திரை விமர்சனம் : ‘த மேன் ஹூ நியூ இன்ஃபினிட்டி’ : பரமன் பச்சைமுத்து

TheManWhoKnewInfinity_Trailer

 

tmwki2கணிதத்தின் அறிந்துகொள்ள முடியா பெரு முடிச்சுகளின் ஆதாரங்களை அவிழ்த்துப் போடும் சூத்திரங்களை உள்ளே வைத்துக் கொண்டு, அதை நிரூபிக்க வெளியே தினம் தினம் போராடிய நம் தமிழ் மண்ணின் கணித மேதை ராமானுஜத்தைப் பற்றிய ஹாலிவுட் படம்.

(‘த மேன் ஹூ நியூ இன்ஃபினிட்டி’ – ‘முடிவிலியை முன்பே கண்டவன், முன்னமே அறிந்தவன்’ !!!?)

சிறுவயதிலேயே மேதையாகத் திகழ்ந்தவனது கதையின் லண்டன் பல்கலைக்கழகக் காலக்கட்டத்தை எடுத்துக்கொண்டு, அந்த ஐந்தாண்டு வாழ்க்கையை இரண்டு மணிநேரத்திற்கு குறைவான நேரத்தில் தந்திருக்கிறார்கள், மிக நேர்த்தியாக.

தனது சக கணித பேராசிரியர்களிடம், லண்டன் பல்கலைகழக கணித மூதறிஞர் ஹார்டி ‘கேவலம் ஒரு இந்து கிளார்க்’ என்று சொல்லும் இடத்திலிருந்தே உண்மையான படம் துவங்குகிறது. ‘நாம ‘நாமகிரி’, சமுத்தரத்த தாண்டிப் போகப்படாது’ என்று தடுத்து அழுது அரற்றும் ஆசாரத் தாயைத் தாண்டிப் போராடி, லண்டன் வந்து பரவசத்தோடு பார்க்க ஓடி வந்த ஸ்ரீனிவாச ராமானுஜனை ‘உனக்கெல்லாம், நான் நின்னு பேசறதே அதிகம்!’ என்ற அளவில் கைகுலுக்கக் கூட மறுக்கும் ‘ராயல் சொசைட்டி’ என்ற கர்வங்கொண்ட ஹார்டி, ஐந்து ஆண்டுகளின் முடிவில் நிற வெறி கொண்ட அதே ‘ராயல் சொசைட்டி’யில் எதிர்ப்பாளர்களை மீறி என்ன பேசுகிறார், அவன் ஐந்தாண்டு முடிவில் திரும்ப பயணிக்க எத்தனிக்கும்போது எப்படி உணருகிறார் என்பது கவிதை. உண்மைச் சம்பவத்தை திரைக்கதையாகப் பின்னி படமெடுத்திருக்கிறார்கள்.

திரு. ரகமி அவர்கள் எழுதிய ராமானுஜனின் கதையோடு இதை ஒப்பிட்டுப் பேசி கும்பகோணம் வரவில்லை, ஈரோடு காட்டப் படவில்லை, நேராக சென்னையைக் காட்டிவிட்டார்கள், திருமணத்தின் போது அவளுக்கு ஒன்பது வயது, இதில் பெண்மணியாகக் காட்டுகிறார்கள் என்றெல்லாம் சொல்லிக்கொண்டிருக்க வேண்டியதில்லை. இரண்டு மணி நேரத்திற்கு குறைவான நேரத்தில் எதைத் தரமுடியுமோ அதை நிறைவாகத் தந்து விட்டார்கள்.

TheManWhoKnewInfinity_Trailer

ஹார்டியிடம் தந்த இரண்டு குறிப்பு நோட்டுக்கள், காணாமல் போய் 1976ல் கிடைத்த நோட்டு என ராமானுஜத்தின் மூன்று நோட்டுப் புத்தகங்களையும், அதை கணிதக் கழகத்தின் மூலம் அச்சிலேற்றி வெளியிட அவன் பட்ட வலிகளையும் வலிக்குமளவிற்கு சொல்கிறது படம்.

‘உன்னால எப்படி இந்த கணித நிரைகளை, நேரடியா சொல்ல முடிகிறது? சொல்லு. வழிகளை பட்டியலிடு, நிரூபி!’ என்று சொல்லும் உலகில் ‘டேய், நான் அதையெல்லாம் தாண்டியவண்டா! நேரா இறுதிக்கு வந்திட்டேன். இன்னும் புரியலையா உங்களுக்கு!’ என்று போராடும் மேதை நிறையவே சோதிக்கப்படுகிறான். அடுத்தவர்களுக்காக இல்லையென்றாலும், நிரூபித்தால்தான் இதை பிரசுரிக்க முடியும் என்று புரிய வைக்க பெரும்பாடு படும் பேராசிரியர் உண்மையில் ராமானுஜனுக்கு நல்லது செய்கிறார்.

எதையும் அறிவியல் பூர்வமாக அலசி ஆராய்ந்து நிரூபித்தே பழகிய ஆத்திக மேதாவியிடம், தெய்வ நம்பிக்கையைப் பற்றி, ‘என் நாக்கில என் அன்னை வந்து எழுதிட்டு போய்டுவா! அதுவாவே வரும்!’ என்று புரியவைக்கும் இடம் ஆழம்!

‘ராயல் சொசைட்டி’யில் பேராசிரியர் ஹார்டி விவாதிக்கும் இடமும், அதைத் தொடர்ந்து நடந்தேறும் காட்சிகளும், ஊருக்குப் புறப்பட இருக்கும் ராமானுஜனிடம் அவர் பேசும் காட்சிகளும், உணர்வின் மிகுதியால் அவன் அணைக்க, (முன்பு கைகுலுக்கக் கூட மறுத்தவர்) என்ன செய்கிறார் என்பதும் அதைத் தொடர்ந்து வரும் தந்தி அதற்கப்புறம் அவர் பேசும் அந்தக் கூட்டம் இவைதான் படத்தின் பிரதானக் காட்சிகள். இவைகளை ரசிக்க துவக்கத்திலிருந்து வர வேண்டும்!

ராமானுஜத்தின் குண்டு முகத்தோடு நம் மாதவனின் முகம் ஒத்துப் போயிருக்குமே, நடிக்கவும் செய்வாரே என்பது நம் எண்ணமாக இருந்தாலும், தேவ் பட்டேல் அழகாக நடித்திருக்கிறார். ‘புதுப்பாடகன்’ ‘மைதிலி என்னைக் காதலி’ காலத்து அமலாவை நினைவூட்டும் தேவிகா பிஸ்சே, காதலை வைத்துக் கொண்டு தவிக்கும் இளம் மனைவியாக அற்புதமாக செய்திருக்கிறார். ‘அம்மா’ என்ற வார்த்தையைத் தவிர மற்றதெல்லாம் ஆங்கிலமே என்று பழகிப் போன நேரத்தில் திடீரென்று தமிழ் வருவது இன்ப அதிர்ச்சி. அமெரிக்கர்கள், அமெரிக்கர்களையும் அமெரிக்க வாழ் தமிழ் தெரியா இந்தியர்களையும் வைத்துக் கொண்டு எடுத்தப் படம், தமிழ் கொஞ்சம் வித்தியாசமாக இருக்கவே செய்யும்!

வி-டாக்கீஸ் வெர்டிக்ட்: ‘த மேன் ஹூ நியூ இன்ஃபினிட்டி’ – ‘இம்ப்ரஸிவ்’ – நம் கணித மேதைக்கு ஹாலிவுட் செய்திருக்கும் மரியாதை. நிச்சயம் பாருங்கள். உங்கள் பிள்ளைகள் பார்க்கட்டும்.

திரை விமர்சனம் – பரமன் பச்சைமுத்து | ParamanIn.com

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *