ராம்ஜீயை நினைத்துக் கொள்வேன்…

‘பரமன், ஒரு எடத்துக்குப் போறோம்! வாங்க!’

ராம்ஜீயின் அழைப்புகள் பெரும்பாலும் இப்படித்தான் இருக்கும்.  லதா கிருஷ்ணசாமியும், சாமுவேல் மேத்யூவும், சில நேரங்களில் ஏஆர்கேயும் சேர்ந்து கொள்ள, இணைந்து போவோம். 

டிசம்பர் என்றால் கச்சேரி சீசன். ‘அந்நியன்’ திரைப்படத்தில் வருவது போல சபா மேலாளர்கள் சிறிய கலைஞர்கள், பெரிய கலைஞர்கள் என பிரித்து நேரம் ஒதுக்கி நிர்வகித்து இசை நாட்டிய நிகழ்ச்சிகளை நடத்துவார்கள்,  மியூசிக் அகாதமி போன்ற அரங்கங்களில் செய்பவர்கள் பெரிய ஆட்கள் என்பது வரையில் கொஞ்சம் தெரியுமெனக்கு.  ராம்ஜீ அதே சீசனின் வேறோரு வண்ணத்தை தெரிந்தவர்.

‘எங்கய்யா கூட்டிட்டுப் போறான் இந்த மனுஷன்!’ என்று நம் புருவ மத்தியில் புதிர் நெளியும் படி,
காரை எடுத்துக் கொண்டு எங்கோ வளைந்து வளைந்து செல்வார் ராம்ஜீ.  ராம்ஜீ, வயதில் என்னை விட இளையவரென்றாலும் முதல் சந்திப்பிலிருந்தே இருவரும் ‘ங்க’ விகுதியோடே பழகிக்கொள்வோம். இப்போதும் ‘வாங்க போங்க’தான்.

நாகேஸ்வர ராவ் பார்க் கடந்து அமிர்தாஞ்சன், லஸ் கடந்து எங்கோ திரும்பி ஏதோ ஓர் இடத்தில் நிறுத்தி ‘இறங்குங்க’ என்று இழுத்துப் போய் ஏதோ ஒரு மண்டபத்தின் முன்னே நிறுத்துவார். ‘பார்த்தசாரதி சபா’ ‘ஞானானந்த சபா’ கணக்கில் ஃப்ளக்ஸ் பளபளத்துத் தொங்கும். யாரோ கதவு திறந்து மூடும் இடைவெளியில் புஸ்ஸென்று ஏசி குளிரும் ‘தத்தகிட தத்தகிட தாதா’ என்று கொன்னக்கோலோ, ‘துன்பம் நேர்கையில் யாழெடுத்து நீ இன்பம் சேர்க்க மாட்டாயா!’ என்று வாய்ப்பாட்டோ வெளியே வழிந்து வரும்.

‘இப்படியெல்லாம் கூட எடம் இருக்கா!’ ‘சில சங்கீத அமைப்புகள் எங்கயும் எடம் கிடைக்காம இப்படி மண்டபத்தை எடுத்து நடத்துதா!’ என்று வியந்து,  ‘ஓ.. இசை நிகழ்ச்சிக்குப் போறோமா!’ என்றெண்ணிய படியே அந்த பெருங்கதவை நோக்கி நகர்த்தால், ‘இங்க வாங்க பரமன்!’ என்ற படியே வலது பக்கம் அரங்கை சுற்றிச் செல்லும் திசையில் நடப்பார் ராம்ஜீ.

‘எங்கய்யா போறோம் யோவ்!’ என்று சாமுவேலிடம் முனுமுனுத்துக் கொண்டே கொஞ்சம் நடந்தால், முற்றிலும் வேறான ஒரு சூழலில் வந்து நிற்போம்.

கண் முன்னே ஒரு பெரிய உயர் ரக திடீர் சமையலறை… இல்லை இல்லை சமையல் கூடம் தெரியும். பெரிய தாலங்களில் ஆரஞ்சும் சிவப்பும் கலந்த வண்ணத்தில் கேசரியைக் கிண்டிக் கொண்டிருப்பார்கள். ‘பார்க்கவே இவ்வளவு அழகா இருக்கற மாதிரி வடை செய்ய முடியுமா!’ என்று திகைக்குமளவிற்கு ஒரு பெரிய ஜல்லிக்கரண்டி முழுக்க வடைகள் ‘நெருப்புடா…’ என்னுமளவிற்கு சுடச்சுட எண்ணெயை கீழுள்ள பெரும் கரிய வாணலியில் சொட்டிக் கொண்டிருக்கும். அங்கேயும் இங்கேயும் காவி வேட்டி கட்டிய ஆசாமிகள் எதையோ தேடிக் கொண்டு யாணங்களை திறந்து திறந்து பார்த்து நகர்ந்து கொண்டிருப்பர்.  எண்ணெய்யில் வதக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை மணம் அங்கேயே சுற்றிச் சுற்றி அடிக்கும். கூடவே ஏலக்காய் மணமும் சேர்ந்து கொள்ளும்.

‘ஓகோ.. கேசரி, வடையா இன்னைக்கு!’ என்ற படியே தூரத்தில் இடுப்பில் மடித்துக் கட்டிய வேட்டியும் முதுகு தெரியும் படி கழுத்தைச் சுற்றி துண்டும் போட்டுக் கொண்டு பெரிய கரண்டி ஒன்றினால் முன்பக்கம் எதையோ கலக்கிக் கிளறிவிட்டுக் கொண்டிருக்கும் நெடுநெடுவென வளர்ந்த மனிதனைப் பார்த்து, ‘மா….மா..’ என்பார் ராம்ஜீ.  கழுத்தை மட்டும் திருப்பாமல் மொத்த உடலோடும் லேசாக திரும்பிய அந்த மனிதனைப் பார்த்து அதிர்ந்து போனேன் நான்.
‘ஏய்… அது…?’
‘ஆமாம்… அறுசுவை அரசு நடராஜன்தான்!’

விகடினில் வாரா வாரம் நாம் படித்த மனிதன் வெற்றுடம்போடு எதையோ கலக்கிக் கொண்டு கண் முன்னே நிற்பார்.

‘மாமா… ஒண்ணு, ரெண்டு, மூணு, நாலு காஃபீ வேணும்!’ என்பான் ராம்ஜீ.

‘இன்னம் பதம் வரலை பொறுங்கோ!’ என்பார் அறுசுவை அரசு.

‘யோவ்! காஃபிக்கு என்னய்யா பதம், பால் காயனும். டிகாக்‌ஷன் எறங்கியிருக்கனும். சக்கரை சரியான அளவில இருக்கனும். சுடச் சுட குடிக்கனும். இதுல என்னய்யா பதம்?’ என்று லதாவைப் பார்த்து கேலி மகிழ்ச்சியாய் நான்.

‘அஞ்சு நிமிஷம் இருங்க’ தூரத்திலேருந்து அறுசுவை அரசு.

‘எவ்வளவோ பாத்துட்டோம், அஞ்சு நிமிஷம் பொறுக்க மாட்டோமா!’ விஜய் குரலில் நான்.

ஐந்து நிமிடங்களில், தாம்பாளமா தட்டா என்று பட்டிமன்றமே நடத்தலாம் என்ற அளவிலிருக்கும் ஓர் எவர்சில்வர் தட்டில் நான்கு தம்ளர்களை வைத்து, ‘குடிச்சிட்டு அப்புறம் காசு குடுங்கோ’ என்ற படி அவர் நீட்ட, ராம்ஜீ அதை போய் வாங்கிக் கொண்டு வந்து எங்களிடம் தருவார்.

‘பதமாம் பதம்! என்னாப் பதம்ன்னு பாக்கறோம்!’ என்றெண்ணிய படியே காஃபியை எடுப்போம்.

காஃபியின் மணமே நம்மை அடித்து சாய்த்து விடும். சில காஃபிகளை குடிப்பதற்கு முற்படும் போது அதிலெழும்பும் மணம் உங்களை ‘இன்னும் கொஞ்சம் வேண்டும்’ என்று உங்களை முகரும் நிலையிலேயே நிறுத்தி விடும். ‘ஐயோ, சூடு ஆறுது’ என்று சுதாரித்துக் குடித்தால்தான் உண்டு. 

அதே நிலைதான் எங்களுக்கும். இரண்டு உதடுகளுக்குமிடேயே தம்ளரின் விளிம்பை வைத்து அடிப்பக்கத்தை லேசாகத் தூக்கி, ஒரு மிடறுக்காக கொஞ்சமே உறிஞ்சும் போதே… ‘சுறுக்’கென்று நாக்கில் ஒரு சுவை பரவும். மூளைக்கு ஓடி உடம்பில் பரவி மனதில் பட்டு நாக்கிற்கு திரும்பியிருக்கும். ‘மை குட்னஸ்’ ‘வாவ்!’ என சொல்லுதல் கூட நடக்காது, தோன்றாது. அப்படியொரு சுவையாயிருக்கும்.

பெங்களூருவில் வாழ்ந்த போது உள்ளே எழுப்பிக் கட்டியிருந்த ‘எம்டிஆர் காஃபிதான் சிறந்த காஃபி’ என்ற பதிவுகளை அடித்து நொறுக்கியிருக்கும் கையிலிருக்கும் காஃபி. மீதியிருக்கும் காஃபியை ரசித்து ரசித்து பொறுமையாக குடிக்கலாமா அல்லது சீக்கிரம் இதை முடித்து விட்டு ‘எவ்ளோ செலவானாலும் பரவாயில்ல, இன்னொரு காஃபி குடிக்கறோம்!’ என்று போகலாமா என்று சிறு சில நொடிகள் விவாதம் நடக்கும் உள்ளே.

‘எப்படி இந்த பதம் வருது?’ என்று நாம் நினைக்கும் போதே, சமையல் கூடத்தில் நுழைந்து யாணங்களைக் கடந்து அறுசுவை அரசு நடராஜனை நோக்கிப்  போயிருப்பார் ராம்ஜீ, அதே கேள்வியை அவரிடமே கேட்க.

‘பாலை முதன் முதல்ல காய்ச்சி தனியா வைக்கறது வேற, அப்புறம் காஃபிக்காக சூடு பண்றது வேற. இவ்ளோ டிகிரிக்கு மேல சூடு பண்ணா காஃபி சுவை மாறும். சர்க்கரையை அளவா கலந்து சூடு பண்ணா வேற சுவை வரும்!’  என்று காஃபி பதம் பற்றி நெடுநெடு மனிதர் அறுசுவை அரசு விளக்க கேட்டுக் கொண்டு வருவோம்.

‘என்னவோ வீட்ல போய் காஃபி போடறா மாதிரி கேட்கறானுங்க!’ என்று லதாவின் கலாய்ப்பும் சாமுவேலின் ‘அஹ்ஹாஹ்ஹா’வும் இருக்கும்.

காரில் ஏறி அக்ரோபோலிஸ் ஆஃபீஸ் வந்த பின்னும் காஃபியின் உணர்வும் சுவையும் இருக்கும். அருமையான காஃபீ.

எந்த சபாவில் யார் சமையல், எந்த நேரம் போக வேண்டும், எந்த மண்டபத்தில் இம்மாதம் எந்த சபா இயங்குகிறது என எல்லாமும் தெரியும் ராம்ஜீக்கு.  ‘பரமன், இங்க காஃபீ வேண்டாம். சுமாராத்தான் இருக்கும்!’ என்று ராம்ஜீ சொன்னால் அது தரக் கட்டுப்பாட்டு அளவு போல சுவைக்கட்டுப்பாட்டு அளவாக இருக்கும்.

அதன் பிறகு அந்த மாதம் முழுக்க, அந்த சீசன் முழுக்க நிறைய சபாக்களுக்குப் போயிருக்கிறோம், வெறும் காஃபி குடிப்பதற்காக.

ஆண்டுகள் பறந்தோடி விட்டன. ராம்ஜீ திரைப்படத் தயாரிப்பு, பதிப்பகம் என ஓடிக் கொண்டிருக்க, நான் மலர்ச்சி, ‘வளர்ச்சி’ இதழ் என்று ஓடிக் கொண்டிருக்க, சாமுவேல் சோஷியல் மீடியா அட்வர்டைசிங் என இயங்க, லதா தன் குடும்ப நிறுவனத்தில் டெலிவிஷன் மேக்கிங் இயக்கம் என நகர்ந்து ஓடிக்கொண்டிருக்கிறோம்.  அவ்வப்போது சந்திக்கிறோம். எப்போதும் தொடர்பில் இருக்கிறோம்.

இப்போதெல்லாம் எந்த நாட்டில் எந்த ஊரில் நல்ல காஃபியை குடித்தாலும், முதல் மிடறின் போதே ராம்ஜீயை நினைத்துக் கொள்ளுகிறேன்.

நல்ல வேளை! அன்று அறுசுவை அரசு நடராஜன் போட்ட அட்டகாசமான காஃபியை, ஒன்றோடு நிறுத்தி விட்டேன். வாழ்வின் சில சங்கதிகளில், இன்னும் கொஞ்சம் வேண்டும் என்று விடாய் வரும் போது அப்படியே நிறுத்தி விடுவது மிக மிக நல்லது. இன்னும் வேண்டும் எனும் போது நிறுத்துவது அதே உணர்வை அந்த சுவையை உள்ளத்துக்குள் அப்படியே முடிச்சிட்டு உறைய வைத்து விடுகிறது. அடுத்த தம்ளர் காஃபி திகட்டச் செய்து மொத்த சுவையையும் உணர்வையும் கெடுத்து விடலாம்.

மார்கழி என்பது நல்ல சபாக்களின் நல்லுணவுக்கான நல்ல காஃபிக் கான காலம்.

– பரமன் பச்சைமுத்து
மார்கழி 7
சென்னை

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *