‘மெர்சல்’ – திரை விமர்சனம் : பரமன் பச்சைமுத்து

images1199586415.jpg

அப்பா கமலை வில்லன்கள் குழாம் நயவஞ்சகமான முறையில் கொடூரமாகக் கொன்றுவிட, சின்னாபின்னமாகி சிதறிப்போகிறது குடும்பம். இருபது ஆண்டுகளுக்குப் பிறகு தன் குடும்பத்தை சிதைத்த எதிரிகள் ஒவ்வொருவரையும் தினுசு தினுசான முறையில் கொன்று பழிதீர்ப்பார் வித்தைகள் காட்டும் மகன் கமல். உருவ ஒற்றுமையால் பிரச்சினையில் சிக்குவார் அவரைப் போலவே இருக்கும் இன்னொரு கமல். தனது மூலமும், உண்மையான பெற்றோர்களைப் பற்றியும் தெரிய வர நெகிழ்வார்கள் சகோதரர்கள்.

முப்பதாண்டுகளுக்கு முன்பு வந்த ‘அபூர்வ சகோதரர்கள்’ஐ விஜயை வைத்து ஆயில் பிரிண்ட் போட்டு இன்றைய காலகட்டத்திற்கு செய்தால் ‘மெர்சல்’ தயார்.

பழிவாங்கும் கதையை திரைக்கதையில் சின்ன சின்ன நகாசுகள் வைத்துப் பின்னி நன்றாகக் கொடுத்த விதத்தில் பெயரைக் காப்பாற்றிக் கொண்டார் இயக்குனர் அட்லீ.

ஒவ்வொரு பாத்திரத்திரத்திற்கும் வெவ்வேறு உடல் மொழி வடிவம் என்று சிறு வித்தியாசம் காட்டி உழைத்திருக்கிறார் விஜய். சமந்தா – விஜய் பகுதிகள் நன்று. வித்தைக் கார விஜய் செய்பவை (ரஜினி படத்தில் இயல்பாக நடப்பவை போல) குழந்தைகளுக்கு நிச்சயம் பிடிக்கும்.

‘மெர்சல்’ படத்தின் வடிவமைப்பே ஜல்லிக்கட்டைக் குறிக்க, படத்தின் எல்லா விளம்பரங்களிலும் காளைகள் நிற்க, அவற்றை நினைத்துக் கொண்டு படத்திற்குப் போனால் அது சம்மந்தமாக ஒன்றையும் காணோம். விலங்குகள் நல வாரியத்தின் கட்டுப்பாடு காரணமாக வெட்டிவிட்டார்கள் போல.

வெல்கம் பேக் வடிவேலு சார்! வடிவேல் நன்று. ப்ளாஷ் பேக்கில் வடிவேலுவின் உருவ ஒற்றுமை கொண்ட ஒருவரை இளம் வடிவேலாகக் காட்டியது சிறப்பு.

ரஹ்மானின் ‘ஆளப் போறான் தமிழன்’ ஒலிக்கிறது வெளியே வந்த பின்னும்.

விஜயின் உழைப்பும் ஸ்கிரீன் பிரசன்ஸும் மிளிர்கின்றன. முழுப்படத்தையும் தாங்கிப் போகிறார்.

இறந்ததாக நினைத்து எறியப்பட்டு பிழைத்தக் குழந்தை மதுரை மானூரின் வடிவேலுவிற்கு எப்படித் தெரிந்தது? ‘தானே தாய்!’ என்று அடித்துச் சொல்லும் கோவை சரளாவிடம் அந்தக் குழந்தை வந்தது எப்படி? அந்தக் கதை என்னவாயிற்று போன்றவை தொக்கி விடையின்றி குழப்பமாகவே நிற்கின்றன. ஒரு வேளை வெட்டப்பட்ட காட்சிகளில் போய்விட்டன போலும்.

முதல் பாதியில் ஒரு பத்து நிமிடங்களும், இரண்டாம் பாதியில் ஃப்ளாஷ் பேக்கில் ஒரு பத்து நிமிடங்களும் படத்தின் வேகத்தை தடுத்து விடுகின்றன.

மாநிலத்தை மக்களைக் காப்பாற்ற இலவசக் கல்வி வேண்டுமென குருநாதர் ஷங்கர் சொல்ல, மாநிலத்தை மக்களைக் காப்பாற்ற இலவச மருத்துவம் வேண்டுமெனச் சொல்லி படத்தை முடிக்கிறார் சிஷ்யன் அட்லீ.

விஜய் இளமையாகவே இருக்கிறார். விஜய் ரசிகர்கள் கொண்டாடுவார்கள்

வி-டாக்கீஸ் வெர்டிக்ட்: ‘மெர்சல்’ – அட்லீயின் ‘அபூர்வ சகோதரர்கள்’ – பார்க்கலாம். நல்ல பொழுது போக்கு

:திரை விமர்சனம் – பரமன் பச்சைமுத்து

Www.ParamanIn.com

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *