விவசாயம் காக்க வேண்டுமானால்

நெல்லுக்கு விலையுயர்வு, நிறைய கொள் முதல் நிலையங்கள் திறப்பு என்றோர் அறிவிப்பை செய்திருக்கிறது தமிழக அரசு. விலையுயர்வு நல்லதுதான் என்றாலும், எங்கள் உண்மை நிலவரப் பிரச்சினை வேறு. அரசு எவ்வளவு கொள்முதல் விலை வைத்தாலும் பல காரணங்களால், இரண்டு காணி மூன்று காணி நிலங்கள் கொண்ட சிறு விவசாயிகளால் கொள்முதல் நிலையங்களுக்குள் நுழையவே முடிவதில்லை.

கொள்முதல் நிலையங்களில் அனுமதிச் சீட்டு வாங்கும் வரை எங்கே வைப்பது நெல் மூட்டைகளை, நெடுந்தொலைவிலிருக்கும் கொள்முதல் நிலையங்களுக்கு எடுத்துப் போக ஆகும் செலவு பரவாயில்லை அங்கேயே எத்தனை நாட்கள் காத்திருப்பது போன்ற காரணங்கள் அவனை கொள்முதல் நிலையங்களுக்குப் போகாமல் இடைத்தரகர்களிடம் விழ வைத்து விடுகிறது. கிட்டத்தட்ட முப்பது விழுக்காடுகள் குறைவான தொகைக்கு விவசாயி தன்னை சேதப்படுத்திக் கொள்வது இதில்தான். ‘நெல்லு பிடிக்கறேன்!’ என்று ட்ராக்டர் அல்லது லாரியை வாடகைக்கு எடுத்துக் கொண்டு ஊர் ஊராக வந்து கொடுங்குறைவான விலைக்கு சிறுவிவசாயிகளின் நெல்லை அள்ளிப் போகும் இடைத்தரகர்களை குற்றம் சொல்லிப்பயனில்லை. எதைச் செய்து தொழில் செய்யலாம், நான்கு காசு பார்க்கலாம் என்று உலகின் இயல்பில் இயங்குவோர்கள் அவர்கள். அது இயல்பும் கூட.

அரசு செய்ய வேண்டியதெல்லாம்… நிறைய கொள்முதல் நிலையங்களைத் திறப்பது. மணக்குடியைத் தாண்டி வயலாமூரில் விளைந்த என் நெல்லை சிதம்பரம் வரை கொண்டு போவது பிரச்சினை இல்லை. தச்சக்காடு, வல்லம், அருண்மொழித் தேவன், சேந்திரக்கிள்ளை, அரசூர், பெருமாத்தூர் என எல்லாப் பக்கங்களிலிருந்தும் வரும் அதிக ஊர்களின் நிலங்களின் நெல்கள் ஒரேயொரு நிலையத்தில்தான் தரப்பட முடியும் என்ற நிலையால், வாரக்கணக்கில் காத்திருப்பு என்றாகி விடுகிறது.

அதிக எண்ணிக்கையிலான கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படும் போது, விவசாயிகளுக்கு நேரடியாட எளிதில் அனுகும் வாய்ப்பு கிடைக்கும். இடைத் தரகர்கள் வேறு வேலைக்குப் போய் விடுவார்கள் என்பதைத் தாண்டி விவசாயி கையில் காசு பார்ப்பான். விளை நிலத்தை விலை நிலமாக மாற்ற எண்ணிப் பார்க்கக் கூட மாட்டான். விவசாயம் காக்கப்படும்.

ஒரு விவசாயியின் மகன்,
பரமன் பச்சைமுத்து
30.12.2017

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *