‘நேர் கொண்ட பார்வை’ – திரை விமர்சனம் : பரமன் பச்சைமுத்து

Nerkonda-Paarvai-Tamil-Ringtones-For-Cell-Phone

நேர் கொண்ட பார்வை

இலக்குகளை நோக்கி அமைதியாக ஓடிக்கொண்டிருக்கும் மாநகரின் மாதுக்கள் மூன்று பேரின் வாழ்வில் நடைபெறும் ஒரு சம்பவத்தால், வாழ்வின் போக்கே மாறிவிட, திக்கற்றுத் திணறி நிற்கும் அவர்களுக்கு உதவிட பழைய பஞ்சாங்கமாகிப் போன ஒருவர் வந்தால், அதிகார பலமும் பண பலமும் கொண்ட பெரும் புள்ளிகளிடமிருந்து புள்ளிமான்களை சட்டத்திற்குட்பட்டு காப்பாற்ற முடியுமா, என்னவாகிறார்கள் அவர்கள்? என்பனவற்றை கதையாக்கி அருமையாக திரைக்கதை அமைத்து தந்திருக்கிறார்கள் ‘நேர் கொண்ட பார்வை’ திரைப்படமாக.

கதையை மட்டுமே முதன்மையாகக் கொண்டு மோகன்லால் சாதாரணமாணவராக வந்து தேசிய விருது வென்ற ‘மணிசித்ரதாழு’ படத்தை இரண்டு சிட்டிகைகள் ஹீரோயிசம் சேர்த்து சரியான கலவையாக்கி ‘ஆப்தமித்ரா’ ‘சந்திரமுகி’ செய்ததுபோல், ஹிந்தியில் பெரும் வெற்றி பெற்ற ‘பிங்க்’கில் கொஞ்சூண்டு ஹீரோயிசம் சேர்த்து அழகாகத் தந்திருக்கிறார்கள்.

அஜீத் அட்டகாசமாகப் பொருந்துகிறார். அவரது ரசிகர்களுக்காக முன்பகுதியும், கதைக்காக பின்பகுதியும் என்று தந்ததையுணர்ந்து அருமையாகச் செய்திருக்கிறார். நல்ல முயற்சி.

ஷ்ரதா ஸ்ரீநாத், பிக் பாஸ் அபிராமி வெங்கடாசலம், ஆண்ட்ரியா டாரியங் என படத்தின் மையப் பாத்திரங்களை செய்த மூவரும் அழகாக செய்திருக்கிறார்கள் என்றாலும் முதல் இருவருக்கும் அதிக வாய்ப்பு. அட ரங்கராஜ் பாண்டே வக்கீலாக. கொடுத்த வாய்ப்பை சரியாகப் பயன்படுத்தியிருக்கிறார்.

‘இறைவி’ படத்தின் பூஜா தேவரியாவின் பாத்திரப் படைப்பை வரிந்து கட்டிக் கொண்டு எதிர்த்த சிலர் இந்தப் படத்தின் மீரா பாத்திரத்தின் தன்மையை எதிர்ப்பார்களோ என்ற எண்ணம் வரவே செய்கிறது.

வித்யா பாலனின் பாத்திரம் முடியும் விதம் சரியாக சொல்லப்படவில்லையே என்று தோன்றினாலும், அழகாகச் செய்யப்பட்ட திரைக்கதை அதைத்தாண்டி நம்மை ஒன்ற வைத்துவிடுகிறது எனபது சிறப்பு.

பெண்களை அவர்களாகவே ஏற்காமல், நடை உடையை மட்டுமே வைத்து தாமாகவே ஒரு கருத்து வடிவம் இயற்றி அதை கண்களின் முன்னே கட்டிக் கொண்டு அதன் வழியேதான் இன்னமும் அவர்களை பார்க்கிறது இந்த சமூகம், அந்தப் பார்வையை மாற்றி ‘நேர் கொண்ட பார்வை’யை கொள்வோம் என்று பொது நல சங்கதியை அழுத்தமாக பதிவு செய்கிறது படம்.

வி-டாக்கீஸ் வெர்டிக்ட்: ‘நேர் கொண்ட பார்வை’ – பெண்களை நேர்கொண்ட பார்வையில் பார் என்று ‘தல’யாய கருத்து சொல்லும் படம், நன்று.

  • திரை விமர்சனம் : பரமன் பச்சைமுத்து

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *