‘நாலாவது சார்’ – தி ஜானகிராமன்

wp-15860251707551544230341540481640.jpg

‘பொட்டமாரி’ ‘ஆத்தா சார்’ ‘அக்கா சார்’ என்று கேலி பேசும் தன் பள்ளியின் நாலாவது சாரை நாயகனாகப் பார்க்கிறான் சின்னஞ்சிறு முத்தப்பன். நாலாவது சாரின் கை விரல்கள் பட்டால் தென்னை ஓலைகளில் பொம்மைகளில் கிளி உருவாகும், பாம்பு நாக்கை நீட்டிக் கொண்டு கண்ணை உருட்டிக் கொண்டு எழும். ‘கொண்ணுப்புடுவேன் கொண்ணு’ என்றே மூணாவது சாரும் இரண்டாவது சாரும் பாடம் எடுக்கையில் எப்போதும் சிரிக்கும்  நாலாவது சார் மாதிரி உலகத்திலயே ஒருத்தரும் கிடையாது என்பது அவனது அழுத்தமான பாந்தம். 

தினமுமம் அவரோடே உலாத்துவான். திருமணமாகி பத்து ஆண்டுகள் ஆகியும் நாலாவது சாருக்கு குழந்தையில்லை. அது பற்றிக் கேட்டால் ‘ஐய.. அது அசிங்கம். அதெல்லாம் பேசப்படாது’ என்று வெட்கி சிரித்து ஓடி விடுவார் அவர்.

அந்த ஊருக்கு புதிதாக குடி வந்த கோட்டு போட்ட கோர்ட்டு் கச்சேரிக் குமாஸ்தா சுந்தரேசனின் ‘புளிச்சக் கண்ணு’ மனைவிக்கு மசக்கை வந்து பல் விளக்குவது போல பாசாங்கு செய்து சாம்பலைத் தின்னுகிறாள். மனைவியை வேலை வாங்குகிறாள் என்று தனது அம்மா சீதையாச்சியை அடித்து வெளியேற்றுகிறார் சுந்தரேசன். கிழவி சீதையாச்சியை நாலாவது சார் வீட்டில் கொண்டு போய் விடுகிறார் முத்தப்பனின் அப்பா. கடைத்தெருவில் கோட்டுப் போட்டுக் கொண்டு எதிரில் வரும் சுந்தரேசனைக் கண்டதும் ‘மாதாவை ஒரு நாளும் மறக்க வேண்டாம்!’ என்று கத்தி விட்டு ஓடுகிறான் முத்தப்பன்.

நாலாவது சார் வீட்டில் போய் தஞ்சமடைந்து  இருக்கும்  சீதையாச்சிக்கு காசி ராமேஸ்வரம் போக ஆசை. பஞ்சுப் பொம்மைகள் செய்து, செல்வந்தர்கள் வீட்டுக் குழந்தைகளுக்கு டியூஷன் எடுத்து பணம் சேர்க்கிறார் காசி ராமேஸ்வரம் போக நாலாவது சார்.

இன்னும் இரண்டு நாளில் காசி போகிறோம் என்று சொல்லி அதற்கான புதுத் துணிமணிகளை காட்டுகிறார் நாலாவது சார். ‘நீ தான்யா என் புள்ள, நீதான்மா என் மருமக!’ என்று ஆசையாய் கன்னத்தை வருடி நெற்றில் முறித்து கண் கலங்கி திக்கி விசும்புகிறாள் சீதையாச்சி. இரவு படுக்கப் போனவள் காலை எழவில்லை. மருத்துவமனைக்குத் தூக்கிப் போகிறார்கள். சீதையாச்சி இறந்து போகிறார். உடலை சுந்தரேசன் எடுத்துப் போய் தன் வீட்டில் கிடத்திக்கொள்கிறார்.  

அங்கே விசும்பிக் கொண்டிருக்கும் நாலாவது சாருக்கு என்ன ஆகிறது, அதற்குப் பிறகு என்னவெல்லாம் நடக்கிறது என்பதை ஒரு நான்காம் வகுப்புப் படிக்கும் பையனின் கண்களின் வழியே சொல்லியிருக்கிறார் தி. ஜானகிராமன். 

முத்தப்பனுக்கும் அவனது அன்னைக்குமிடையேயான உரையாடல்கள் நம் முன்னே நடப்பதைப் போல காட்டுகின்றன தி ஜாவின் வரிகள். 1964ல் சுதேசமித்ரனுக்காக எழுதினாராம்.
அடேயப்பா, இன்றும் படமாகக் காட்சிகள் விரிகின்றன.

இதே தொகுதியில் ‘தோடு’ நல்ல புதினம் என்றாலும், ‘அவலும் உமியும்’ வேறு வகை என்றாலும், இந்த ‘நாலாவது சார்’ நன்று. 

மனிதர்களின் வேறு மாதிரி பார்த்து அவர்களின் அகத்தை கிண்டிக் கிளறி அதைக் கொண்டு புதினத்தை வடித்துவிடுகிறார் தி.ஜா.

படியுங்கள் – ‘நாலாவது சார்’ , “தி ஜானகிராமன் குறுநாவல்கள்” , காலச்சுவடு பதிப்பகம்.

– பரமன் பச்சைமுத்து
சென்னை
04.04.2020

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *