‘கபாலி’ – திரை விமர்சனம் : பரமன் பச்சைமுத்து

wpid-wp-1469229993189.jpg

மலேசிய மண்ணில் இருபத்தியைந்து ஆண்டுகளுக்கு முன்னால் வஞ்சத்தால் வீழ்த்தி, குடும்பத்தை சின்னாபின்னமாக்கி தன்னைச் சிறையில் தள்ளிய எதிரிகளை, சிறையிலிருந்து வந்து ஸ்டைலாக ‘செய்யும்’ நாயகன் மற்றும் அவன் வாழ்வில் எதிர்கொள்ளும் திருப்பங்களை களமாகக் கொண்ட கதை.
‘வயசான மனுஷன், என்ன பிரச்சினை வரப்போவுது, ரிலீஸ் பண்ணுவோம்!’ என்று பேசும் மலேசிய சிறையதிகாரிகள், சிறையறையிலிருந்து வரும் முன்னே ‘புல் அப்ஸ்’ எடுக்கும் ரஜினி, வெளியே வரும் போது அறிவுரை சொல்லும் சிறையதிகாரியிடம் ‘உஷ் மூடு’ எனக்கு என்ன செய்ய வேண்டுமென தெரியும்  என்று சைகை காட்டும் ரஜினி என அடுத்தடுத்த காட்சிகளில், இனி நாயகனும் கதையும் பயணிக்கப் போகும் திசையை சொல்லிவிடுகிறார் இயக்குனர்.

ரஜினி படங்களைப் பொறுத்த வரையில் இந்தப் பாத்திரத்தை இப்படி செய்தார், அந்தப் பாத்திரத்தை அப்படி செய்தார் என்பதை கடத்து, பாத்திரத்தைத்  தாண்டி அவர் பார்க்கப்படுவார். அவரே தெரிவார். கபாலியிலும் அது நடக்கிறது.

செம ஸ்டைலிஷாக, செம ஸ்மார்ட்டாக இருக்கிறார்.

சிறையிலிருந்து வெளியே வந்து நேராக எதிராளியின் இடத்திற்கே போய் ‘பறவையோட இயல்பே பறக்கறதுதான், கூண்டுல இருக்கறது இல்ல!’ என்று கூறி ‘கோழிக்கறி வேணுமா?’ என்றவனிடம் ‘டீத்தண்ணி’ கேட்பதும், அதற்குப் பிறகு நடப்பதும் அதகளம்.
மூன்று கெட்டப்களில் ரஜினி என்றாலும், முதல் இரண்டும் ரசிகர்கள் பார்க்க விரும்பும் அளவிற்கு அழகு. வெள்ளை தாடி, கோட் சூட்டில் ஆஸம்!

ரஜினி படத்தில் அரிதாகவே அடுத்தவர்கள் தெரிவார்கள். படம் முழுக்க ரஜினியே தெரிவார். இதில் இன்னும் அதிகமாக நிறைந்திருக்கிறார்.  மனைவியைப் பார்க்கத் தவிக்கும், புல்தரையில் போய் அழும், நிதானமாக எதிராளி முன்னே அமர்ந்து காலைத் தூக்கிப் போட்டுப் பேசும் என படம் முழுக்க ரஜினி.   அந்த விஷயங்களில், ‘மகிழ்ச்சி!’

ஆனால், அது மட்டுமே போதுமா?

ரஜினி படங்களில் வரும் குடும்ப விழா பாடல், நகைச்சுவை என எல்லாவற்றையும் ஓரங்கட்டிவிட்டு இயக்குனரின் படமாகவே தந்திருக்கிறார் ரஞ்சித்.

படம் தொடங்கியதிலிருந்து கோடு பிடித்துப் பரபரவென்று பயணிக்க செய்து நம்மைக் கட்டிப் போட்ட இயக்குனர், இரண்டாம் பாதியில் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கலாம்.

சந்தோஷ் நாராயணன் பின்னனியில் நன்று என்று காட்டுகிறார்.

ராதிகா ஆப்தே பளிச்சென்று இருக்கிறார். தன்ஷிகா நன்றாக செய்திருக்கிறார்.

மாணவர்களின் கேள்விக்குப் பதில் சொன்னவாறே ‘ஃப்ளாஷ்பேக்’ஐ முடித்த விதமும், கடந்த கால குமுதவல்லிப் பாத்திரத்தை நிகழ்காலத்தில் கபாலீசுவரனின் கூடவே பிணைத்துக் காட்டிய விதமும் நன்று.

சென்னையின் நட்சத்திர ஓட்டலில் அறைக்கதவு தட்டப்படும் போதெல்லாம் அவர்களிடம் தென்படும் அந்த பதற்றம், தாதாக்களின் இன்னொரு பக்க நிலை எப்படி இருக்கும் என்று உணர்த்துகிறது.

கிட்டத்தட்ட ‘மெட்ராஸ்’ படத்தில் இருந்தவர்கள் அனைவரும் இருக்கின்றனர். கிஷோர் மற்றும் மற்ற இருவர் மீது வரும் உணர்வு கூட வில்லன் மீது வரவில்லை. ஒரு வில்லன் ரசிகனை கோபப் படுத்த வேண்டும், வியக்க வைக்க வேண்டும் அல்லது ஏதாவது ஒரு உணர்வு ஏற்படுத்த வேண்டும். எதையும் செய்யவில்லை இந்த வில்லன்.

மலேசிய காவல்துறை அதிகாரிகள் ‘டான்’ முறையை ஒழிக்க முயற்சிப்பதும், அதற்காக அதே கூட்டத்திலிருந்து ஒருவனை தயார் செய்வதும் புரிந்து கொள்ளக் கூடியதே. இருந்தாலும், முடிவை வேறு விதமாக இன்னும் ‘நச்’சென்று முடித்திருக்கலாம்.

வி-டாக்கீஸ் வெர்டிக்ட்: ‘கபாலி’ – முதல் பாதி – ட்ரிப்பிள் ‘மகிழ்ச்சி’, இரண்டாம் பாதி – தளர்ச்சி.

ரஜினி இருக்கிறார், பார்க்கலாம். பாருங்கள்.

– திரை விமர்சனம் : பரமன் பச்சைமுத்து

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *