‘ சி 3’ – திரை விமர்சனம் : பரமன் பச்சைமுத்து

surya-singam3-photos-600x591

surya-singam3-photos-600x591

நல்லூர் மளிகைக் கடையிலிருந்து சென்னை நகரத்திற்கு, அப்புறம் கடல் தாண்டி ஆப்பிரிக்க தேசத்திற்கு என்று தொடர்ந்து இப்போது ஆந்திராவிலிருந்து ஆஸ்த்ரேலியாவிற்கு என்று ஒரு திரைப்படம் மூன்று தொடர் பாகங்களாக வெளிவருவது தமிழுக்குப் புதிது.
 
ஹரி படம் என்றாலே வில்லன்கள் கேமராவை பார்த்துக் கத்துவார்கள், பரபரவென்று ஷாட்கள் நகரும், நாயகன் ஒரு குத்து குத்தினால் ஆட்கள் எகிறி சுழன்று தூர விழுவார்கள், பனைமரம் பற்றியெரியும், கார்கள் பறக்கும், ‘ஒருச் சாமி.. ரெண்டு சாமி…. மூணுச்சாமி… ஆறிச்சாமி… திருநெல்வேலி!’ ‘பாக்கறியா.. பாக்கறியா.. பாக்கறியா….’ என்ற விகிதத்தில் படத்தின் நாயகர்கள் யாராக இருந்தாலும் உச்சபட்ச குரலில் ஓங்கி கத்துவார்கள் என்பதெல்லாம் இயல்பு. கார் பறப்பதற்குப் பதில் இதில் கண்ட்டேயினர் பறக்கிறது என்பதைத் தவிர மற்றவை எல்லாமும் கொண்ட ‘சிங்கம்’ ஃபிரேமிற்குள் பொருத்தப்பட ஹரி படம்.
 
‘சிங்கம்’ வெளியாகி ஏறக்குறைய எட்டு ஆண்டுகளுக்குப் பின்பு அதன் மூன்றாம் பாகம் வந்திருக்கிறது. அதில் இருந்ததை போன்றே, உண்மையில் அதை விட இன்னும் மிடுக்காய், விறைப்பாய் இருக்கிறார் சூர்யா. சூர்யாவிற்கு உடையலங்காரம் செய்தவர் மிகச் சிறப்பாய் செய்திருக்கிறார்.
 
அனுஷ்காவிற்கும், ஸ்ருதிஹாசனுக்கும் மற்ற தமிழ்ப் படங்களைப் போல தொட்டுக் கொள்ளும் பாத்திரங்கள்.
சிந்திக்கக் கூட இடம் கொடாமல் பரபரவென்று திரைக்கதை செய்திருக்கிறார் ஹரி (முந்தைய படங்களின் ‘காதல் வந்தாலே கண்ணு ரெண்டும் தன்னாலே’ ரக பாடல்கள் படத்தின் வேகத்தை குறையாமல் பார்த்துக் கொண்டன. இதில் பாடல்கள் பெரிய வேகத்தடைகள்!)
 
அறிவுறைகள், அதிக சத்தம், பாடல்கள் சுமார் ரகம்தான் என்ற குறைகள் இருந்தாலும் பரபரவென்று போகும் ஆக்ஷன் படம் பார்க்க விரும்புவோர்கள் பார்க்கலாம்.
 
 
வி-டாக்கீஸ் வெர்டிக்ட்: ‘சி 3’ : ‘பாய்ச்சல், கூடவே கூச்சல்’— பார்த்தாலும் பரவாயில்லை, பார்க்காவிட்டாலும் இழப்பில்லை.
 
: திரை விமர்சனம் : பரமன் பச்சைமுத்து
Facebook.com/ParamanPage

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *