ப்ரூஸ் லீ அதில் ஒருவர்…

bruce_lee

bruce_leeசிறு வயதில் தொலைக்காட்சி காண்கின்ற அனுபவங்கள் எதுவுமில்லாமலேயேதான் வளர்ந்தேனென்றாலும், அவ்வப்போது மாட்டு வண்டியில் அம்மாவோடு பயணித்து டூரிங் டாக்கீஸில் சிவாஜி முத்துராமன் திரைப்படங்கள் பார்த்தே வளர்ந்தேன். என் வாழ்வில் அதிக பாதிப்புகளை ஏற்படுத்தியவை என்றால் அவை பதின்மவயதில் செம்பனார் கோவில் சிம்ப்ளஸ் திரையரங்கம் மற்றும் சிதம்பரம் லேனா தியேட்டரிலிருந்து என்னுள் நுழைந்த புரூஸ்லீ, ஜாக்கி சான் படங்களே.

 

நிறுத்தி நிதானித்து திடீரென்று இடியாக இயங்கும் புரூஸ்லீயின் காட்சிகள் என்னை கிறுக்குப் பிடிக்கச் செய்யும். திரையிலிருந்து நேரடியாக என்னுள்ளே உற்சாகம் ஊற்றப்படும். அடுத்த சில மணி நேரங்களில் என்னுடைய ராலே சைக்கிள் காடு மேடு தெரியாமல் பறக்கும். அல்லது என் கால்கள் வாய்க்கால்களை வரப்புகளை மரக்கிளைகளைத் தாண்டி பரபரக்கும். புரூஸ்லீ உயிரோடிருந்தால் எப்படியாவது ஒரு முறையாவது பார்த்திருப்பேன்.

 

பார்க்க புரூஸ்லீ படங்கள் இல்லாததால், ஜாக்கி சான் படங்களுக்குத் தாவினேன். அவையும் நின்று போக ’36 சேம்பர்ஸ் ஆஃப் ஷாலியன் டெம்ப்பிள்’ மாதிரி படங்களைத் தேடிப் பார்த்தேன்.

மிகச் சிறந்த ஆக்‌ஷன் காட்சிகள் எதுவோ செய்துவிடுகின்றன என்னுள். ‘திராபை’ என்று பத்திரிக்கைகள் எழுதித் தள்ளிய ரஜினியின் ‘சிவா’ படத்து குதிரை – மாடுலேஷன் டயலாக் ஸ்டைல் கொண்ட ஆக்‌ஷன் காட்சிகள் எனக்கு அந்நாட்களில் பெரும் போதையைத் தந்தன.

 

‘ஏ… பம்ப்பிஸ்தானு… ரேப்பிஸ்தானு… நா பிள்ள ரா இதி…’ என்றே சத்தங்கள் கொண்ட மொழியே புரியாமல் இருந்த போதிலும் எல்லா அல்லு அர்ஜூன் படங்களையும் நான் பார்ப்பது, அதீதத்தின் அதீதமாக இருந்தாலும் அதில் வரும் ஆக்‌ஷன் காட்சிகளுக்காகவே.

 

டோக்கியோவில், சான்ஃப்ரான்ஸிஸ்கோவில் தனியேயிருந்த காலங்களில் பல மொழிகளின் படங்கள் பார்க்க நேர்ந்தாலும், படங்கள் தாண்டி நான் பார்த்த ‘டக்கஷிஸ் கேஸல்’ ‘நிஞ்சா வாரியர்ஸ்’ போன்ற பெரு விளையாட்டுகள் என்னை சிலிர்க்கச் செய்தன.

 

நிஞ்சா வாரியர்ஸ் காட்சிகள் இப்போதும் என்னை கவரவே செய்கின்றன. ‘பரமன், இது உங்களுக்குப் பிடிக்கலாம்!’ என்று கட்செவியஞ்சலில் காணொளித் துண்டொன்றை அனுப்பியிருந்தார் மலர்ச்சி மாணவி ஒருவர். நிஞ்சா வாரியர்ஸ்ஸின் தாவ வேண்டிய தொங்க வேண்டிய ஏற வேண்டிய நிலைகள் பற்றித் தெரிந்தவர்களுக்கு எண்பத்தியொரு வயது மனிதனொருவன் அதை ஏறிக் கடப்பது எவ்வளவு பெரிய விஷயமென்று புரியும்.

 

ஓஷோ போன்றவர்களே புரூஸ்லீயின் ‘என்ட்டர் த ட்ராகன்’ திரைப்படத்தை அதில் வரும் ஆழ்பொருள் பொதிந்த வார்த்தைகளுக்காகவே பரிந்துரைத்திருக்கிறார்கள். புரூஸ்லீ உயிரோடு இருந்திருந்தால் ஒரு முறையாவது நிச்சயம் பார்த்திருப்பேன்.

 

ஒரு நல்ல ஹோம் தியேட்டரில் அதிக சத்தம் வைத்து

‘பிஸ்ட் ஆஃப் ஃப்யூரி’ அல்லது ‘பிக் பாஸ்’ படத்தை பார்க்க வேண்டும் போலுள்ளது.

 

இருந்த போது தனது சம காலத்தில் மட்டுமல்ல, போன பின்னும் யாருடனும் ஒப்பிடமுடியாமல் வாழ்ந்தவர்கள் பலருண்டு. ப்ரூஸ் லீ அதில் ஒருவர், லெஜண்டு!

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *