வீட்டுக்கு வந்த சாரைப் பாம்புக் குட்டி

wp-15793510869645133351545504007296.jpg

பாம்புகள் என்றதும் என்ன தோணும் உங்களுக்கு?

‘வீட்டுக்குள்ள வந்துது, அடிச்சித் தூக்கிட்டோம்!’ 

நீண்ட கழியொன்றின் நுனியில் ஒரு பாம்புக் குட்டியை மாட்டித் தூக்கிக் கொண்டு வந்தார் எதிர் வீட்டு முருகதாஸ். 

‘என்ன பாம்பு இது?’

‘சாரை, குட்டி!’

தெருவில் தரையில் கிடத்தப்பட்டது பாம்பு.

‘செத்துப் போச்சி, தூக்கிப் போட வேண்டியதுதான்!’

‘ஆமாம், செத்திடுச்சி!’

‘திடீர்னு இப்படி கொண்டு வந்தா பயந்திருவோம் இல்ல, இப்படி கொண்டு வராதீங்க!’ என்று பின்னே நகர்ந்தான் தெருவில் நின்று பேசிப் கொண்டிருந்த ராஜா.

தெருவில் தரையில் கிடந்தது அடிபட்டப் பாம்பு. தலையையும் கழுத்தையும் இணைக்குமிடத்தில் பலமான அடி விழுந்திருந்தது. ‘டேய் பரி, ஃபோட்டோ எடுறா பாம்பை’ என்று சொல்லிவிட்டு குனிந்து பாம்பையே பார்க்கிறேன்.

செத்துப் போனது என்று நினைத்த பாம்பு திடீரென நகர்கிறது. சுற்றியிருந்தவர்கள் வெடுக்கென நகர்கிறார்கள்.  அடிபட்ட தலையைத் தூக்க முடியாமல் அரை நினைவில் நகர்ந்து ஓட முயல்கிறது சாரைப் பாம்பு குட்டி.

‘சிவா… குளிக்கலாம்!’  வீட்டுக்குள்ளிலிருந்து குரல் வர எழுந்து போகிறேன், ‘உயிர் இன்னும் போகல. அப்ப வெட்டி வெட்டிப் போட்டுர்றேன்!’ என்று முருகதாஸ் சொல்வதைக் கேட்டுக் கொண்டே.

பாம்பு என்ற சொல்லும், அதன் உருவமுமே போதுமானதாக இருக்கிறது மனிதர்களை பயமுறுத்துவதற்கு.  எல்லாப் பாம்புகளுமே நச்சுப் பாம்புகளில்லை என்பது பலருக்குப் புரிவதில்லை. புரிவதற்கு முன்பே பயம் தொற்றிக்கொள்கிறது. பாம்பு என்றதுமே பதற்றம் வந்துவிடுகிறது.

கடந்த சில நாட்களாக தினமும் ஒரு பாம்பையாவது பார்க்கிறேன் அல்லது பாம்பு செல்லும் வழியில் கடக்கிறேன்.  மழைக்காலம் முடிந்து பனிக்காலம் வரும் நேரத்தில் நிலம் முழுவதும் புதிய பறவைகள் வலம் வருவதைப் போலவே, பாம்புகளும் ஊர்ந்து வெளிவருவதும் நிகழ்கிறது.

நேற்றிரவு புதுச்சேரியிலிருந்து மணக்குடி வரும் வரையில் முட்லூருக்கும் கொத்தட்டைக்கும் இடையில் ஒரு சாரைப்பாம்பு சரசரவென்று ஊர்ந்து போனதை காரின் விளக்கொளியில் நாங்கள் பார்த்தோம். புவனகிரியிலிருந்து மணக்குடி வரும் வழியில் அதை விடப் பெரிய சாரைப் பாம்பு ஊர்ந்து போய் வாய்க்கால் புதரில் மறைந்தது.

சிறுவனாக ஆளவந்தார், சண்முகத்தோடு மணக்குடி பாப்பாக் குளத்தில் குதித்து கும்மாளமடித்துக் குளித்த போது ஒரு தண்ணீர் பாம்பு என்னைக் கடித்து விட்டது. கரையேறி வீட்டுக்கு ஓடியதும் துவட்டி விட்டு அந்தக் காயத்தில் சுண்ணாம்பைக் குழைத்து வைத்தார் அம்மா. அதோடு பாம்பு பற்றிய பதற்றம் ஓடி விட்டது.

‘நம்ப பங்களாவில நாலஞ்சி நல்ல பாம்பு இருக்கு. வேடனைக் கூட்டிட்டு வர்றாங்களாம் பிடிக்க!’ இதைக் கேட்டதும் பள்ளிச்சிறுவனான நான் ஊருக்கு வெளியே வயல்சூழ்ந்த களத்து மேட்டில் கட்டப்பட்டிருந்த அந்த சிறு பழையக் கட்டிடத்தை நோக்கி ஓடினேன். வேடன் என்று சொல்லப்பட்ட அந்த மனிதர் அரையில் அழுக்கு வேட்டியை மடித்துக் கட்டியிருந்தார். மேலுடம்பில் உடை எதுவுமில்லை. ஒரு சுளுக்கியும்( நீண்ட கழியின் முனையில் கூரானதும் கொக்கி போல் வளைந்தும் இருக்கும் அமைப்பு கொண்ட இரும்பு ஆயுதம்) ஒரு வலுவான கழியும் எடுத்துக் கொண்டு கட்டிடத்தின் அறைக்குள் போனார். (மணக்குடிக்கும் புவனகிரிக்கும் இடையே குடியிருப்பைக் கொண்டிருந்த இவர்கள் ‘இருளர்கள்’ என்று அன்று தெரியாது. அந்தக் குடியிருப்பை அன்றிலிருந்து இன்றுவரை ‘வேடன் தோப்பு’ என்றே அழைக்கிறோம் ).

‘டேய், சின்னப் பசங்கள்லாம் தூரமா அந்தப் பக்கம் போங்கடா!’ என்று விரட்டினார் பாலதண்டாயுதம் சித்தப்பா. உள்ளே போகும் வேடனைப் பார்க்க பார்க்க ஆவலாக இருந்தது.  சில நிமிடங்களில் வெளியே வந்த வேடனைப் பார்த்ததும் பெண்கள் ‘ஐயோ… பாரேன்!’ என்று சத்தமின்றி முணுமுணுத்தனர். வேடன் ஒரு ராஜநாகத்தை சுளுக்கியால் குத்தி அப்படியே இரும்பு முனையில் மாட்டி தூக்கி வந்தார். அது அசைந்து அசைந்து போராடியது மற்றவர்களுக்குப் பீதியைத் தந்தாலும், சிறுவனான எனக்கு ஆவலைத் தூண்டியது. 

அதிகம் பேர் பார்த்தேயிராத பார்த்தால் பதறும் அந்த நிகழ்வை அப்போதுதான் நிகழ்த்தினார் அவர். அந்த நாகத்தை அப்படியே தரையில் கிடத்தி, அதன் தலையை அந்த சுளுக்கியால் குத்தி அழுத்திப் பிடித்துக் கொண்டு, காலால் பாம்பின் உடலை இழுத்து நேராக்கி வாலை மிதித்துக் கொண்டார். நேராக இழுத்துப் பிடிக்கப்பட்ட அந்த பாம்பின் உடலை ஒரு நீண்ட கத்தியால் கோடிட்டு கிழித்துக் கொண்டே வால் வரை போனார். சிவப்பு வண்ணத்தில் குபுக்கென்று குடல் வெளியே சரிந்து விழுந்ததைப் பார்த்ததில் என்னவோ செய்தது. பாம்பு பற்றிய என்னிடம் இருந்த கொஞ்சம் நஞ்சம் பயமும் பறந்து  போனது அன்றோடு.

மானம்பாத்தான் வாய்க்காலின் ஆனாத்துக்கட்டையின் அடைக்கப்பட்ட திருகு கதவணையின் இடைவெளி வழியே வழிந்தோடும் நீரில் பாய்ந்து துள்ளி விழும் மீன்களை அப்படியே லபக்கென்று பிடித்து விழுங்க ஆடாமல் அசையாமல் வரிசையாய் நான்கைந்து தண்ணீர் பாம்புகள்  காத்திருப்பதைப் பார்க்கவே ஆவலாய் இருக்கும் அந்த வயதில். ‘ஒன் வே’யில் வரும் வாகன ஓட்டியைப் பிடிக்கக் காத்திருக்கும் காவலரைப் பார்க்கும் போதெல்லாம் கதவணை தண்ணீர்ப்பாம்புகள் நினைவில் வருகின்றன இன்றும்.

மணக்குடி பள்ளியின் பின்பக்க வேலியில் கோவைக் கொடி படர்ந்த மரத்தில் பச்சைப் பசேலென்று இருக்கும் பச்சைப் பாம்பை என் முகத்திற்கருகில் கண்டே சரேலென நகர்ந்து பார்த்து வியந்திருக்கிறேன்.

மலரவர் ராமசாமியின் புதிய தொழில் நிலையமொன்றைத் திறக்க சில மாதங்களுக்கு முன்பு பெங்களூரு சென்றிருந்த போது, ஹோட்டலிலிருந்து இறங்கி காரிலேறப் போகையில் பெலந்தூர் ஏரியிலிருந்து வந்த ஒரு காளியாங்குட்டிப் பாம்பைப் பார்த்தேன். மார்வாடிகளும் வட இந்தியர்களும் அணியும் சட்டையைப் போல கோடுகளும் வட்டங்களும் கொண்ட அந்தப் பாம்புக் குட்டி வளைந்து வளைந்து விரைந்து எங்கள் காரினடியில் புகுந்து அடுத்த பக்கம் வந்து அடுத்த காரின் அடியில் போனது. அடுத்த காரினடியில் நாங்கள் குனிந்து பார்த்த போது, ‘க்யா!?’ என்று ஏகத் தாளத்தில் (எகத்தாளத்தில் அல்ல) கேட்ட அந்த வண்டியின் டிரைவரிடம், ‘ஒன் ஸ்மால் ஸ்நேக்!’ என்று நாங்கள் சொன்ன நொடியில் அலறியடித்துக் கொண்டு காலை உள்ளிழுத்து கதவுகளை ஏற்றிக்கொண்டார். காரின் வெளியே தரையில் குத்துக்காலிட்டமர்ந்து குனிந்து அடியில் பாம்பைத் தேடினோம் நாங்கள்.

எந்த மொழியானாலும் பாம்பு என்பதைக் குறிக்கும் சொல்லே போதுமானதாக இருக்கிறது மனிதர்கள் அச்சம் கொள்வதற்கு.  பாம்புகளும் மனிதர்களைக் கண்டு அஞ்சுகின்றன போலும். பயங்கொள்வதாலும், சினங்கொள்வதாலுமே பாம்புகள் மனிதர்களைக் கடிக்கின்றன என்கின்றனர் உயிரியல் ஆராய்ச்சியாளர்கள்.  கல்லூரித் தோழன் மணிமாறனின் தந்தை தங்க. அரங்கநாதன் பாம்பு கடித்தே இறந்தார். ஜிப்மர் மருத்துவமனையிலிருந்து செல்லிடப் பேசியில் அழைத்து மணிமாறன் அழுதது  இன்னும் காதுகளில் இருக்கிறது.

ஒரு பனிக்கால மாலையில் வீட்டின் பின்கட்டின் பின்புறமுள்ள கழிவறைக்குப் போன அப்பாவின் கண்ணில் பட்டிருக்கிறது ஊர்ந்து விரைந்த ஓர் ஐந்தடி நீளமுள்ள ஒரு நல்ல பாம்பு.  மணக்குடியின் எங்கள் வீடு மூன்று புறங்களிலும் செடிகளாலும் மரங்களாலும் ஆனது. தொடு தூரத்தில் நீர் நிறைந்த பாப்பா குளமும் புதர்களும் வேறு.  அந்தப் பாம்பிற்கு பயணிக்கும் வழியாகப் போனது எங்கள் வீட்டின் தோட்டம். வேடனை அழைத்து வந்து நாகத்தைப் பிடிக்க வேண்டும் என்று நினைக்கவேயில்லை அப்பா.  ‘ராத்திரியில வெளிய கொள்ள போறதுக்கு எடைஞ்சலா இருக்கு, பூச்சி பொட்டு இருக்கு’ என்று சொல்லி, தொட்டி முற்ற சுவரைத் திறந்து உள்ளிருந்தே நடந்து போவதற்கு ஒரு குளியலறையும் கழிவரையும் கட்டினார் அப்பா. குகன் திருமணத்தின் போது புழங்க இடம் வேண்டும் என்று மூன்று பக்கங்களிலுமிருந்த செடிகளை செத்தி அப்புறப்படுத்தி விட்டோம்.

அந்த நாகப் பாம்பு இன்னும் இருக்கிறதா, என்னவானது என்று தெரியவில்லை. அப்பா கட்டிய பாத்ரூம் இருக்கிறது.  அப்பா மட்டும் இல்லை. அப்பா இறந்து இன்றோடு பத்து நாட்களாகின்றன.

– பரமன் பச்சைமுத்து
கீழமணக்குடி
18.01.2020

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *