‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ – திரை விமர்சனம் : பரமன் பச்சைமுத்து

wp-15836895900933147889544007306507.jpg

ஒரு நாயகன், அவனுக்கு ஒரு நண்பன், அவன் மனதை ஈர்க்கும் ஒரு நாயகி, அவளுக்கு ஓர் தோழி. ஆண்கள் இரண்டு பேருக்கும் இந்த வேலை, பெண்களுக்கு அந்த வேலை என்று தொடங்கும் ஒரு திரைப்படத்தில், பல ஆண்டுகளாக தமிழ் சினிமாவைப் பார்த்துப் பழகிய ரசிகர் ஒருவரால், அடுத்தடுத்து என்னென்ன நடக்கும் என்ன காட்சிகள் வருமென ஓரளவிற்கு யூகிக்க முடியும்.   இங்கே கதையே வேறு.  ‘நீங்கள் இயல்பாக யூகிக்கும் எதையும் வைக்காமல் மாற்றியே வைக்கிறேன் பாருங்கள் கதையை சுவாரியமாய்!’ என்ற முடிவோடு படமெடுத்து நச்சென்று தந்திருக்கிறார் இந்தப் படத்தின் இயக்குநர் தேசிங்க் பெரியசாமி.  இடைவேளையில் ‘இப்ப என்னாகும்!?’ என்று அனிச்சையாக பேசிக்கொண்டே போகும் மக்களே இயக்குநரின் வெற்றிக்கு சாட்சி.

துல்கர் சல்மானுக்கு இருபத்தியைந்தாவது படமாம். சரியான இயக்குநரை தேர்வு செய்து விட்டார்.  துல்கர் கொடுத்ததை மிகச் சிறப்பாக செய்து கொடுத்திருக்கிறார். விஜய் டிவி ரக்‌ஷன் தோழனாக முக்கிய பாத்திரத்தில். நண்பர்களின் தொடக்கக் காட்சிகள் ஒரு நாடகத்தனமாகத் தெரிகின்றன என்றாலும் திரைக்கதை நிகழ்வுகள் சூடு பிடிக்கத் தொடங்குவதில் வேறு எதுவும் தெரியவில்லை.

ரீது வர்மாவும் அவரது தோழியாக வருபவரும் அழகாகப் பொருந்துகிறார்கள்.

இயக்குநர் கௌதம் மேனனின் பாத்திரம் ‘கடைசி சீன் வரை’ நன்று. (அதுவும் அவரது ‘ஜெஸ்ஸி’!) 

ஸிட்னி ஷெல்டனின் ‘ஈஃப் டுமாரோ கம்ஸ்’ நாவலை அல்லது அதன் தமிழாக்கமாக ரா.கி. ரங்கராஜன் தந்த ‘தாரகை’யை படித்தவர்கள் இந்தப் படத்தின் பல காட்சிகளில் புன்னகை செய்வார்கள். ட்ரேஸி விட்னியும், ஜெஃப்பும் நினைவில் வந்து வந்து போவார்கள். (இந்த நாவலிலிருந்து சில கொஞ்சம் உறுவி புதுக் கதை கட்டியதே இந்தியில் ‘ரூப் கி ராணி, சோரன் கா ராஜா’ என்று வந்து சக்கப் போடு போட்டது ஸ்ரீதேவிக்கு அன்று!)

பாடல்கள் சுமார், நிறைய நாடகத்தனமான படமாக்கம், சில இடங்களில்  லாஜிக்கல் சறுக்கல் என பல பலவீனங்கள் இருந்தாலும் படம் முழுக்க வந்து கொண்டேயிருக்கும் எதிர் பாரா திருப்பங்கள் எதையும் சிந்திக்க விடாமல் நம்மை ஈர்த்து விடுகிறது.

இந்தப் படத்தின் திரைக்கதையை செய்து இயக்கியுள்ள தேசிங்க் பெரியசாமி – ஒரு நல்ல கதை சொல்லி.  நாளைய இயக்குநராக உருவாக இருக்கிற உதவி இயக்குநர்கள் அனைவரும் இந்தப் படத்தைப் பார்த்து நிறைய கற்பார்கள்.

வி-டாக்கீஸ் வெர்டிக்ட்: கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் : கொள்ளை அடிக்கிறார்கள் விறுவிறுவென்று சுவராசியமாகக் கதை சொல்லி. பார்க்கலாம்.

– திரை விமர்சனம் : பரமன் பச்சைமுத்து

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *