‘அச்சம் என்பது மடமையடா’ – திரை விமர்சனம் 

wpid-wp-1479018568328.jpg

தூங்கி நண்பர்களோடு ‘மாவு’ மாதிரி பொழுதைக் கழிக்கும் ஒருவனது வாழ்வில் திடுமென இனிமையான சில விஷயங்களும் கூடவே ‘வலி’மையான சில விஷயங்களும் நடந்தேறுகின்றன. வாழ்க்கை என்பது இந்தப் புள்ளியில் தொடங்கி அந்தப் புள்ளியில் போய் சேரும் நேர்க்கோடாய் எல்லா நேரங்களிலும் இருந்துவிடுவதில்லை. அது எதிர்பாராத நேரங்களில் எதிர்பாராத இன்பத்தையும் அதிர்ச்சியையும் அள்ளித் தெளித்துவிடக் கூடியது. அப்படி நடக்கும் நிகழ்சிகளை அந்த ‘மாவு’ப்பையன் எப்படி எதிர்கொள்கிறான், அதில் என்னவாகிறான் என்பதை திரைக்கதையாய் கொண்ட கௌதம் வாசுதேவ் மேனனின் படம். 

காதலியை பார்ப்பதென்றால் எவ்வளவு தூரத்தில் அவள் வீடு இருந்தாலும் ஏழு கடல் ஏழு மலை தாண்டி ஏழடி உயர சுவர் ஏறி சன்னல் வழியே ஏழு வினாடியாவது பார்த்து விட எதையும் செய்வார்கள் இளைஞர்கள் என்று சொல்லப்படும் காலத்தில் தனது வீட்டிலேயே வந்து  காதலி குடி புகுந்தால் , தனது அருகிலேயே இரவெல்லாம் அவள் இருந்தால்….எப்படி இருக்கும் ஒரு காதலனுக்கு? போதாக் குறைக்கு பைக்கில் சில நாட்கள் சில ஊர்கள் என சுற்ற ஆசைப்படுபவனோடு தானும் வருகிறேன் என்று காதலியே வந்து உட்கார்ந்துகொண்டால்! நினைக்கவே வித்தியாசமாக இருக்கிறதல்லாவா. இப்படித்தான் பயணிக்கிறது படம். அதன் பின்னே அடுத்தடுத்து வரும் திருப்பங்கள் காதல் படத்திற்குள் ஆக்ஷனை பேக் செய்து வைக்கிறது. 

சிம்பு என்னும் எஸ்டிஆர் சொன்னதை செய்து அடக்கி வாசித்திருக்கிறார் என்றாலும் என்னவோ ‘மிஸ்’ ஆகிறது என்பதை சொல்லித்தான் ஆகவேண்டும்.  முதல் பாதி முழுதும் முக பாவங்கள் நடிப்பு என்பதைவிட வசனங்கள் மூலமே இவரது பாத்திரம் தப்பித்துக் கொள்கிறது.

கௌதம் மேனன் படங்களில் வரும் நாயகிகளைப் போலவே மஞ்சிமா அழகாகக் காட்டப்படுகிறார். ‘இவ்ளோ விஷயங்களை இந்தப் பொண்ணுக்காக பண்ணலாம்!’ என்று சொல்லுமளவிற்கு இருக்க வேண்டும் என்பதை உணர்ந்து முதல் பாதியில் அழகாக காட்டியிருக்கிறார்கள். இரண்டாம் பாதியில் நடக்கும் ஆக்ஷன் ரணகளத்தில் நாயகியும் கலந்துவிடுகிறார். 

பைக்கில் மகிழ்ச்சியாகத் திரிகிறார்கள் திடீரென்று அது நடந்துவிடுகிறது என்று திருப்பம் காண்பிப்பது பொதுவாய் எல்லோரும் செய்வது.  தூரத்தில் லாரியைக் காட்டி, கூடவே ஒரு துடிப்பைக் கூட்டும் பின்னணி இசை கூட்டி ‘இதுதான் நடக்கப் போகிறது!’ என்று எதிர் பார்க்க வைத்து  அது நடக்கும்போது அந்த இடத்தில் ‘ஏனோ வானிலை மாறுதே!’ என்று பாடல் வைக்க ஒரு இயக்குனருக்கு பெருந்துணிச்சல் வேண்டும். அந்த இடத்தில் இயக்குனர் பளிச்சென்று தெரிகிறார்.  ஆனால் க்ளைமேக்சிலும் அதையொட்டி அதற்கு முன்பு நடந்தேறும் காட்சிகளிலும் அந்த இயக்குனரை காணவில்லை.   கிளைமேக்ஸ் மற்றும் அதற்கு முந்தைய காட்சிகள் படத்தை கீழே தள்ளிவிடுகின்றன. 

கையொடிந்தவன் எப்படி சண்டைபோடுவான், எல்லாரையும் சுட்டவன் காக்கிசட்டை போட்டவனை மட்டும் ஏன் போடமாட்டான் (அதுவும் மருத்துவமனை வார்டுக்கு வெளியே ஒரு காக்கிச் சட்டையை போட்டுத் தள்ளியவன்!) என்பது போன்ற கேள்விகளையெல்லாம் கேட்காமல் ஒரு முறை பார்த்துவிட்டு வரலாம். 

‘ராசாளியே… ராசாளியே நில்லு’  பாடல் கேட்க அருமை.

வீ டாக்கீஸ் வெர்டிக்ட்: ‘அச்சம் என்பது மடமையடா’ – படம் கொடுமையடா அல்ல, பார்க்கலாம். 

 திரை விமர்சனம் : பரமன் பச்சைமுத்து

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *