ஆருத்ரா தரிசனம்

26.12. 2016 ( சென்ற ஆண்டெழுதியது)

‘என்ட பக்கத்தில வந்து நில்லு!
‘எத்தனைக் குழாந்தைகள்?’ என்ற வேறு ஓர் உச்சரிப்பைக் கொண்ட ஒரு தமிழை முதன் முதலில் கேட்க நேர்ந்தது பல வருடங்களுக்கு முன்பு இதே நாளில்தான். ஈழத்திலிருந்து வந்திருந்த சிலர் என் பக்கத்தில் நின்று பேசிய போது கேட்ட தமிழ். சிறுவனாய் இருந்த என்னை சைக்கிளில் தில்லைக்குக் கூட்டிப் போனார் அப்பா ஆருத்ரா தரிசனம் பார்க்க. ‘பசங்களா, நாளைக்கு சிதம்பரம் தரிசனம், அதனால பள்ளி விடுமுறை!’ என்று முதல் நாளே சொல்லிவிட்டார் மூணாம் வகுப்பு ஆயிவரத்து கலியன் வாத்தியார்.

ஆயிரம் கால் மண்டபம் பக்கத்திலிருந்து நடராஜர், அம்மன், முருகன் என சாமியைத் தூக்கிக் கொண்டு தாண்டவமாடிய படி ஓடி வந்தனர்.
‘திருச்சிற்றம்பலம்… திருச்சிற்றம்பலம்’ என்று குரலெழுப்பினர் பலர். அதைப்போல் சொல்ல ஆசையாக இருந்தாலும் வெட்கமாக இருந்ததால் சொல்ல முடியவில்லை எனக்கு.

என் பக்கத்திலிருந்த ஈழ குடும்பத்தில் ஒருவர் என்னைத் தூக்கி தோளில் வைத்து தரிசனம் காட்டினார். அப்பா தலைக்கு மேல் கை குவித்து ஏதோ பதிகம் பாடிக் கொண்டிருந்தார்.

வெளியில் வந்த போது, கிழக்குக் கோபுர வாசலில் யாரோ களி தந்தார்கள். சுவையோ சுவை! தின்று விட்டு திரும்பிப் போய் வாங்க ஆசை, அப்பா திட்டுவார் என்று அஞ்சி ஆசையை அடக்கிக் கொண்டேன். சைக்கிளில் வீட்டிற்கு வந்ததும் கிண்ணம் நிறைய திருவாதிரைக் களி தந்தார்கள் அம்மா. ‘எப்படி இவங்களுக்குத் தெரியும்!’ என்ற வியப்போடு திகட்டத் திகட்ட தின்றேன் வீட்டை ஒட்டி ஓடிய வாய்க்காலின் கரையில் அமர்ந்து.

இன்று ஆருத்ரா தரிசனமாம். அப்பா போய் பார்த்தாரா தெரியவில்லை. நான் சென்னையிலிருந்து புதுச்சேரிக்கு பயணிக்கிறேன், வாழ்வியல் பயிற்சி வகுப்பெடுக்க, ‘அடுத்த தரிசனத்திற்கு அப்பாவை, மகள்களை கூட்டிப் போனால் என்ன, அந்த அனுபவத்திற்காக!’ என்ற கேள்வியோடு.

அந்த ஈழத்து மனிதர்கள் இன்னும் இருப்பார்களா? அவர்களின் வழி வந்தவர்கள் எங்காவது இருப்பார்களா இல்லை கொத்துக் குண்டுகளுக்கு இறையாகி இறந்திருப்பார்களா? தெரியவில்லை. என்னைத் தூக்கி உதவி செய்த அந்த மனிதர்களுக்கு, தூக்கி உதவி செய்யாமல் விட்டு விட்டோம்.

இன்று கடவுள் பற்றிய என் கருத்துகள் மாறிவிட்டன.
திருவாதரைக் களியின் தித்திப்பும், அந்த ஈழ மனிதர்களின் நினைவுகளும் மட்டும் மாறாமல் நிறைந்திருக்கிறது என்னுள்ளே.

பரமன் பச்சைமுத்து
26.12.2015

Facebook.com/ParamanPage

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *