வண்ணதாசனுக்கு வணக்கம்…

​ஒரே குடும்பத்திலிருந்து தந்தையும் மகனுமென இருவர் சாகித்திய விருதுகள் வென்றெடுத்த நிகழ்வு  இந்தியாவிலேயே இதுவரை நடந்திருக்காதென்றே எண்ணுகிறேன். அந்த முத்திரையைப் பதித்து, தந்தை தி.க. சிவசங்கரனுக்கும் தமிழுக்கும் பெருமை சேர்த்த வண்ணதாசன் அவர்களுக்கு வணக்கங்கள். 

“பரமனுக்கு எல்லோரும் பழைய ஆள்தான். பார்த்த இரண்டாவது நிமிஷமே புதிய ஆளை அவன் பழைய ஆளாக்கி விடுவான். ஆளுக்குத் தக்க பேச்சு எல்லாம் இராது. ஆனால், ஒவ்வொரு ஆட்களின் மடியிலும் பூப்போல கைப்பிள்ளையை உட்கார்த்தி வைப்பது மாதிரி கொடுக்கிறதற்கு அவனிடம் ஒவ்வொன்றுஇருக்கும்.” என்ற அவரது இந்த பத்தி 2007ல் வாசித்தது இன்றும் என்னுள்ளே வசிக்கிறது, வசீகரிக்கிறது.  

மனதிற்கு நெருங்கிய மக்கள் பாடகர் திருவுடையான் சாலை விபத்தில் இறந்த போது, ‘இனி நான் எதற்கு இருக்க வேண்டும், செத்தாலென்ன?’ என்று வண்ணதாசன் அழுததாக வந்த செய்தி படித்து என்னைப் போல கண்ணில் நீர் முட்ட செய்தித்தாளை தூக்கி எறிந்தோர் பலர் இருப்பர். இன்று அவர்களெல்லாம் உயரப் பறப்பர்.

வண்ணதாசனுக்கு முக்கிய நிகழ்வு (வர்ணம் – ஓவியர் – பெயர்க்காரணம்) குமுதத்தின் வழியே நடந்திருக்கலாம். எனக்கு வண்ணதாசன் அறிமுகம் நடந்தது முதலில் விகடன் வழியேதான்.

தன் வீட்டிலேயே ஒரு நூலகம் வைத்து வண்ணதாசனை உருவாக்கிய அவரது தந்தைக்கும்,  சுஜாதாவை இழந்து பாலகுமாரனில் மூழ்கிய பெரும்பாலான இக்கால இளைஞர்களுக்கு வண்ணதாசனையும், எஸ் ராமகிருஷ்ணனையும் அறிமுகம் செய்த விகடனுக்கும் நன்றிகள்! 

நீண்ட நாள் வாழ்ந்து நிறைய எழுதுங்கள் ஐயா! 
:பரமன் பச்சைமுத்து

காஞ்சிபுரம்

22.12.2016

Www.ParamanIn.com 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *