‘கேப்டன் மார்வல்’ – திரை விமர்சனம் : பரமன் பச்சைமுத்து

Captain Marvel1

Captain Marvel1

வான வெளியில் நடக்கும் ஒரு பெருஞ்சண்டையில் கரணம் கொஞ்சம் தப்பி வழியில் இருக்கும் சி-54 என்ற கிரகத்தில் ‘தொப்’ என விழுகிறாள் வீராங்கனை வேர்ஸ். (சி-54 என்பது மனிதர்கள் வாழும் பூமி!). ஹாலா கிரகத்தின் க்ரீ இனப்பெண்ணான அவளை அவளது பரம எதிரிகளான ஸ்க்ரல்ஸ் இனத்தாரும், உள்ளூர் காவலர்களும் துரத்துகின்றனர். ‘என்னாது வேற கிரகமா, யாருகிட்ட அம்மணீ கதை உடறீங்க, காதுல பூ சுத்தற வேலையை நிறுத்துங்க!’ என்று சொல்லி கைது செய்ய முயற்சிக்கும் காவல்துறையையும், நினைத்த வடிவம் எடுத்துக்கொண்டு தொடர்ந்து வரும் ஸ்க்ரல்ஸ் கிரகவாசிகளையும் சமாளித்துப் புறப்பட எத்தனிக்கும் நேரத்தில், ‘இந்த ஊரில் நான் வசித்திருக்கிறேனோ! இதெல்லாம் தெரிந்ததாக இருக்கிறதே!’ என்று நினைவுகள் மின்னுகின்றன அவளுக்குள். கொஞ்சம் முயற்சித்துப் பார்த்ததில் ஆறு ஆண்டுகளுக்கு முன்பு விபத்தில் இறந்து போன கேப்டன் கரோல் டான்வெர்ஸ் தான்தான் என்று அறியவருகிறாள் அவள்.

‘யார் நான்? எது உண்மை? ஹாலா கிரகத்தின் வேர்ஸா, சி-54 கிரகத்தின் (பூமி) கரோலா?’ என்று ‘போர்ன் ஐடென்டிட்டி’ படத்து ‘ஜேசன் போன்’ போல தவித்துக் கண்டறியும் கதை. (‘போர்ன் ஐடென்டிட்டி’ படத்தை உட்டாலக்கடி செய்து ‘ஸ்டீஃபன் ராஜ் – வெற்றிவேல் பாத்திரங்கள் செய்து ‘வெற்றிவிழா’ என்று தமிழில் தந்தார்கள்)

அவள் உண்மையில் யார்? அவளது உண்மையான எதிரிகள் யார்? தங்களது வசிப்பிடத்தை விட்டு விட்டு பிரபஞ்சம் முழுக்க அகதிகளாக ஸ்க்ரல்ஸ் இனம் பரவிக்கிடப்பதேன்? அவள் எப்படி கேப்டன் மார்வெல் ஆக உருவாகிறாள் என்பனவற்றை தோரணம் கட்டி பிரமாண்டமாகத் திரையில் தந்துள்ளார்கள்.

ஏற்கனவே வெளியாகி சக்கைப் போடு போட்ட, போட இருக்கிற ‘அவெஞ்சர்ஸ்’ படங்களின் முக்கிய பாத்திரமான ‘கேப்டன் மார்வல்’, கேப்டன் அமெரிக்கா – அயன் மேன் – ஹல்க் போன்றவர்களை இணைத்து உலகைக் காக்கும் அமைப்பான ‘ஷீல்ட்’டை இயக்கிக்கொண்டிருக்கும் நிக் ஃப்யூரியை எப்படி எப்போது சந்திக்கிறார், ‘அவெஞ்சர்ஸ்’ என்று ஏன் அதற்குப் பெயர் வைத்தார், அவர் கண் போனது எப்படி என்ற பல புதிர்களை பின்னோக்கிப் பயணித்து அவிழ்த்திருக்கிறது படம்.  (இதைப் பார்த்து விட்டு அடுத்த பாகமான வரவிருக்கிற ‘எண்ட் கேம்’ படத்தைப் பார்ப்பது கூடுதல் தெளிவைத் தரும்.)

 

captain marvel

மைக்ரோசாஃப்ட் விண்டோஸ் 95, டயல் அப் நெட்வொர்க் இன்டர்நெட், கூகுல் வருவதற்கு முன்பு பிரபலமாக இருந்த ஆல்ட்டா விஸ்டா என 1996க்கே நம்மை கூட்டிச் செல்லும் இடங்கள், விண்வெளி ஓடத்தில் ஏறித் தப்பிக்கும்போது தவறுதலாக கூடவே வந்துவிட்ட பூனை, அந்த ‘கூஸ்’ எனும் பூனை செய்யும் சாகசங்கள், இளம் வயது ஃப்யூரியின் நகை, கறுப்பின சிறுமியின் முன் உடையலங்காரம் பெற்று கேப்டன் மார்வலாக உருவெடுக்கும் இடம் என பல இடங்கள் ரசிக்க வைக்கின்றன.

அவெஞ்சர்ஸ் தொடர் திரைப்படங்களை ரசிப்பவர்களுக்கு புரிதலை ஏற்படுத்தும் மிக முக்கியமான படம். குழந்தைகளுக்கும், ஸ்டான்லீயின் பாத்திரங்களை ரசிக்கும் பெரியோர்களுக்கும் மிகவும் பிடிக்கும்.

வி-டாக்கீஸ் வெர்டிக்ட்: ‘கேப்டன் மார்வல்’ – கேம் மார்வலஸ் ; பதின்ம வயதினர்க்கும், சில பெரியவர்களுக்கும் பிடிக்கும். பார்க்கலாம்.

  • திரை விமர்சனம் : பரமன் பச்சைமுத்து

 

 

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *