கடைசியில் ஒரு வகையில் எல்லாமே நினைவுகள்தானே…

Boys2

Boys2

மதுரை அண்ணாப் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர்களுக்கு மலர்ச்சி உரையாற்ற பாண்டியன் எக்ஸ்ப்ரெஸில் டிக்கட் போட்ட  போது திருநெல்வேலியில் இறங்கி குறுக்குத்துறை சென்று தாமிரபரணியில் குளிப்போம் என்றேன். குமரன், கார்த்திகேயன், ராமசாமி, நான் என நால்வரும் திருநெல்வேலியில் இறங்கி ‘நாடார் மெட்டல்ஸ்’ என்ற ஒரே பெயரில் பல கடைகள் இருக்கும் அந்தத் தெருவில் இருந்த ‘போத்தீஸ்’ஸின் உள் நுழைந்து இரண்டாம் மாடியில் ஏறி ‘ஷார்ட்ஸ்’ வாங்கினோம், தாமிரபரணியில் குளிக்க வேண்டுமேயென்று. ‘குறுக்குத்துறையில் வெள்ளப் பெருக்கு’ என்று எப்போதும் தினமணியின் கடைசிப் பக்கத்தில் பாதி மூழ்கித் தெரியும் குறுக்குத்துறையின் முருகன் கோவில், நாங்கள் போன போது கணுக்கால் அளவிற்குக் கூடத் தண்ணீரில்லாமல் ஒரு சாக்கடையைப் போலக் காய்ந்து கிடந்தது. அந்த ஜாக்கி ‘ஷார்ட்ஸ்’ஐ பயன்படுத்தத் தேவையே ஏற்படவில்லை தாமிரபரணியில். அடுத்த நாள் மதுரையில் அண்ணாப் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர்களுக்கு மலர்ச்சி வகுப்பெடுத்து விட்டு, சென்னைக்கு திரும்பி வந்து ஆண்டுகள் கடந்து விட்டன. இங்கு ஆர் ஏ புரத்தில் வீட்டில் எப்போதாவது அணியலாம் என அந்த ஷார்ட்ஸ்சை எடுத்தால் திருநெல்வேலி வீதியும், நாடார் மெட்டல்ஸ்சும், குறுக்குத்துறையும் வந்து போகின்றன கண் முன்னே.

அமேசான் ப்ரைம்மில் படங்களை கடக்கும்போது கண்ணில் படும் ‘ராஜபார்ட் ரங்கதுரை’, திடீரென ஏழாம் வகுப்புப் படித்த காலத்திற்கு கூட்டிச் சென்று, கீரப்பாளையம் விஆர்கே டூரிங் டாக்கீசையும், அறுபது காசு பென்ச் டிக்கெட்டையும், சடாட்சரம் சித்தபப்பாவையும், ராஜவேலு சித்தப்பாவையும் சில நிமிடங்கள் நினைவில் கொண்டு வந்து நிறுத்தி விட்டு போகிறது.

மனித உள்ளம் மிக மிக நுட்பமானது. ஒன்றைப் பதிய வைக்கும் போதே அது தொடர்பான பல சங்கதிகளை சங்கிலியின் கண்ணிகளைப் போல கோர்த்தே பதிய வைக்கிறது. ஒரு நிகழ்வைப் பதிய வைக்கும் போது அந்நிகழ்வில் கொண்ட உணர்வுகள், தொடர்புடைய பொருட்கள், மனிதர்கள், இடம் என எல்லாவற்றையும் ஒரு கோப்பில் வேண்டிய தாள்கள் அனைத்தையும் ஒன்றாக கோர்த்து வைப்பதைப் போல மொத்தமாகக் குவித்து பதிய வைத்துவிடுகிறது.

ஒன்று எதிர்படும் போது அது தொடர்பான எல்லாவற்றையும் கொண்டு வந்து போட்டு விடுகிறது மனது, ‘கூகுள் சர்ச் எஞ்சின்’ போல. அதனால்தான் கவிதா, ஜெகன், பரமகுரு, அமுதா, மீனாட்சி சுந்தரி என்று சில பெயர்களை முகநூலியோ வேறு எங்கோ படிக்கும்போது சில நிமிடங்களுக்கு பள்ளிக் கல்லூரிக் காலங்களுக்கு ஓடி பழைய நண்பர்களை சில நொடிகளில் கடந்து விட்டு வருகிறது மனம். அதனால்தான் கட்செவியஞ்சலில் அனுப்பி வைக்கப்பட்ட இமயமலை படங்களைப் பார்த்ததும், இமயமலையில் ஏறிப் பார்க்கவேண்டும் என்று ஆசை கொண்டிருந்த, குரங்கணி காட்டுத் தீவில் உயிரிழந்த மனஅழகி அனுவித்தியாவின் நினைவு வந்து அழுகை வருகிறது குமரனுக்கு.

உடற்பயிற்சி முடித்து காலை செய்தித்தாள்களின் செய்திகளில் மூழ்கிக் கொண்டே மனைவி தந்த தேநீரை உறிஞ்சும் போது… இலங்கைத் தீவும், மகாவலிக் கங்கை நதியும், சாலை வழிப் பயணங்களும் நினைவில் வருகின்றன. எனக்குத் தெரியாமல் ‘சிலோன் டீ’ தேயிலைத் தூளை வாங்கி ஏற்றியனுப்பிய இலங்கை நண்பரும், அதை எடுத்து வந்து இந்தியாவில் கொண்டு சேர்த்த நண்பர்களும் நினைவுக்கு வருகிறார்கள்.

கடைசியில் ஒரு வகையில் எல்லாமே நினைவுகள்தானே. வரலாறு கூட நினைவுகள்தானே. என் தந்தையோடு, தாயோடு நான் கழித்த குழந்தைப் பருவம், என் அக்கா ஆடிய பாண்டியாட்டம், நான் ஓட்டிய டயர் வண்டி, நண்பர்களோடு கழித்த பள்ளிப் பருவம், கல்லூரிப் பருவம், முதல் வேலை, சிரிப்பும் திகைப்புமாய் திருமண மண்டபத்தில் கழிந்த அந்த என் திருமண விழா, மனைவியை பிரசவ வார்டின் உள்ளே அனுப்பிவிட்டு வெளியே நின்று அன்றிருந்த மனநிலையில் திருவாசம் சொன்ன அந்தப் பொழுதுகள், நண்பர்களோடு செய்த மலையேற்றம், முதல் முதலில் நிகழ்த்திய கன்னி மேடைப்பேச்சு, நேற்று மாலை தோழியொருவரோடு அருந்திய தேநீர், இன்று காலை உடற்பயிற்சியின் பொழுதுகள் என எல்லாமே கடைசியில் நினைவுகளாகவே நிற்கின்றன.

விஜயகாந்த் – ராதா – ரேகா நடித்து இளையராஜா அட்டகாசமாக இசையமைத்து எப்போதோ வெளிவந்த ஒரு படத்தில், ராதா இறந்து விடுவார். விஜயகாந்தால் ராதாவின் நினைவுகளை மறக்க முடியாது. ரேகாவும் வேறு ஊருக்கு மாற்றல் வாங்கிப் புறப்படுவார். ‘இல்லீங்க… உங்களோட இருந்த நினைவுகளோடேயே நான் இருந்திடுவேன். அது போதும்!’ என்று அவர் சொல்ல படம் முடியும். அந்த இடத்தில் படத்தின் பெயரை போடுவார் இயக்குனர்.

‘நினைவே ஒரு சங்கீதம்!’

 

  • பரமன் பச்சைமுத்து

சென்னை

25.09.2018

 

www.ParamanIn.com

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *