ஆளுயர தட்சிணா மூர்த்தி

பார்த்து விட்டு சட்டென்று கடக்க முடியா ஓர் அழகு அல்லது அமைதி அல்லது இரண்டும் கொண்ட ஒரு தட்சிணா மூர்த்தியை பார்த்தேன் இன்று, சிதம்பரம் கோவிலில்.

மற்ற இடங்களில் இருப்பது போலவே கல்லால மரத்தின் அடியில் அமர்ந்து ஒரு காலை மடித்து இன்னொரு காலின் மீது போட்டு அமர்ந்திருக்கும் அதே உருவகம்தான். ஆனால், இது பிரமிக்க வைத்தது. தட்சிணா மூர்த்தி என்னும் குருவை வியாழன் என்று குழப்பி் மஞ்சள் துண்டும் கொண்டைக் கடலையும் சார்த்தும் குழப்பங்கள் எல்லா இடங்களையும் போல இங்கேயும் நடக்கிறது என்றாலும், இந்த ஆளுயர தட்சணா மூர்த்தி ஈர்த்தது.

மார்பில் அணிந்துள்ள ஆபரணம், அதன் மீது இருக்கும் உத்திராட்ச மாலை, காலின் கெண்டைக்கால் சதை, கையின் விரல்கள் என எல்லாமே துல்லியமாய். அரைக்கண் மூடிய பாதம் நோக்கிய பார்வை கொண்ட அந்த முகத்தில் ஊழ்கத்தின் அமைதி தவழுகிறது. அரையில் மஞ்சள் துண்டும் (குருவை வியாழன் என்று குழம்பியதில்) அதற்கு மேலிருக்கும் புலித்தோலும் அந்த கன்னங்கரேல் சிலையில் புது வண்ணக் கோலத்தை உருவாக்குகிறது. சனகாதி முனிவர்கள் இடத்திலும் வலத்திலும் சற்று தள்ளி அமர்ந்திருக்க, நடுவே ஆளுயரத்தில் அட்டகாசமாக ஈர்க்கிறது தென்திசை நோக்கிய ஆசிரியனின் உருவம்.

கோவிலுக்குப் போக விரும்பிய சித்தப்பாவுக்கு துணையாகச் சென்றிருந்த நான், தட்சிணா மூர்த்தியால் கவரப்பட்டு நெடுநேரம் அங்கேயே இருந்தேன்.

சிதம்பரம் வந்தால் பாருங்கள்!

– பரமன் பச்சைமுத்து
சிதம்பரம்
15.01.2019

Facebook.com/ParamanPage

Www.ParamanIn.com

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *