‘லண்டன் ஹேஸ் ஃபாலன்’ – திரை விமர்சனம்

london_has_fallen_2015_movie-wide - Copy

London has fallen

அமெரிக்கர்களைப் பொறுத்தவரை வெள்ளை மாளிகையும், அதிலிருக்கும் அதிபரும் அவர்களது பெருமை. தேசியக்கொடியை உள்ளாடையில் பிரிண்ட் செய்து போடுவதைக் கூட ஏற்றுக் கொள்ளும் அவர்கள், வெள்ளை மாளிகைக்கோ, அமெரிக்க அதிபருக்கோ அந்நிய தேசத்தால் ஒரு கரும்புள்ளி வருவதை ஏற்றுக் கொள்ளமாட்டார்கள் என்பதை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருக்கும் ஆங்கிலத் திரைப்படம்.

பிரித்தானிய பிரதமரின் மறைவிற்கு இரங்கல் செலுத்த ஏகப்பட்ட பாதுகாப்பு கெடுபிடிகள் என வரும் உலகத்துத் தலைவர்களோடு அமெரிக்க அதிபரும் தனது பாதுகாப்புப் படையோடு வருகைதர, லண்டன் மாநகரையே வெடிகுண்டுகளால் சிதைத்து தேம்ஸ் நதிக்கரையை எரியும் புகைமண்டலமாக மாற்றி, அந்தச் சூழலை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி அமெரிக்க அதிபரை கடத்த நினைக்கிறது ஒரு கும்பல். உடன் வந்தோர், அதிநவீன தொழில் நுட்ப வாகனங்கள், தற்காப்புக் கருவிகள் என எல்லாவற்றையும் இழந்து தன் அதிபரை பல இடர்களுக்கிடையில் அந்தக் கும்பலின் பிடியிலிருந்து ஒரு மெய்காவல் படை வீரன் எப்படிக் காக்கிறான் என்பதை சுவராசியமாக சொல்கிறது படம்.

துருக்கி ஆப்ஃகானிஸ்தான் பக்கம் எங்கேயோ தனது குடும்ப விழாவில் இருந்த ஒருவனது குடும்பம் அமெரிக்க அரசின் திடீர் வெடிகுண்டுத் தாக்குதலால் சிதைந்து போகிறது. தனது குடும்பம் தன் கண்முன்னே சிதைந்தற்குக் காரணம் அந்த அமெரிக்க அரசும், அதிபரும். அவர்களை பழி வாங்குவோம் என்று புறப்பட்ட ஒரு செல்வந்தனும் அவனது கூட்டாளிகளும் தீவிரவாதிகளாக காட்டப்படுகின்றனர். அமெரிக்க வீரர்களின் சாகசம், அமெரிக்க பற்று, எடுத்த விதம் என எல்லாம் நன்றாக இருந்தாலும், அந்த தீவிரவாதியின் கேள்விக்கு என்ன பதில்? ‘சந்தோஷமா இருந்த என் குடும்பத்த என் கண்ணு முன்னால சிதைச்சது நீங்க, உங்களுக்கு அது புரியணும்! அதனாலதான் உன்ன கடத்துனேன்! வலி புரியுதா?’ என்று தீவிரவாதியாக காட்டப்படும் அந்த மனிதனின் கேள்விக்கு என்ன பதில்? திரைப்படத்தைத் தாண்டி அந்தக் கேள்வி இன்னும் உள்ளே ஓடிக்கொண்டேதான் இருக்கிறது. எல்லாப் போர்களுக்குப் பின்னேயும், இப்படி எத்தனையோ மனிதர்களின் வலிகள் வருத்தங்கள் இருக்கத்தானே செய்யும்!

எல்லாம் முடிந்து வீடு சேர்ந்த நாயகன், புதிதாய் பிறந்த தன் குழந்தையை கருத்தில் கொண்டு ராஜினாமா கடிதம் எழுதும் போது தொலைக்காட்சியில் உதவி ஜனாதிபதி உரைகேட்டு அடையும் அந்த உணர்வே, மொத்த படத்தின் அடிநாதமாக இருக்கிறது.

‘ஏர்ஃபோர்ஸ் ஒன்’, ‘எக்சிக்யூட்டிவ் டெசிஷன்’ ரக படம். இதற்கு முந்தைய படமான ‘ஒலிம்பஸ் ஹேஸ் ஃபாலன்’ அளவிற்கு இல்லைதான் என்றாலும். ஆக்ஷன் பட ரசிகர்களுக்கு நல்ல விருந்து.

வி-டாக்கீஸ் வெர்டிக்ட்: (லண்டன் ஹேஸ் ஃபாலன்)’வீழ்ந்தது லண்டன்’ – எழுந்து நிற்கிறது திரைக்கதையால்! பார்க்கலாம்!

: திரை விமர்சனம் – பரமன் பச்சைமுத்து

www.ParamanIn.com

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *