”தாராவியில் நடந்தது தரமான சம்பவம்!”

‘இத்தனையோண்டு சதுரடிக்குள் இவ்ளோ பேர்!’ என்றளவு மக்கள் நெருக்கம் மிகுந்த தனிநபர் இடைவெளியே சாத்தியமில்லை என்ற நிலை கொண்ட ராயபுரம், வண்ணாரப்பேட்டை, காசிமேடு, திருவொற்றியூர் பகுதிகளை உள்ளடக்கிய வடசென்னையில் கொரோணா தீ நுண்மி தீயின் நாவுகளைப் போல நாலாபுறமும் பற்றிப் பரவும் கொழுந்து விட்டு வளரவே செய்யும் என்கிறார்கள் ஊடகவியலாளர்களும் மருத்துவர்களும்.

வடசென்னையே இப்படியென்றால் அதைப்போல பலமடங்கு நெருக்கம் கொண்ட மும்பையின் தாராவியைப் பற்றி சொல்லவே வேண்டாம். தாராவியில் கொரோனா தொற்று என்று இரண்டு மாதங்களுக்கு முன்பு செய்தி வந்த போது, மராட்டிய அரசும், அதிக தமிழர்கள் வாழும் பகுதி என்பதால் தமிழகத்தில் உள்ளோரும் அதிரவே செய்தனர். ‘முடிஞ்சிது போ!’ என்று பதறினார் தாராவியில் இருக்கும் தனது மகனை நினைத்து இங்கே பெரியவர் ஒருவர். அடுத்தடுத்த மனிதர்கள் மீது தொற்றித் தாவித் தாவிப் பல்கிப் பரவியது நாவல் கொரோனா தாராவியில்.

ஆனால்… இன்றைய தாராவி நிலை என்ன!  மும்பை மாநகராட்சி, அதிகாரிகள், மருத்துவர்கள், தூய்மைப் பணியாளர்கள் கொண்ட குழு இறங்கி வேலை செய்து அசத்தியிருக்கிறது.

ஒவ்வொரு நாளும் ஏராளமான சோதனைகள், தொற்றுள்ளோரை உடனே தனியிடத்தில் தனிமைப்படுத்தல், அங்கே அவர்களுக்கு மருத்துவ நிவாரணப் பணிகள் என கண் துஞ்சாமல் கருத்தாக காரியமாற்றியிருக்கிறது அந்தக் குழு.  தாராவி வாழ் மக்கள் தந்த ஒத்துழைப்பு மிக முக்கியமானது.

தைவானையும் இன்ன பிற நாடுகளையும் மேற்கோள்காட்டிக் கொண்டிருந்தவர்கள் இனி கேரளத்தோடு தாராவியையும் நிமிர்ந்து பார்த்துக் காட்டலாம்.

எல்லோரும் சுவாசக்கவசமணிந்து திரியும் நோய்த் தொற்று மிகுந்த இக்காலங்களில் கையை முகத்தில் வைக்கக் கூடாது என்று பரிந்துரைகள் சொல்லும் போதும், மீறி மூக்கின் மீது விரலை வைத்து வியந்து நிற்கிறேன் தாராவியைப் பார்த்து.

தாராவியில் நடந்தது தரமான சம்பவம்!

வாழ்க! வளர்க!

– பரமன் பச்சைமுத்து
22.06.2020

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *