிதனுக்கு.

எந்த இடம் போனாலும் கடைசியில் வீடு என்பதே தனக்கான இடம் என்பது மனிதனின் அடி மன பதிவிலிருக்கிறது.

ஆறு கடல் ஏரி எல்லாம் கடந்து வலசை போகிற பறவைகளெல்லாம் எத்தனை நாளானாலும் தன் இருப்பிடத்திற்குத் திரும்பவே விரும்புகின்றன என்கிறது பறவைகளைப் பற்றிய ஆராய்ச்சியொன்று. பறவைகளுக்குக் கூடு, மனிதர்களுக்கு வீடு.

செவ்வாய்க்கிரகத்திற்கு ஆராய்ச்சிக்காகப் போய் இறங்கிய அமெரிக்க நாசா விண்வெளி வீரர்கள், இறங்கிய உடன் ஏற்படும் பெரும்புயல் பேரிடரிலிருந்துத் தப்பித்து உயிர் காத்துக்கொள்ள ஓடி வந்து கலத்திலேறி பூமி நோக்கிப் புறப்படுவார்கள். பாதி தூரம் வந்த பின்னே சக வீரர் மேட் டாமன் செவ்வாய் கிரகத்தில் உயிரோடிருக்கிறார், ஆனால் தங்களால் காப்பாற்ற முடியாது என்று உணர்ந்து பதறுவார்கள். ‘மார்ஷியன்’ என்ற படத்தின் இக்காட்சிகள், யாருமற்ற சுவாசிக்கக் காற்றற்ற செவ்வாய் கிரகத்தில் தனியாக மாட்டிக்கொண்ட மேட் டாமனின் தவிப்பை நமக்கும் தந்து விடும். எப்படி எப்படியோ பூமிக்குத் தகவலனுப்பி தன் இருப்பை உணர்த்தும் நாயகன், அமெரிக்க அரசின் உணர்ச்சி பூர்வமான விசாரிப்புகளுக்கெல்லாம் ஒரே வரியில் பதில் சொல்வார் இப்படி, ‘ஐ வாண்ட் டு கம் ஹோம்!’. ஆமாம்… ஹோம் ஈஸ் ஹோம்!

எவ்வளவு வெளியே திரிந்தாலும் ஒரு நிலையில் தன்னிடத்திற்குத் திரும்பவே விரும்புகிறது மனித மனம். தினகரனைப் போல எண்ணற்ற வீடுகளைக் கொண்டிருப்பவர்கள் கூட தான் இருக்க வசிக்க ஒரு வீட்டையே தேர்வு செய்கிறார்கள்.

உலகிலே மிகச் சிறந்த இடம் வீடுதான் எல்லா மனிதர்களுக்கும். வீடு என்பது ஒரு மனிதன் தன்னை பதுக்கிக் கொள்ளும், தன்னை ஆசுவாசப்படுத்திக்கொள்ளும், உயிர்ப்பித்துக் கொள்ளும் இடம். அவனை உருவாகலகிக் கொள்ள உதவும் இடம். தான் தானாகவே இருக்கும் இடம். ஒரு வீட்டின் அந்த நான்கு சுவர் இடையே உள்ள அந்த அறையின் வெளியில் ஒரு மனிதனின் எல்லா உணர்வுகளும், வாழ்வின் முக்கியத் தருணங்களும் கலந்து நிற்கின்றன. ‘உங்க அப்பா கட்ன வீடு எனக்கு இல்லியாப்பா… அண்ணாமலை!’ என்று மனோரமா அழும் காட்சியும், ‘அசோக்… உன் காலண்டர்ல குறிச்சி வச்சிக்கோ! இந்த நாள்… நீ எப்டி என் வீட்ட இடிச்சி என்னை நடுத்தெருவுக்கு கொண்டு வந்தியோ…’ என்று ரஜினி பேசும் அந்தக் காட்சியும் ‘அண்ணாமலை’ படத்தோடு மக்களை ஒன்ற வைத்ததற்குக் காரணம், வீடு பற்றிய மக்களின் உள்ளிருக்கும் உணர்வே.

எவ்வளவு வசதியான வாழ்க்கையைப் பெற்றாலும் புலம் பெயர்ந்த மக்களுக்கு, வசதிகளற்ற மிகச்சிறியதாக இருந்தாலும் தங்கள் சொந்த மண்ணிலிருந்த வீடு பற்றிய ஏக்கம் எப்போதும் இருந்து கொண்டேதானிருக்கிறது. பிழைப்பிற்காகத் தன்னைப் பிடுங்கி வந்து பெருநகரத்தில் வைத்து வளர்த்துக் கொண்ட பலருக்கு, இன்னும் சில வேர்களாவது தன் ஊரின் பக்கம் ஓடிக் கொண்டுதானிருக்கிறது. பெரும் புகழ்பெற்று வெளியூரில் வாழ்ந்தாலும் இறந்த பின்பு சொந்த ஊரிலேயே தான் அடக்கம் செய்யப்பட வேண்டும் என்று பிள்ளைகளிடம் கேட்டுக் கொண்ட பெருமக்கள் சிலரை நானறிவேன்.

பன்னாடுகளிலும் பல கட்டிடங்களை வாங்கியும் பல வசதிகளோடு வாழ்ந்தும் தனக்கான வீடு என்ற உணர்வு எதிலும் வர முடியாமல் வாழ்பவர்கள் வாழ்க்கை வெறுமையில், மன உளைச்சலில் முடிகிறது. ஏழு நட்சத்திர ஐடிசி க்ராண்டு சோழாவின் வெண் பஞ்சனையில் புரண்டு புரண்டு உறக்கம் வராமல் தவிப்பவன் கூட, ஒன்றுமில்லாத தன் வீட்டின் வெறுந்தரையில் விரிக்கப்பட்ட பாயில் பட்டென்று தூங்கிப் போவான். சின்ன வீடோ (!), பெரிய வீடோ… வீடு வீடுதான்!
வீடுதான் வீடு!

தனது வீட்டை நோக்கிய முயற்சியே மனிதனை பொருளீட்ட வைக்கிறது, சாதிக்க வைக்கிறது, ஊழல் செய்ய வைக்கிறது. ஓட வைக்கிறது. வீட்டைத் துறந்த மெய்ஞானிகள் கூட ‘வீடு பேறு’ வேண்டும் என்று வீட்டை அடையும் மறுமையை நோக்கியே முயல்கிறார்கள்.

உலகம் முழுக்க ஓடினாலும் திரும்ப ஓடி வர வைக்க என்ன இருக்கிறது வீட்டில்! மொத்த குடும்பமும் உடனிருக்க வெளியூர் பயணம் போனாலும், ஒரு நிலைக்கு மேல் வீடு நோக்கியே குவியம் கொள்கிறது உள்ளம். வீடென்பது வெறும் கட்டிடம், கதவு, சன்னல், கட்டில் என்பதைத் தாண்டி… இது என் ஊர், என் மண், எனக்கான இடம் என்ற ஒரு தனியான உணர்வு.

மணக்குடியின் பூங்காவனம் கிழவியானாலும் சரி, மார்ஷியன் மேட் டாமன் ஆனாலும் சரி, ‘நம்ம வீட்டுக்குப் போயிடலாம்ப்பா!’ ‘ஐ வாண்ட் டு கம் ஹோம்!’ என்று அவரவர் மொழிகளில் ஒரே உணர்வைக் கொண்டிருக்கவே செய்கிறார்கள். தனக்கான இடமான, தனது வீட்டிற்குப் போக வேண்டும்.

பனி படர்ந்த இமயத்தை எவ்வளவு ரசித்தாலும், ஒரு நிலையில் உள்ளம் வீட்டை நோக்கி ஓடத்தானே செய்யும். சிக்கிமில் விடுமுறையைக் கழித்து விட்டு… வீட்டிற்கு வந்து விட்டேன்.

வணக்கம் சென்னை!

– பரமன் பச்சைமுத்து
சென்னை
04.06.2019

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *