வியப்பில்லா இயந்திரங்களைக் கண்டு வியக்கிறேன்

exclamation

exclaim

ஒரு பயணித்தின் இடையே புதுச்சேரியில் உணவருந்திவிட்டு திரும்ப தொடர்ந்த போது, ஒரு வெண்ணிறக் கட்டடத்தைப் பார்த்து என் மகள்கள் ஒரு சேரச் சொன்னது, ‘வாவ்!’

வியக்குமளவிற்கு இதில் என்ன இருக்கிறது? இது ஒரு கட்டிடம் அழகாக இருக்கிறது. அவ்வளவுதான்! ‘வாவ்’ எதற்கு? – என்பதே என் எண்ணமாக இருந்தது.

‘எந்திரன்’ திரைப்பட சிட்டி ரோபோவிற்கு வியப்பு வராது. ஃபெமினோச்சி எண்கள், மாயமாளவ கௌள, பாதரசத்தின் உருகும் நிலை, ஸிக்பி ப்ரோட்டோகால் என எல்லாம் தெரியும், பல மொழிகள் புரியும் அதற்கு. கணிப்பொறி, இயந்திரங்கள் வியக்காது. நான் இயந்திரமல்லவே! மனிதம் வற்றிப் போகா மனிதன்.

‘எல்லாம் எனக்குத் தெரியும்’, ‘இதெல்லாம் ஒரு விஷயமே இல்லை’, ‘நான் இதற்கெல்லாம் மேலே’ – என்ற மனநிலையில் இருப்பவனுக்கு வியக்கவே வாய்ப்பில்லை. வியக்க மட்டும் இல்லை, சிரிக்கவும் வாய்ப்பும் இராது, வாயும் இராது.

‘அதுக்கென்னா இப்போ?’ என்று கேள்வி வரும் போது, புருவங்கள் சுறுங்கி நெற்றி இறுகுகிறது. ‘அட…!’ என்று வியப்பு வரும்போது புருவங்கள் உயருகின்றன, நெற்றி மலர்கிறது.  நெற்றிக்குள்ளே மலர்ச்சி வருகிறது.

வியப்பு கொள்பவன் இறுக்கம் தளர்ந்து சுருக்கம் களைந்து தன் இயல்போடு நெருக்கம் கொண்டு மனிதனாக இருக்கிறான்.  ‘பசி தூண்ட, பசி வயிற்றைக் கிள்ள’ ‘காதல் அரும்பிட’, ‘கோபம் பீறிட, கோபம் கொப்பளிக்க’ என்றெல்லாம் வார்த்தைகள் தந்த தமிழன் ‘வியப்பு “மேலிட” ‘ என்று தந்து வியப்பு ‘மேலானது’ என்று குறிப்பில் உணர்த்துகிறானோ என வியக்கிறேன்.        exclaimation1

வியப்பு மேலிடும் தருணங்கள் கொண்டு வாழ்பவன், மேலான உணர்வுகளோடு வாழ்கிறான்.
ஸ்டீவ் ஜாப்ஸின் பிக்சர் ஸ்டியோஸின் மேசை விளக்கும், அவர்களது ‘கார்ஸ்’ படத்தில் வரும் கார்களும், ‘நீமோ’ மீனைத் தேடிப் பயணிக்கும் ஏனைய மீன்களும், ஜங்கில் புக்களும், ஏனைய அவ்வகைப் படங்களும் தெளிவாகத் தெரிவிப்பது – வியக்கும் விலங்குகளை விலக்குவதில்லை மழலைகள். விலங்குகள் பறவைகள் என எந்த உயிரினம் ஆனாலும் வியப்பு உணர்ச்சி கூடினால் விரும்பும்படியான அழகுணர்ச்சி கூடும். வியப்பு அழகு. வியப்பு அழகிற்கழகு சேர்க்கும். அகத்தில் மலர்ச்சி தரும்.

வியக்கிறேன்! வியப்பு வரும் மனதில் கலை வரும், கவிதை வரும். ‘எத்தனைக் கோடி இன்பம் வைத்தாய் இறைவா!’ என்பது வெறும் வரிகளாய் இருக்க முடியாது. ஆழ்ந்த வியப்பின் அனுபவத்தில் வந்த விளிம்பாக இருக்கும்.

வியக்கிறேன்!
வியப்பு மேலிடா ‘எந்திரன்’களை கண்டு வியக்கிறேன்.

எப்படி இருந்தாலும், என்னை ஏற்று அரவணைக்கும் என் மனைவியை எண்ணி வியக்கிறேன்!

என் சமீபத்திய வியப்பு – எனது எஸ் 7 எட்ஜ் செல்லிடப்பேசி, ஐ பேடு ப்ரோ, லெனோவோ மடிக்கணிணி என முற்றிலும் வேறு வேறு இயங்கு தளங்களைக் கொண்ட வேறு வேறு சாதனங்களிலிருந்தும் ஒரே கோப்பை எடுத்துப் பயன்படுத்தும் படி வேலையை மிக மிக எளிதாக்கிய கூகுள் ட்ரைவ்!

பரமன் பச்சைமுத்து
சென்னை – 30
28.04.2016

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *