அனுபவப் பகிரல் என்பது அதிகம் நல்லதையே செய்யும் என்றாலும் …

அனுபவப் பகிரல் என்பது அதிசயங்கள் செய்யக் கூடியது.  அறியாமையால் அடுத்த வர இருந்த தவறுகளை இங்கிருந்தே களையச் செய்து ஏற்றம் தரக்கூடியது.

வாழ்க்கைப் பாதையில் பயணித்து ஒரு நிலையை கடந்து நிற்கும் ஒருவனிடம் துவக்க நிலையில் நிற்கும் ஒருவன் செவிமடுக்கும் போது செய்யப்படும் அனுபவப் பகிரல் அசாத்திய விளைவுகளை அவனுள் ஏற்படுத்தி அவனை தூக்கி விட்டுவிடும்.  

‘நான் இந்த நிலையில் இருந்தேன், இந்தத் தவறுகளை செய்தேன், இப்படித் துன்புற்றேன். இப்படி செய்திருந்தால் தவிர்த்திருக்கலாம். நீங்கள் இப்படிச் செய்யுங்கள்’ என்று ஒருவன், தான் கடந்து வந்த பாதையைத் திரும்பிப் பார்த்து அசை போட்டு கற்றதை துவக்க நிலையில் இருப்பவர்களிடம் பகிர்ந்து கொள்ளும் போது கேட்பவர்களின் வாழ்க்கையே மாறிப் போகலாம்.

அனுபவப் பகிரல் அலாதியானது என்றாலும் அதை மனிதர்கள்  எதிர்கொள்ளும் விதம் மிக மிகச் சிக்கலானது. இதற்கு செவி மடுத்தால் அது எனக்கு மிக மிக நல்லதைச் செய்யும் என்றாலும் அதை சொல்வது சொந்த அப்பன் என்பதால் கேட்கப் பிடிப்பதில்லை எனக்கு. இந்த ஒரு சங்கதி என் வாழ்வையே புரட்டிப் போடும் வல்லமை கொண்டது என்று தெரிந்தாலும் சொல்வது கணவன் என்பதால் அதைக் கேட்க விரும்புவதில்லை நான்.  இத்தனை நாளாக நடத்தும் போராட்டத்திற்கெல்லாம் ஒரு எளிய தீர்வு இவள் சொல்வதில் இருக்கக் கூடும் என்ற வாய்ப்பு இருந்தாலும், சொல்வது மனைவி என்பதால் கேட்கவே விரும்புவதில்லை நான்.

 அனுபவப் பகிரல் என்பது அதிகம் நல்லதையே செய்யும் என்றாலும் அது எங்கிருந்து வருகிறது என்பதைப் பொறுத்தே அது ஏற்கப்படுகிறது. வீட்டின் வெளியிலிருந்தும் கொல்லைப் புறத்திலிருந்தும் சன்னல் வழியேயும் வருவதை வாய் பிளந்து கேட்கும் மனிதன், தன் வீட்டின் உள்ளிருந்து வருவதை கேட்க மறுத்து செவியை அடைத்துக் கொள்கிறான்.

அதுவே நடந்து கொண்டிருந்தது அங்கும். அனுபவங்கள் அதிகம் பெற்றோர் அதே அலுவலகத்தில் இருந்த போதிலும், வெளியூரிலிருந்து தலைமை அலுவலகத்திலிருந்து வந்து சிவநெறித்தேவன் செய்யும் அனுபவப் பகிரலை கேட்க ஆவலாக இருந்தனர் சென்னை அலுவலகத்து ஊழியர்கள்.

‘நம்மோட இதே ப்ராஞ்ச்சில வேல செய்து கார்ப்பரேட் டீமுக்கு போனவர்தான் நம்ம சிவநெறித்தேவன்… இந்த சிறப்புக் கூட்டத்துக்கு அவர்….’ என்று தொடங்கி ‘அவர் வீரரு தீரரு..’ என்பதான அறிமுகங்கள் முடித்து ‘இப்போது சிவநெறித்தேவன் உங்களோடு பேசுவார்…’ என்று அவர்கள் முன் நிறுத்தப்பட்டான்.

 ‘வணக்கம்’ என்று தமிழில் சொல்லித்தான் ஆரம்பிப்பான் இவன் என்று தெரிந்தவர்கள் சிலர் எண்ணிக் கொண்டிருக்கும்போதே அதை உடைத்து வேறு மாதிரி தொடங்கினான் அவன்.

‘சூப்பர் ஈவ்வ்னிங்….!’

(‘வளர்ச்சி’ மாத இதழில் நான் எழுதிக் கொண்டிருக்கும் ‘நதி போல ஓடிக் கொண்டிரு…’ தொடரிலிருந்து )

#நதி போல ஓடிக் கொண்டிரு

#வளர்ச்சி

 

: பரமன் பச்சைமுத்து

சென்னை

25.08.2017

 

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *