பூமி சுழலவே செய்யும். நாள்கள் கழியவே செய்யும்.

உள்ளுணர்வு அலாரம் எழுப்ப துயிலெழுபவனுக்கு செல்லிடப்பேசியில் அடிக்கும் வெளி அலாரம் இரண்டாம் கட்ட ஏற்பாடே.  செல்லிடப்பேசி அலறியபோதும் கண் திறக்க இயலவில்லை இன்று. உடம்பு கொதிக்கிறது.

‘இன்னும் சில நிமிடங்கள் கொடேன்!’ என்று கண்களும் உடலும் கெஞ்சுகின்றன.  ‘ஐயப்பா ஸ்கூல்ல ப்ரோக்ராம் இருக்கு, கோட் அயர்ன் பண்ணனும். உடற்பயிற்சி, ஓஎம்ஆர் ட்ராஃபிக்…’ என அறிவு முணுமுணுத்தது.

‘முடியுதோ இல்லையோ, எழுந்துதான் ஆகனும், எந்திர்ரா டேய்!’ என்று சொல்லிக் கொள்ளுவதற்குள் எழுந்து போர்வையை சரியாக மடிக்கத் தொடங்கி விட்டன கைகள்.

‘கமிட்மெண்ட்ஸ்… கமிட்மெண்ட்ஸ்தான் மனிதர்களை எழுப்புகிறது, எழ வைக்கிறது,  ஓட வைக்கிறது!’

தாங்கள் எப்படியிருந்தாலும், தங்களுக்கு என்ன நடந்தாலும் எழுந்து ‘கமிட்மெண்ட்’டுக்காக ஓடிக்கொண்டிருக்கும் பெண்மணிகள் மீது பெரும் மரியாதை வருகிறது.  எப்பேர்ப்பட்டவர்கள் இந்தப் பெண்மணிகள்!

எல்லா மனிதர்களுக்கும், போகிற போக்கில் சில பல சங்கதிகளை கண்ணில் காட்டுகிறது வாழ்க்கை. ‘சரி, செய்வோம்!’ என்று ‘வாக்கு’ தந்து இறங்கும் போது ‘பொறுப்பு’ வருகிறது. 

பொறுப்பு ஏற்றுக் கொள்பவனின் பொழுது வெறுமனே கழிவதில்லை. அவனது நாட்கள் வீணாகவே போவதில்லை. பொறுப்பு ஏற்ற பெண்மணியிடம் வாழாத நாட்கள் என்று ஒன்று உண்மையில் இல்லை. பொறுப்பு ஏற்று ஓடிக் கொண்டிருப்பவன் சற்று நின்று திரும்பிப் பார்த்தால் பல காரியங்களை நிகழ்த்தி உயர்ந்திருப்பது தெரியும். 

பொறுப்பு ஏற்கும் புள்ளியிலேயே ஒருவன் ‘நான், எனது’ என்பதைத் தாண்டி அடுத்தவர் நோக்கித் திரும்பத் தொடங்குகிறான். பொறுப்பு ஏற்று ஓடுபவனது வாழ்க்கை பொருளுள்ளதாக மாறிவிடுகிறது.

தன்னைத் தாண்டி விறுப்பு வெறுப்பு கடந்து குழந்தை, குடும்பம், அலுவலகம், முடிக்க வேண்டிய வேலை, செய்ய வேண்டிய முதலீடு, செலுத்த வேண்டிய கடன், செய்ய வேண்டிய காரியங்கள் என்று பொறுப்பேற்று ஓடும் போது வாழ்க்கை பொருளுள்ளதாக மாறிவிடுகிறது.

பூமி சுழலவே செய்யும். நாள்கள் கழியவே செய்யும். நாட்கள் எப்படியும் கழியும், பொறுப்புகள் ஏதேனும் ஏற்று நகர்ந்தால், எப்படியும் கழியும் நாளின் பகுதிகள் எனக்கு பொருளுள்ளதாய் மாறும்.

பொறுப்பு ஏற்று ஓடுபவன் பொன் விளைவிக்கிறான்.

என் வாழ்வில், நான் வசித்த இடத்தில், நான் வளர்ந்த சூழலில் பொறுப்பேற்ற அனைவருக்கும் நன்றி!

– பரமன் பச்சைமுத்து
ஓஎம்ஆர், சோழங்க நல்லூர்,
18.02.2020

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *