அந்தக் கையை தொட்டுப் பாக்கணும், இப்படிக் கொடுங்களேன்

நாம் அசந்து போய் நிமர்ந்து பார்க்கும் ஆளுமைகளை சட்டென்று அருகில் நிறுத்தி வியப்பிலாழ்த்தி விடுகிறது வாழ்க்கை.

சுஜாதா, வண்ணதாசன், நாஞ்சில் நாடன், வாலி, வைரமுத்து, எஸ் ராமகிருஷ்ணன், சிட்னி ஷெல்டன் (ரா கி ரங்கராஜன் வழியே) என பலரை எனக்கு முதல் அறிமுகம் செய்து வைத்ததற்காக குமுதத்திற்கும் விகடனுக்கும் நான் பெரும் நன்றிக் கடன்பட்டவன். அப்படி விகடனாலும் குமுதத்தாலும் என்னைப்போலவே பலரின் இதயத்திற்குள் நுழைந்தவர் மந்திர விரலுக்கு சொந்தக் காரரான இவர். ம செ என்று சொல்லப்படும் மணியன் செல்வம் என்ற பெரும் ஆளுமை.

அந்த வயதில் என்ன புரியும் என்று கூடத் தெரியாமல் சித்தப்பா வாங்கி வரும் குமுதத்தில் ‘கருப்பு சிவப்பு வெள்ளை’ என்ற பெயரில் சுஜாதா எழுதிய தொடரை படித்திருக்கிறேன், அந்தப் பக்கங்களில் வரும் ‘யானை இடறிய வீரனின் தலை’ படங்களைப் பார்த்து மிரண்டிருக்கிறேன். பல ஆண்டுகள் கழித்து அதே தொடர் ‘ரத்தம் ஒரே நிறம்’ என்று வந்த போது ‘சிப்பாய் கலகம்’ ‘சுதந்திரப் போராட்டம்’ ஆகியவற்றை புரிந்து கொள்ள முயற்சித்திருக்கிறேன், அதில் வரும் படங்களின் வழியே.

சிவகாமியின் சபதத்தின் நீலகேசியின் உருவத்தையும் அவனது நாசியின் நேர்த்தியையும் கண்டு மிரண்டவர்கள் பல உண்டு தமிழ் கூறும் நல்லுலகில்.

சு வெங்கடேசனின் வெள்பாரியை எவர் வாசித்திருந்தாலும், பச்சை மலையை, நீலனை, வேட்டுவன் பாறையை, கபிலரை, பழையனை, தேக்கனை, வேளிர் குல மகளை, பறம்பின் தலைவன் பாரியை என மொத்தத்தையும் உள்வாங்கியிருப்பர். ஆனால் அவைகளின் உருவகங்களை ஓவியர் ம செ செய்திருக்கும் ஓவியங்களை வைத்தே உள்ளே பதிந்திருப்பர்.

வாலியின் ‘கிருஷ்ண விஜயம்’ வைரமுத்துவின் ‘கருவாச்சி காவியம்’ என இரண்டுக்கும் உருவம் தந்து என்னுள் அதிர்வலைகளை பல நாட்களுக்குத் தந்தவர் ம செ.

ஒரு முறை ஆர் ஏ புரத்தின் பிள்ளயார் கோவிலருகில் இரு சக்கர வாகனத்தை வைத்துக் கொண்டு சாலையைக் கடக்க நின்ற மனிதரைக் கண்டு ‘ஐய்ய்யோ! ம. செ நிக்கறாரு!’ என்று உணர்வதற்குள் என் காரும் கடந்து விட்டது அவரும் வண்டியில் விரைந்து விட்டார். ‘சே… நடராஜரை, நீலகேசியை, காளிங்க நர்த்தன கிருஷ்ணனை, கருவாச்சியை, வேள்பாரியை கண் முன்னே உயிர்ப்பாகக் காட்டிய அந்த விரல்களை பார்க்க வேண்டும். ஒரு முறையாவது அந்தக் கையைத் தொட்டுப் பார்க்க வேண்டும்!’ என்று சொல்லிக் கொண்டே மலர்ச்சி மாணவர்கள் சிலருக்கு குறுஞ்செய்தி அனுப்பிவிட்டு அலுவகத்திற்கு போனேன்.

இன்று விகடன் துணையாசிரியர் எழுத்தாளர் தமிழ்மகன் இல்லத்திருமணத்தில் இருந்த போது திடீரென அவர் வரையும் ஓவியத்தைப் போலவே பளிச்சென்று வந்த ம செவை எதிர்கொண்டு விசாரிக்கும், அவரை அழைத்துக் கொண்டு போய் உணவு அருந்த வைக்கும் வாய்ப்பு கிட்டியது.

‘இவர் பரமன் பச்சைமுத்து. தன்னம்பிக்கைப் பேச்சாளர்’ என்று அவர்கள் அறிமுகம் செய்ததெல்லாம் எங்கோ மிகக்குறைவான டெசிபெல்லில் கேட்டது எனக்கு.

‘ஐயா, வைரமுத்து சிவாஜிக்கு சொன்னதைதான் நான் உங்களுக்கு சொல்வேன். ‘கப்பலோட்டிய தமிழனை, கட்டபொம்மனை, அப்பரை கண்டதில்லை நாங்கள். உங்களைத்தான் அவர்களாகத் திரையில் பார்த்திருக்கிறோம் நாங்கள்’. அதேதான் எங்கள் நிலையும். ஆயனச்சிற்பியை, வந்தியத்தேவனை, நீலகேசியை, வேள்பாரியை கண்டதில்லை நாங்கள். உங்களின் விரல்வழி ஓவியங்களின் வழியே அவர்களை பார்த்தோம்.’

‘நீங்க என்ன செய்யறீங்க? பேச்சாளரா, வளர்ச்சி இதழா? உங்க கார்டு குடுங்களேன்’ என்றெல்லாம் அவர் சொல்லிக் கொண்டிருக்கையில், நான் அவரிடம் கேட்டது, ‘அந்தக் கையை தொட்டுப் பாக்கணும், கொஞ்சம் இப்படி கொடுங்களேன்!’

( குறிப்பு : ‘பொன்னியின் செல்வன்’ வரைந்தது அவரது தத்தை மணியம் என்பது நினைவில் இல்லாது, ‘வல்லவரையன் வந்தியத்தேவன்’ பற்றி அவரிடம் பேசியது பின்னரே நினைவில் வந்தது )

– பரமன் பச்சைமுத்து
சென்னை
02. 12. 2019

Facebook.com/ParamanPage

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *