மழையைப் பற்றியெழுதிய மற்ற பெரியோரே…

‘மாமழை போற்றுதும்!’ என்று காப்பியம் செய்த சேர சோதரா,

‘நீர்இன்று அமையாது உலகெனின்’ என்றெழுதிய வள்ளுவப் பேராசானே,

மழையைப் பற்றியெழுதிய
மற்ற பெரியோரே,

தேர்வுக்காக மட்டுமே படித்த உங்கள் வரிகளை தேர்வோடே விட்டுவிட்டோம் நாங்கள்.

மழையைக் கொண்டாடி வரவேற்ற முன்னோரே,
மாரியை அம்மனாக வழிபட்ட
மூத்தோரே,

மன்னிக்கவும்.
மழை என்றால் ‘சங்கடம்’
என்றே பதம் கொள்ளும் பரம்பரையாக உருவாகிறோம் இவ்விடம்

மணிரத்னம் படத்தில் மட்டுமே அழகாகத் தெரியும் மழை,
நிஜத்தில் ‘ஐயய்யோ!’ என்று அலறவே வைக்கிறது எமை.

எங்கள் தெருக்களில் ஒரு நாள்
ஏரிகள் புரண்டதால்
நினைவில் நிற்கும் மிச்சம்
மழை என்றாலே அச்சம்

இரு நாள் பெய்தால்
இன்னல் என்கிறோம்,
தொடர் மழை என்றால் தொலைந்தோம் என்றலறுகிறோம்

நாங்கள் பிறப்பெடுக்கும்
முன்னிருந்தே
பெய்து கொண்டிருக்கிறது மழை மின்னி இருண்டே
புலம்பவும் சலம்பவும் கற்றது
இப்பொழுதே

அரசியல் அன்பர்களாலும்
ஊடக நண்பர்களாலும்
அலறக் கற்றுக் கொண்டோம்
மிரள விதிர்த்து நின்றோம்

தூறினால் ‘தூர் வாரவில்லை’
அடித்துப் பெய்தால் ‘ஐயய்யோ ஐயகோ!’ என்று அழக் கற்றுக் கொண்டோம்

மழைக் காலத்தில் மழையல்லாது எரிமலையா கக்கும்?
மழைக் காலத்தில் மழைதானே பெய்யும்,
அது பெய்யத்தானே வேணும்!

இரு மாதங்கள் பொறுத்துக் கொண்டால் இருபது மாதங்களுக்கு நீர் இருக்குமே.

எங்கள் வாழ்வு வளம் பெற ஏரிகள் நிரம்பனுமே,
ஏரிகள் நிரம்ப நிலத்தடி நீர் உயருமே, பல்லுயிர் செழிக்குமே!

மழையென்றாலே பதறும்
மனநிலைப் பதரும்
மாறிட
மழையைக் கொண்டாடக் கற்றுத் தருவோர் யாரும் உளரோ!

வெறும் எட்டு வாரங்கள் பொறுப்பீர்
பெறும் ஆண்டு முழுதும் சிறப்பீர்
என எடுத்தியம்ப எவரும் உளரோ!

மழை வேண்டும் எங்களுக்கு,
மண் செழிக்கவும் உயிர் உயரவும்!

மழை வேண்டுமெங்களுக்கு,
மக்கள் சிறக்கவும் மானுடம் செழிக்கவும்!

: பரமன் பச்சைமுத்து
05.11.2017
சென்னை

Facebook.com/ParamanPage

Www.ParamanIn.com

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *