ஆடி சித்திரை…

வறுமை நிலையின் காரணமாக அந்த மனிதன் புவனகிரியில் ஒரு தையல்கடை பாயிடம் பொத்தான் கட்டுவது காஜா எடுப்பது போன்றவற்றை பகுதி நேர வேலையாகச் செய்து கொண்டிருந்தார். 

ஓர் ஆடி மாதத்தில், கர்ப்பிணியான அவரது மனைவியை மாட்டு வண்டியில் வைத்து மணக்குடியிலிருந்து புவனகிரி வரை கூட்டி வந்துவிட்டார். புவனகிரி பாலத்தில் நின்று சிதம்பரம் போக ‘கூட்டமில்லாத பேருந்துக்காக’   நிற்கையில், தையல்கடை பாய் பார்த்து விட்டு, ‘அட போப்பா!’ என்று சொல்லி வரும் பேருந்தை அப்படியே நிறுத்தி உட்கார இடம் கொடுக்கச்சொல்லி குரல் தந்து ஏற்றியனுப்பினார்.

சிதம்பரம் பழனியம்மாள் மருத்துவமனையில் கர்ப்பிணி அமிர்தம் தனது இரண்டாவது பிரசவத்திற்கு சேர்க்கப்பட்டார். இரண்டு நாட்கள் காத்திருந்து, மூன்றாம் நாள் சித்திரை நட்சத்திரத்தில் ஓர் ஆண் குழந்தை பிறந்ததாம். 

சிவப்பாக பிறந்த தன் குழந்தைக்கு, சிவனை வழிபடும் அந்த மனிதர் ‘சிவா’ என்று பெயரிட்டார்.

இன்று அதே ‘ஆடி மாத சித்திரை நட்சத்திரம்’. 47 ஆண்டுகளுக்குப் பிறகு அந்த குழந்தை தன் பெற்றோர்களை துதிக்கிறது.

இன்றிலிருந்து 47 வயது முடிந்து 48ல் அடியெடுத்து வைக்கும் அந்த சிவாவின் இன்னொரு பெயர் – பரமன் பச்சைமுத்து.

இன்று ஆடி சித்திரை!

வாழ்க! வளர்க!

– பரமன் பச்சைமுத்து
ஆர் ஏ புரம்,
27.07.2020

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *