கண்ணே நீ கமலப்பூ…

wp-1603905485062.jpg

‘அன்னமிடுவாருண்டோ அனாயாதையான இந்த ஏழை அரும் பசிக்கு… அன்னமிடுவாருண்டோ…’

இந்தப் பாடலை, தான் நடத்தும் ‘காரக்காலம்மையார்’ வில்லுப்பாட்டில் என் தந்தை பாடும் பாங்கை ஒரு முறை நீங்கள் கேட்டிருந்தால், மறக்கவே முடியாதபடி மனதினுள்ளே ஓடி வந்து ‘பச்சக்’கென்று ஒட்டிக்கொள்ளும். ‘வள்ளித் திருமணம்’ கதையில் குறிஞ்சித் திணை வயலில் வள்ளிக் கிழங்குத் தோட்டத்தில் வளர்ந்த குழந்தை வள்ளியை தாலாட்ட வரும் தாலாட்டுப் பாடலான ‘கண்ணே நீ கமலப்பூ காது ரெண்டும் வெள்ளரிப் பூ…’ பேஸ் வாய்ஸில் என் தந்தை பாடும் போது, முத்தையன் சித்தப்பாவின் பேங்கோஸும், பூராயர் அண்ணனின் தபலாவும், கீரப்பாளையம் நல்லதம்பியின் ஆர்மோனியமும், புவனகிரி கிருபாவின் மோர்சிங்கும் கலந்து குழைந்து கேட்பவரின் காதின் வழியே உள்ளத்தை நனைக்கும். திருப்புகழின் ‘அதலசேடனாராட அகில மேரு மீதாட அபினகாளி தானாட… அவளோடன்’ பாடலை உச்சஸ்தாயில் பாடுபவதைப் போல பாடாமல் ‘கண்ணே நீ கமலப்பூ’வை மிக குழைவாக கீழே பாடுவார். இந்தப் பாடலோடே வளர்ந்தேன் நான்.

அப்பா ஓர் அதிசயம். எங்கோவோர் மூலையில் வயல்கள் சூழ் படுகிராமமான மணக்குடியில் இருந்து எப்படி இதையெல்லாம் செய்தார் என்பது விளங்கமுடியா விளக்கமுடியா அதிசயம். முறைப்படி சங்கீதம் கற்றுக்கொண்டதில்லை, தொலைவிலிருந்தே இரு வேறு காலகட்டங்களில் கேபி சுந்தராம்பாளையும் வாரியார் சுவாமிகளையும் தொலைவிலிருந்தே குருவாகப் பார்த்து, கற்று வளர்ந்தவர். அவரது பக்தியும் புனிதமான அன்பும் அவரை அவர்கள் இடத்தில் கொண்டு சேர்த்தது. அவர்களுக்கு ஆர்மோனியம் வாசிக்குமளவிற்கு கொண்டு சேர்த்தது.

மணக்குடி மாதிரி ஊரிலிருந்து அவர் ஒரு வில்லுப்பாட்டு இசையை இசைத்தது ஓர் அதிசயமென்றால், அந்த மாதிரி ஓர் ஊரிலிருந்து பூராயர் அண்ணனை தபலா வாசிக்கவும், முத்தையன் சித்தப்பாவை பேங்கோஸ் வாசிக்கவும் கற்றுத் தந்து உருவாக்கியது எனக்கு பேரதியசம். பெரும் கருணையோடும் ஆளுமையோடும் அரவணைத்து உருவாக்கி வாழ்ந்திருக்கிறார் அப்பா. அடுத்த தலைமுறையின் குட்டி எனப்படும் சிவபிரியனுக்குள்ளும் விளக்கையேற்றி இழுத்துக்கொண்டு விட்டார்.

தென்னாற்காடு வடாற்காடு தஞ்சை மாவட்டத்தின் சிறு கோவில்கள் பெரு கோவில்கள், தலைமன்னார் யாழ்ப்பாணம் கண்டி கொழும்பு என்று இலங்கையின் கோவில்கள் என நாற்பதாண்டுகளுக்கும் மேல் அப்பாவின் இந்தக் குழு இசைத்த கோவில்கள் ஏராளம். புதுவை வானொலி நிலையத்தின் ஆஸ்தான கலைக்குழு என்று சொல்லும்படி திகழ்ந்தனர்.

கிராமப்பள்ளியில் தலைமையாசிரியாக இருந்து கொண்டு மாலை வேளைகளில் சேக்கீழார் விழா, கம்பன் மன்றம், வாலி வதம், காமராசர் விழா என்று அப்பா செய்த இசைப்பயணம், கலைமாமணி, வில்லிசை வேந்தர் என பட்டங்களைத் தாண்டி மக்களின் உள்ளங்களை வென்றெடுத்திருந்தது.

ஏதோவோர் ஊரில் கச்சேரி செய்து விட்டு, எப்படியோ பயணித்து, நள்ளிரவில் மணக்குடிக்கு வந்து சேர்வார்கள், பூராயர் அண்ணனும் சித்தப்பாவும் அப்பாவுமாக இரு சைக்கிள்களில். மழை, பனி, வெய்யில் என எதுவும் இந்தக்குழுவினரின் இசைப் பயணத்தை நிறுத்தியதில்லை.

இசைக்கருவிகள் மீது ஒரு பெருங்காதல் அப்பாவுக்கு. அவற்றைப் பற்றிப் படிக்க, பார்க்க, கேட்க, வாங்க, பயிற்சி செய்ய ஆசை அல்ல, பாய்வார்.

சுதிப் பெட்டி வாங்க கஞ்சிரா வாங்க ஆர்மோனியம் வாங்க என்று சென்னையிலுள்ள பெங்களூரூவிலுள்ள எல்லா இசைக்கருவிகள் விற்கும் கடைகளுக்கும் போயிருப்பேன் நான், வரும் போதெல்லாம் கருவிகள் பார்க்க விரும்பும் அப்பாவைக் கூட்டிக் கொண்டு போனதால். ‘விகடன்ல ஏஆர் ரஹ்மான் கூட அதான் சொல்லிருக்கார், இசைக்கருவிகள் மிக முக்கியம், நுட்பமா இருக்கனும்று!’ என்று கடைக்குப் போக ரஹ்மானை சிபாரிசுக்கு சேர்த்துக் கொள்வார்.

என் மகள்கள் ட்ரினிட்டி இசை கற்றலில் அடுத்த நிலைக்கு உயர்ந்த போது அவர்கள் வைத்திருந்த பழைய கீ போர்டை கையோடு எடுத்துக் கொண்டு போய்விட்டார், ‘என் ப்ராக்டீசுக்கு ஆகும்!’ என்று சொல்லி.

இரவில் பேருந்தில் பயணம் செய்யும் போது ஏதோவோர் நிறுத்தத்தின் அருகில் ஏதோவோர் கோயிலின் புனல் ஸ்பீக்கரின் வழியே வரும் அப்பாவின் குரலைக் கேட்டு, ‘வாத்தியார் கச்சேரி நடக்குது!’ என்று பேருந்தை விட்டிறங்கி கச்சேரிக்கு வந்தவர்கள் பலருண்டு. சென்னையிலிருந்து சிதம்பரம் போகையில் தூக்கத்தில் முட்லூரில் அப்பாவின் குரல் கேட்டு பேருந்திலிருந்து குதித்து, அவரது ‘வாலி வதம்’ அனுபவித்திருக்கிறேன்.

ஆயுதபூசையன்று மாலை புவனகிரி ராமலிங்கம் சுவாமி மடத்தின் அரங்கில் இசைக்கருவிகளுக்கு பூசையிட்டு சந்தனமிட்டு பொட்டிட்டு பூசித்து வணங்கி இசைமாலை சூட்டுவர் அப்பாவும், சித்தப்பாவும், பூராயர் அண்ணனும், நல்லதம்பி அவர்களும்.

எல்லாக் கச்சேரிகளிலும் அப்பாவின் கதை சொல்லும் பாங்கும் பாடும் குரலும் நடுநாயகமாக ஒலிக்க, கூட தபேலாவும் பேங்கோஸும் வரும்.

சென்ற ஆண்டு ஆயுதபூசைக்கு இருந்த அப்பா, இப்போது இல்லை. சிவபுரம் சென்று சிவனடிக்கீழ் சேர்ந்து விட்டார். இந்த ஆயுசபூசைக்கு… இன்று முன்னிரவில் மணக்குடி வீட்டில் இசைக்கருவிகளை வைத்து முத்தையன் சித்தப்பாவும் பூராயர் அண்ணனும் பூசையிட்டு இசைக்கிறார்கள். அதன் சிறு காணொளியைப் பார்த்துவிட்டு கோவென அழுகிறேன்.

நடுநாயகமாக ஒலிக்கும் அப்பாவின் குரல் இல்லை. முத்தையன் சித்தப்பாவும் பூராயர் அண்ணனும் குட்டியும் வாசிக்கிறார்கள். எத்தனை காலமாய் அவர் பாட அவரோடு வாசித்தவர்கள். ஒவ்வொரு பாடலிலும் அந்தந்த இடங்களில் அவர்களின் நினைவுகளில் அப்பாவி்ன் குரல் கேட்கும்தானே.

‘கண்ணே நீ கமலப்பூ…
காது ரெண்டும் வெள்ளரிப்பூ…!’

கண்கள் தளும்ப,
பரமன் பச்சைமுத்து
25.10.2020

ParamanPage

#MuPachaimuthu

Manakkudi

ParamanPachaimuthu

VillupPaattu

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *