மாறி நிற்கிறது தமிழ்நாடு மனம் மகிழ்கிறது நிறைவோடு

சாலையோர இளநீர்க்கடை
சனங்கள் நிறை காஃபி ஷாப்புக் கடை
வணிக வளாக ஃபுட் கோர்ட்
வகைவகை பழச்சாறு அவுட்லெட்
வந்தன எங்கும் காகிதக் குழல்கள்
(பேப்பர் ஸ்ட்ரா)!

மரக்கன்று வளர்க்கும்
மாணவனே
கூடுதல்
மதிப்பெண்கள் இனியுண்டே –
மகிழ்வூட்டுகிறார்
மாண்புமிகு அமைச்சர்

பொறித்த கிழங்கு விற்ற
பன்னாட்டு நிறுவனம்
அவித்த கிழங்கு விற்கிறது
இந்நாட்டு மக்களுக்கின்று

எப்போதும் இல்லா அளவில்
எங்கேயும் கேழ்வரகு கம்பு
உணவகங்களில்
ஊருக்கு ஊர் கடைகளில்
குதிரைவாலி சாமை தினை

மொட்டை மாடிகளில்
மூடிவைத்த சன்னல் வெளியில்
அடுக்கக இருப்புகளில்
அவரவர் தேவைக்கு
அவரவரே ஆசையோடு வளர்க்கும்
‘ஆர்கானிக்’ காய்கறிகள்

நல்ல காஃபி குடிப்போமேயென்று
நம்பி உணவகத்தில் உட்கார்ந்த பரமனிடம்
‘நாட்டுச் சக்கரையா, நார்மல் சக்கரையா?’என்கின்றார் வெயிட் போட்ட வெயிட்டர்

மல்ட்டிப்பிள் ரீஃபைண்டு ஆயில் நிறுத்தி
மரச்செக்கு எண்ணெய் வாங்குகின்றனர் திருத்தி

மஞ்சள் பை கொண்டவனை
‘மஞ்ச மாக்கான்’ என்று சிரித்தது போய்
மஞ்சள் பை சூடிக்கொள்கிறது நகரம்

மாறி நிற்கிறது தமிழ்நாடு
மனம் மகிழ்கிறது நிறைவோடு
மலர்ச்சி வருகிறது வளர்ச்சியோடு!

வாழ்க! வளர்க!

– பரமன் பச்சைமுத்து
சென்னை
05.02.2019

**Malarchi App**

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *