ஏவிசிசிபி அலுமினி மீட் – குறிப்பு 3

wp-15776884948816429448680821513489.jpg

AVCC Polytechnic 91 Batch Alumni Meet’

(முந்தைய பதிவுகளின் தொடர்ச்சி )

குறிப்பு – 3:

டிஎஸ்ஏ தொடங்கி நகரில் பல பேருக்கு கடன் தந்து அதிலிருந்து மாறி கட்டுமான நிறுவனம் நடத்தும் தன் கதையை சந்திரமௌலி நறுக்கென்று கூறியது சிறப்பு. கல்லூரி வகுப்புகளில் எப்பவும் எழுந்து கேள்வி கேட்கும் மௌலி கண்ணில் வந்து போனதை தவிர்க்க முடியவில்லை. மீசையைத் தவிர வேறு எந்த தோற்ற மாற்றமும் இல்லை மௌலியிடம். அப்படியே இருக்கிறான்.

திருவாரூரிலிருந்து கணவர், மகன், கனடாவுக்கு செல்லவிருக்கும் மகளோடு மஞ்சள் மஞ்சேள் என்று வந்து அசத்தினார் *வனிதா*. உப்பிய கன்னங்கள் நீண்ட கூந்தல் எல்லாம் மாறி மிஷேல் ஒபாமா மாதிரி ஹேர்கட்டில் வேறொரு வடிவில் மிக மிக பக்குவப்பட்ட வனிதா தெரிந்தார். வனிதாவின் பகிர்வும் பகிர்வைச் செய்த வனிதாவையும் பார்க்கவே நிறைவாக இருந்தது.

தனது தந்தையின் மறைவின் இழப்பை எதிர் கொண்ட விதமும் அதை எதிர்கொண்ட போது எழுந்த கேள்விகளும், அவற்றில் கிடைத்த வெளிச்சம் எப்படி உதவின என்பது பற்றிய பகிர்வு நன்று.
( அந்தக் காலத்திலிருந்தே மஞ்சள்தான் பிடிக்கும் போல )

….
மகன் திரைத்துறையில் வளர்ந்து வரும் உதவி இயக்குநர், அன்பான கணவர் என மகிழ்ச்சியில் பூசி நம்ப முடியா வண்ணம் இருந்தார் நப்பின்னை.
நப்பின்னை.

நப்பின்னை நெய்வேலியில் இருக்கிறாரென்றே கேள்வியுற்ற நமக்கு அவர் புதுச்சேரியில் வசிக்கிறாரென்பது செய்தி. கணவர் என்எல்சியில் பணி புரிகிறார்.
( முரளிப்பிரகாஷின் அண்ணனும் என்எல்எசி ஊழியரே!)

நப்பின்னையின் வித்தியாசத் தமிழ் கண்டு ‘மலையாளமோ தாய் மொழி?’ என்று கேட்காமல் இருக்க முடியவில்லை. ‘இல்லை, தெலுங்கு!’ என்று பதில் வந்தது அவரிடமிருந்து.

….

குழந்தை முகமாக ஒல்லியாக அடி வயித்திலிருந்து ‘ப்ரசன்ட் மேடம்’ என்று சொன்ன ஜகதீஸ்வரி இன்று பக்குவப்பட்ட பெண்மணியாய் ( முகம் அதே, அப்படியே!) நம் பேட்சிலேயே முதன்முதலில் திருமணம் செய்து கொண்டவர் இவர்தான். புதுச்சேரியில் வசிக்கிறார். கட்டுமான நிறுவனம் நடத்துகிறார் அவர் கணவர்.

….

‘ஓட்டப் பந்தயத்தில் ஓடிய அந்த பெண்ணா இது?!’ என்று எண்ணுமளவிற்கு மாறிப்போயிருந்தார்
மீனாட்சி சுந்தரி – அதே உயரம் அதே உடல்வாகு, வாழ்வின் அனுபவங்கள் பக்குவத்தைக் கூட்டி தோற்றத்தில் கம்பீரத்தைக் கூட்டியுள்ளது.

இதே சென்னையின் ஒரு பகுதியான ஜமீன் பல்லாவரத்தில் குடியிருப்பதும், பிள்ளைகள் வளர்ந்து விட்டதும், ஒரு கட்டுமான நிறுவனத்தில் பணிபுரிவதும் மீனாட்சி சுந்தரியின் சுருக்கமான பகிர்விலிருந்து தெரிய வந்தது.
…..

‘பொழுது போக்கிற்காகவும் சுவராசியத்திற்காகவும் வாசிக்கப்படும்
ராஜேஷ்குமார் க்ரைம் நாவல்கள் ஒருவரது வாழ்வின் துறையையே மாற்றுமா!’ என்ற வியப்பில் தள்ளியது வசுமதி மைக்கை எடுத்து அமர்ந்து கொண்டே பேசிய போது.

நீதித்துறையில் பணி புரியும் வசுமதி கணவரோடும் பிள்ளைகளோடும் ஈரோட்டில் வசிக்கிறார். கல்லூரிக்குப் பிறகு நடந்த மாற்றங்களை வசுமதி சொன்ன போது வியப்பாக இருந்தது.

….
திருவாரூரிலிருந்தும், புதுச்சேரியிலிருந்தும் ஈரோட்டிலிருந்தும் சென்னையிலிருந்தும்
கூடவே வந்த இவர்களது குடும்பத்தாருக்கு பெரும் நன்றிகள்.

‘வெறும் கையோட போகக்கூடாதுன்னுதான்…’ என்று நம் எல்லோருக்கும் இவர்கள் அன்பளிப்பு கொண்டு வந்தது நெகிழ்ச்சி.

என்னிடம் பேசும் போது, ‘சார்…’ என்று மீனாட்சி சுந்தரி சொன்னது அதிர்ச்சி.

‘ரிட்டன் கிஃப்ட் மொமென்ட்டோ’வில் அவரவர்க்கான இடத்தில் எழுதி கையொப்பம் போடச் சொன்ன போது, ‘இருபத்தியெட்டு வருஷங்களுக்கு பிறகு இப்பதான் எழுதறேன்!’ என்று ஒரு தோழி சொன்னது, கொஞ்சம் கலவையான உணர்வைத் தந்தது.

( தொடரும் )

– பரமன் பச்சைமுத்து
காஞ்சிபுரம்
29.12.2019

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *