தேசம் மாறுமென்று தினம்தோறும் கனவு காண்பவன் நான்

தேசம் மாறுமென்று
தினம்தோறும் கனவு காண்பவன் நான்

ஒரு நாள் விடியும்
கரிநாள் முடியும்
என்று காத்திருக்கும்
குடிமகன் நான்

வறுமைகள் ஒழிக்கப்படும்
வெறுமைகள் தீர்க்கப்படும்
இன்னல்கள் இந்தியாவைவிட்டேயகலும் என்றே நம்பித் துயிலப் போகிறேன்,
நம்பியே துயிலெழுகிறேன்

கான்க்ரீட் ஜங்கிள் நகரத்தின் நடுவே
தட்டான்கள் பறக்கும்
சிட்டான்கள் கிறீச்சுக்கும் என்று இச்சை வளர்க்கிறேன்

பறம்பு நில பாரிவேள் போல
கர்ம வீரர் காமராசர் போல
சிங்கையின் லீ குவான் போல
எவரேனும் வருவர்
எல்லாம் மாற்றுவர்
என்றெண்ணியே அகமகிழ்கிறேன்

அரசு இயந்திரம் அசுரகதியில் இயங்கும்
அதிகாரிகள் பணமின்றியே பாய்ந்தியங்குவார்கள்
என்றே தவமிருக்கிறேன்

அறம் கொண்டு அரசு நகரும்
மறம் கொண்டு மாநிலம் திகழும்
தரம் உயர்ந்து தரணியில் நிற்கும்
சிரம் உயர்த்தி சிரித்து மகிழ்வோம் என காத்திருக்கிறேன்

என் தாய்மொழி –
ஆட்சி மொழி ஆகும்
வளர்ச்சி வழி காணும்
என விழியில் கனவேற்றுகிறேன்

வாகனங்கள் சீராய் ஓடும்
போக்குவரத்து நேராய் ஆகும்
பசுமைச்சூழல் ஜோராய் மிளிரும்

நிலத்தில் வளம் பெருகும்
மனத்தில் அன்பு ஒழுகும்
குணத்தில் நேர்மை மிளிரும்
இனத்தில் செழிப்பு வரும்
ஞாலத்தில் பெயர் பெறுவோம்
என்றே கனவு வளர்க்கிறேன்

வறுமைக் கோட்டிற்கு மேலேயிருந்தும்
வருந்தாமல் ரேஷன் அரிசி வாங்கி
கள்ள சந்தைக்கு கடை விரிக்கிறேன்

வரி கட்டுதல் தவிர்த்ததை
வரிப்புலியாய் வீரம் காட்டித் திரிகிறேன்

மண வயதில் மகள் இருக்கையிலும்
மாதரை காண்கையில்
வேறு கண் கொண்டு ஊடுருவுகிறேன்

ஓட்டுனர் உரிமம் புதுப்பிக்க
‘நோ என்ட்ரி’யில்
நோகாமல்
பயணிக்கிறேன்

‘ஒரு ஓட்டுக்கு இவ்ளோ, நான்கு ஓட்டு என் வீட்டில்’ என்றே
ஓட்டுக்குப் பணம் பெற்று
வீட்டுக்குப் பொருள் கொள்கிறேன்

கையூட்டு கொடுத்து கல்லூரி சீட் வாங்குகிறேன்,
கைவிட்டு தந்தே கடவுள் தரிசனம் செய்கிறேன்,
வரிசை தவிர்க்கவே
வேண்டியதை தருகிறேன்,
ப்ளாக்கில் டிக்கட் வாங்கியே தலைவர் படம் பார்க்கிறேன்

புதிதாய் மரங்கள் வைப்பதில்லை
நிலத்தின் மதிப்பிற்கு பதிவதில்லை
மகளிர் எவரையும் மதிப்பதில்லை
மற்ற சாதியினரை
ரசிப்பதில்லை
மாற்று மதம் என்றால்
அட… பேச்சேயில்லை

ஆங்கிலத்தில் பேசியே அறிவு வளர்க்கிறேன்
ஆன்மீகம் என்ற பெயரால் அடுத்த மார்க்கத்தை வெறுக்கிறேன்

இருப்பினும்…

தேசம் தானாய் மாறுமென்றே
தினந்தோறும் கனவு காண்கின்றேன் நான்

– பரமன் பச்சைமுத்து
24.11.2017

Www.ParamanIn.com

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *