ஆலோலம்…

‘ஆலோலம்…’ :


ஆலோலம் அடுத்த நிலை

வேளிர் குலத் தலைவன் தமிழ்க்கடவுள் முருகன் பல குன்றுகள் கடந்து வந்து கொடிகுலத்து வள்ளியை காண வருகையில், குறிஞ்சில நில திணை புரத்தில் பயிர்களின் மேல் அமைக்கப்பட்ட பரணில் அவள் உட்கார்ந்து கொண்டு ‘ஆலோலம் ஆலோலம்’ பாடி சத்தமெழுப்பி புள்ளினங்களை விரட்டியதாக கதைகள் சொல்கின்றன.
(‘கருணை மிக்கவள் வள்ளி, பறவைகளை அடிக்கவில்லை அவள். ‘அடித்து விடுவேன்… அடித்து விடுவேன்… ஓடுங்கள்!’ என்று விரட்டி ஆலோலம் பாடினாள் என்று சொல்லி பாடியே காண்பிப்பார் தனது கச்சேரிகளில் காலஞ்சென்ற என் தந்தை மு. பச்சைமுத்து)

( ‘அப்போது விளைச்சலே செய்யவில்லை இந்த இன மக்கள். விளைவித்தலே இயற்கைக்கு எதிரானது என்று காடு் மலையோடு ஒத்து வாழ்ந்தார்கள் அவர்கள்’ என்று சொல்லும் சு. வெங்கடேசனின் கருத்துக்கள் வேறு வகை, தனி வகை )

பொள்ளாச்சி – வேட்டைக்காரன்புதூரில் உள்ளே நுழைந்து விடும் யானையை விரட்டுவதற்கு படபடவென்று சத்தமெழுப்பிப் பறக்கும் பிளாஸ்டிக் கொடிகளை கவுண்டர்கள் நட்டு வைத்துள்ளதை மலரவர் சதீஷோடு ‘காலை – காட்டு வாக்கிங்’ போனபோது கண்டிருக்கிறேன்.

சிறுவனாக இருந்த போது எங்கள் நெல் வயலில் ‘சிரவி’ (வழக்குச்சொல் ‘செரவி’) இறங்கிவிடாமல் இருக்க, முத்தையன் சித்தப்பாவோடு சேர்ந்து பாத்திரங்களையும் பெயிண்ட் டப்பாக்களையும் கொண்டு அடித்து சத்தமெழுப்பி(ஆலோலம்) விரட்டியதை என் ‘நதி போல ஓடிக் கொண்டிரு…’ நூலில் விவரித்திருப்பேன்.

காலங்காலமாகவே
விவசாய நிலங்களில் இறங்கி தானியங்களை உண்டு விடும் பறவைகளை விரட்ட பல முறைகள் கையாளப்பட்டு வருகின்றன. இதோ பறவை விரட்டலில் அடுத்த நிலை (கோவை மாணவர் ஜவகர் பகிர்ந்த காணொளி). ஒரு காக்கையோ சிட்டோ மைனாவோ இரட்டைவால் குருவியோ இந்தப் பொம்மை மீது வந்தமரும் நாள் வரை இந்த பொம்மையின் ஆலோலம் தொடரும்!

….

**** ( ‘ஆலோலம்’ : பறவைகளை விரட்டும் ஒலிக் குறிப்பு, எழுப்பும் சத்தம் )

…..

வாழ்க!

  • பரமன் பச்சைமுத்து
    சென்னை
    24.05.2020

Facebook.com/ParamanPage

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *