‘டியர் ஸிந்தகி’ – ‘அன்புள்ள வாழ்க்கையே…’ : திரை விமர்சனம்

ஆண் பெண் உறவுச் சிக்கலை கையாளத்தெரியாமல் உளவியல் ரீதியாக பாதிக்கப்பட்டு தனது வேலையிலும் கவனம் செலுத்த முடியாமல் கல்லாக இறுகி நிற்கும் நகரத்து வாழ் இந்தத் தலைமுறை இளம்பெண் ஒருத்தியின் வாழ்வில் மனத்தை மலர்ச்சி பெறச் செய்யும் ஒரு மனிதன் வந்தால் என்னவாகும், எதையுமே வெளிப்படையாய் சொல்லாமல் உள்ளேயே அழுத்தியழுத்திப் பூட்டி வைக்கும்  அவளை எப்படித் திறக்கிறான் அவன், அப்புறம் என்னவாகிறது அவளது வாழ்க்கை என்பதை மிகச் சிறப்பாக சொல்லும் படம்.
எதையும் ‘பட்’டென்று பேசிப் போய் விடுபவர்களிடம் பிரச்சினை இல்லை. எதையும் வெளிப்படுத்தாமல் உள்ளேயே வைத்துக் கொண்டு உருவகங்கள் கொடுத்து கொடுத்து வாழ்பவர்கள் ஒரு நாள் வெடித்து விடுகிறார்கள் என்பது படத்தின் வழியாக நாம் படிக்கும் செய்தி.

எதையும் தலை கீழாக வைக்கும், நீங்கள் கொடுக்கும் எந்த வரையறைக்கும் நான் உட்பட மாட்டேன் என்றே பிடிவாதமாய் நிற்கும், வண்ணக்கயிறுகளும் கூடவே வண்ணக்கடிகாரமும் அணிந்து ‘என்னா இப்போ!’ என்பதான மனநிலையில் வாழும் இக்கால யுவதி ‘அல்கா’வாக அலியா பட் வாழ்ந்திருக்கிறார்.

சண்டை, பாடல்கள், தன்னை நிலை நிறுத்தும் சிறப்பு காட்சிகள் சேர்ப்பு என எல்லாக் கதாநாயகத் தன்மைகளையும் துறந்து விட்டு கதைக்குத் தேவையான ‘டாக்டர். ஜஹாங்கீர்’ ஆகவே, அதுவும் நிஜ வாழ்வில் அவர் விளம்பரத் தூதராக இருக்கும் அதே கைக்கடியாரத்தோடே வந்து வாழ்ந்து விட்டு போகிறார் ஷாருக்கான். அந்த பாத்திரமே அவரை தூக்கி உயர்வாகக் காட்டி விடுகிறது. 

‘ஒண்ணு காதலுக்கும் கமிட் ஆகமாட்டேங்கற, என் வழியில நான் போனதுக்கும் இப்படி குத்தம் சொல்லி திட்டறே! என்ன வாழ்க்கைடா இது?’ என்ற நிலையில் நடிக்கும் நெடிய நண்பர் பாத்திரம் மீது பரிதாபம் வருகிறது. 

அலையோடு விளையாடுவதாகட்டும், சீனத்து மனிதன் கதை சொல்வதாகட்டும், கண்களில் சொட்டு மருந்து விட்டு அழும் அவரை விட்டு நடந்து திரும்ப ஓடி வந்து கட்டிக்கொள்ளும் இடத்திலாகட்டும் என படம் முழுக்க இருவரும் பின்னியெடுக்கின்றனர்.  இப்படி காட்சிகளை வைத்து திரைக்கதைதான் முக்கியம் என்று காட்டிய இயக்குனரே இதில் பெரும் வெற்றி கண்டவர்.

‘ஆர் யூ எ லெபனீஸ்?’ என்று கேட்கும் முந்தைய தலைமுறையின் குழப்பத்தையும், அவர்களை குழம்ப வைக்கும் இந்தத் தலைமுறை மகள்களையும் வசனம் நச்சென்று காட்டுகிறது. 

வி-டாக்கீஸ் வெர்டிக்ட்: ‘டியர் ஸிந்தகி’ – ‘அன்புள்ள வாழ்க்கையே!’ அற்புதம். பாருங்கள்.

:திரை விமர்சனம் : பரமன் பச்சைமுத்து 

Facebook.com/ParamanPage 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *