எனக்கு மீன் பிடிக்கத் தெரியும் பன்னீரு…

சைவனென்றாலும், ரஷ்யாவின் விளாடிமிர் புடின் போல வெற்று மார்போடு குளிர் ஏரியில் இறங்கிப் பிடிக்கவில்லையென்றாலும், மீன் பிடித்த அனுபவங்கள் உண்டெனக்கு.

வீராணத்தில் தண்ணீர் திறந்து விட்டால் மானம்பாத்தான் வாய்க்கால் வழியே சில தினங்களில் எங்கள் ஊரை வந்தடையும். வாய்க்கால்களில் மதகுகளில் நீர் புறண்டு ஓட, அதைக் காண சிறுவர்கள் நாங்கள் ஓடுவோம். ‘இங்க பாரு, ஆயிவரத்து புள்ளைமார் வூட்டுப் பையன் ஒருத்தன் தண்ணில வுழுந்து செத்துப் போயிட்டான். வாய்க்காலுக்கு போற வேலைல்லாம் வச்சுக்கக் கூடாது’ என்று அம்மா சொல்வது நினைவில் ஒலித்தாலும், குளத்து மேட்டுத் தெரு சிறுவர்களோடு சேர்ந்து செல்லும் குதூகலம் என்னை வென்றுவிடும்.

முதலில் வாய்க்கால் மதகுகளின் வழியே வழிய வழிய ஓடும் தண்ணீரைப் பார்த்ததும் நாகராசும் சண்முகமும் வேலையை ஆரம்பிப்பார்கள். ‘ஏய்… புதுத்தண்ணில குளிச்சா ஒடம்புக்கு ஆகாதாம், பாட்டி சொன்னாங்க. நாளு நாள் கழிச்சிதான் நல்ல தண்ணி வருமாம்!’ என்று நான் சொன்னால், ‘நாம எங்க குளிக்கப் போறோம்? நாம மீனுதான புடிக்கப் போறோம்!’ என்று கூறிவிட்டு வேலையில் இறங்குவார்கள்.

நேரான மூங்கில் கம்பும், ஒற்றை வலை ஒயரும், தூண்டில் கொக்கியும், முடிச்சிடப்பட்ட தக்கையும் என அவர்கள் இயங்குவது என் அந்த வயதின் பெரும்வியப்பு. ‘ஏ சம்மொவம் நாக்குப் பூச்சிய சொருவுடா முள்ளுல’ என்று நாகராசு சொல்ல, முள்ளில் நாக்குப்பூச்சியை செருகித் தருவான் சண்முகம்.
(வட்டார வழக்கில் ‘நாக்குப் பூச்சி’ என்பது மண்புழு, ‘முள்ளு’ என்பது தூண்டிலின் கொக்கி, ‘சம்மொமவம்’ என்பது சண்முகம் )

தூண்டிலை நீரில் தூர எறிந்துவிட்டு மேலே மிதக்கும் தக்கையையே பார்த்துக் கொண்டிருப்பான் நாகராசு. சிறிது நேரம் வெறுமனே அமர்ந்திருப்பவன் திடீரென வெறிகொண்டு வெட்டியிழுப்பான். என் அடுத்த அதிசயம் அரங்கேறும். பளபளவென்று ஒரு உயிர் மீன் கரையில் துடிக்கும். ‘ஏய்!!!’ என்று உற்சாகம் துள்ள நாகராசு அதை துள்ளாமல் அடக்கிப் பிடித்து கொக்கியிலிருந்து அதன் வாயை மீட்டி கழற்றி பெயிண்ட் டப்பாவில் போட்டு மூடி விடுவான். கேரளத்தை வென்ற ராஜராஜசோழனாக நிமிர்ந்து உட்கார்ந்து பெருமிதம் கொள்ளும் நாகராசைப் பார்த்து எனக்கும் மீன் பிடிக்க ஆசை கிளம்பியது.

‘ஏ பன்னீரு வச்சிருக்கற தூண்டி பாத்திருக்கயா, தக்கல்லாம் சும்மா அட்டாசமா கலரா இருக்கும். சேம்பரம் போய் வாங்கனது’ என்று அவன் சொன்னதும் பன்னீரின் தூண்டிலை பார்க்க ஆசை கிளம்பியது.
(தூண்டி – தூண்டில், அட்டாசமா – அட்டகாசமா, சேம்பரம் – சிதம்பரம்).

அடுத்த நாள் பெரிய வாய்க்காலுக்கு அவர்களோடு போனேன். பன்னீரும் வந்திருந்தார் அங்கே. பன்னீரைப் பார்த்த பிறகு நாகராசு சண்முகம் மீதிருந்த வியப்பு விழுந்து போனதெனக்கு.

‘என்னப் புடிச்சிக்கோயேன் இந்தா!’ என்று மீன்களே வந்து பன்னீரிடம் மாட்டிக்கொள்ளும் போல, அடுத்தடுத்தடுத்து மீன்களாக வந்து மாட்டிக்கொண்டேயிருந்தன அவரிடம். ‘கெளுத்தி’ ‘கெண்டை’ ‘வவ்வால்’ என்று உறக்கக் கத்தியபடியே அடுத்தடுத்து மீன்களைப் பிடித்து தனது பெயிண்ட் டப்பாவின் உள்ளே போட்டுக்கொண்டேயிருந்த பன்னீர் பெரும் நாயகனாகத் தெரிந்தார் எனக்கு.

அம்மா தந்த புடலங்காய் உருண்டையும் அதிரசமும் தந்ததால் கொஞ்ச நேரம் தூண்டிலை எனக்குத் தர சம்மதித்தான் நாகராசு. மண்புழுவை கிள்ளி முள்ளில் செருகி தூண்டிலை என் கையில் தந்தான் சண்முகம். வாயெல்லாம் பல்லாக கண்கள் கூட மகிழ்வில் சிரிக்க தூண்டிலைப் பிடித்துப் பார்த்தேன். ‘சிவா… தூண்டில உள்ள போடு!’ என்று அவர்கள் சொல்ல அதன்படியே செய்தேன்.

கொஞ்ச நேரம் வெறுமனே இருந்து அப்புறம் வெட்டி இழுக்க வேண்டும் என்று முடிவு செய்து அமர்ந்திருந்தேன். அதற்குள் பன்னீருக்கு பெரிய மீன் ஒன்று சிக்க, வெகுண்டழுந்த ஆரவாரத்தில் இங்கிருந்தே நானும் கலந்து கொண்டேன்.

கொஞ்ச நேரம் கழித்து தூண்டிலை வெட்டியெடுத்தேன். நான் பெரிய நாயகனாக நினைத்தப் பன்னீர் அப்படி செய்திருக்கக் கூடாது. ‘உஹ்ஹாஹாஹா… ஆஹ்ஹாஹாஹாஹா… கோயிந்தா கோயிந்தா…! எஹ்ஹேஹேஹேஹேஹே…!’ என்று என்னைப் பார்த்து விழுந்து விழுந்து சிரித்தார். எல்லாரும் சேர்ந்து கொண்டார்கள். மீன் சிக்கவில்லை என்பதற்கா சிரிக்கிறார்கள் என்று அதிர்ந்தேன்.

‘அஹ்ஹா அஹ்ஹா மீனு வந்து புழுவ தின்னுட்டு போயிடிச்சி! அது கூட தெரியாம இருந்திட்டாரு அஹ்ஹா அஹ்ஹா!’ என்று பன்னீர் சொன்ன போதே சங்கதி புரிந்தது.

‘சிவா, தக்கைய பாத்திட்டே இருக்கனும். மீனு வந்து கொத்தினா, தக்க லேசா ஆடும். வெடுக்குனு இழுக்கணும். இல்லன்னா அது சாப்டு போயடும். நீ தக்கைய பாக்கலயா?’

நான், பன்னீர் பிடித்த பெரிய மீனையல்லவா பார்த்துக் கொண்டிருந்தேன். என் உடல் முழுதும் அவமானம் வழிந்து கொண்டிருந்தது. ‘பன்னீரேய்…பார்ரா.. பெரிய மீன் பிடிச்சிக் காட்டறேன்!’ என்று இரவில் தூக்கத்தில் நான் பேசினேனாம், அம்மா அடுத்த நாள் சொன்னார்கள்.

கெண்டை, கெளுத்தி, விரால் என வகைகளை கண்டறியக் கற்றாலும் நான்காவது முறை போனபோதே மீன் பிடித்தல் கை வந்தது. சின்ன வாய்க்காலில் முயன்ற போது உள்ளங்கையில் அடங்கிவிடுமளவில் கன்னங்கரேலென்று மாட்டியது முதல் மீன். ‘வெற்றி வெற்றி வெற்றி’ என்று எம்ஜியார் படத்து முதல் சீனில் வருவதைப் போலக் குதித்தேன். சைவன் என்பதால் அந்த மீனைத் தொடக்கூட இல்லை. நாகராசு எடுத்து தன் டப்பாவில் போட்டுக் கொண்டான். பன்னீர் அன்று இல்லாததால் அவரிடம் காட்ட முடியவில்லை.

பல ஆண்டுகளுக்குப் பிறகு கர்நாடகாவின் ‘ஜங்கிள் ரிசார்ட்’டிலும், கபினி நீர்த்தேக்கத்தில் ஒரு முறையும், முத்தத்தியில் ஒரு முறையுமென மீன்கள் பிடித்த போதும், பன்னீரை நினைத்துக் கொள்ளவே செய்தேன்.

சண்முகம் குடும்பம் வேறெங்கோ போய்விட்டது. அவர்கள் இருந்த குளத்து மேட்டில் அவர்களது இடிந்த வீடு மட்டுமே உள்ளது. கல்யாணமே பண்ணிக்கொள்ளாத நாகராசு மணக்குடி குளத்தை குத்தகைக்கு எடுத்துக் கொண்டு மீன் வளர்த்துப் பிழைப்பை ஓட்டுகிறான்.

‘சிவா, எம்பையன எதில படிக்க வைக்கறது, ஒன்ன மாதிரி வரணும் அவன், சொல்லு!’ என்று பொங்கலுக்கு ஊருக்குப் போயிருந்த போது என்னைத் தேடி வந்து பன்னீர் கேட்ட போதும், அவரது மகளின் திருமணத்திற்குப் பத்திரிக்கை வைத்து அழைக்க வந்த போதும், ‘நான் தக்கைய கவனிச்சிப் பாத்து மீன் பிடிக்கக் கத்துகிட்டேன் பன்னீரு!’ என்று தொண்டை வரை வந்து சொல்லாமல் அடக்கிக் கொண்டேன்.

‘வீராணம் ஏரி முழுக்க தண்ணியாம். ஒரு எட்டுப் போய் பாத்திட்டு நன்றி சொல்லனும் போல இருக்கு. போவோமா?’ என்று கேட்ட அப்பாவோடும் அம்மாவோடும் இன்று வீராணம் வந்த போது, நீர் வெளியேறும் ராஜா மதகில் கந்தகுமாரன் கிராமத்து சிறுவர்கள் மீன் பிடிப்பதைக் கண்டு அவர்களோடு சேர்ந்து கொண்டேன்.

எனக்கு அருகில் ஏஷியன் பெயிண்ட்ஸ் என்று எழுதப்பட்ட பெரிய டப்பா.
‘ஏ வினோத்தூ நாக்குப்பூச்சிய சொருகுடா’ என்கிறான் ஒரு சிறுவன் மற்றொருவனிடம்.
பல ஆண்டுகளுக்குப் பிறகு மறுபடியும் என் கையில் தூண்டில். ‘அண்ணே, தூண்டிய தண்ணில தூக்கிப் போடுங்கண்ணே!’

தூண்டிலை தூக்கி வீசுகிறேன். தக்கையில் குவியம் கொண்ட போது மனம் முணங்கியது.

‘எனக்கு மீன் பிடிக்கத் தெரியும் பன்னீரு’.

– பரமன் பச்சைமுத்து
12.11.2017
வீராணம் ஏரி

Www.ParamanIn.com

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *