‘ஸ்பைடர் மேன் ஃபார் ஃப்ரம் ஹோம்’ – திரை விமர்சனம் : பரமன் பச்சைமுத்து

spidermanfarfromhomeposter8421605940772536348.jpg

நியூயார்க்கிலிருந்து ஐரோப்பாவிற்குப் பள்ளித் தோழர்கள் ஆசிரியர்களோடும், பாரீஸின் உயர்ந்த ஈஃபில் டவரில் வைத்து எம்ஜேவிடம் தனது காதலை எப்படியாவது சொல்லி விடலாம் என்ற வகை காதல் கனவுகளோடும் நியூயார்க்கிலிருந்து ஐரோப்பாவிற்கு செல்லும் பீட்டர் பார்க்கரின் இன்பச் சுற்றுலா, அவெஞ்சர்ஸை வைத்து பிரபஞ்சம் காக்கும் பெரியண்ணன் நிக் ஃப்யூரியின் அழைப்பாலும், அதிகார அழிப்பு வெறி கொண்ட வில்லன் மிஸ்ட்டீரியோவாலும் துன்பச்சுற்றுலாவாக மாறிவிடுகிறது. உலகைக் காக்கும் பொறுப்பை விட பதின்ம வயது பாலுணர்வுகளே பெரிதென்று துடிக்கும் பீட்டர் பார்க்கர் ‘பதின்ம வயது பாலுணர்வா, ஸ்பைடர்மேன் ஜாக்கெட்டா?’ என்று உள்மனப் போராட்டத்தில் என்ன, ஏன், எப்படி செய்கிறான் என்பதை விறுவிறுப்பாக திரைக்கதையமைத்து கொடுத்திருக்கிறார்கள் ‘ஸ்பைடர்மேன் ஃபார் ஃபரம் ஹோம்’ திரைப்படமாக.

எம்ஜே எனப்படும் மேரி ஜோன், காதலைக் கூடச் சொல்லத்தெரியாமல் தவிக்கும் அம்மாஞ்சிப் பையன் பீட்டர் பார்க்கர் ஆனால் தேவைப்படும் போது பேருருவமெடுத்து உலகைக்காக்கும் ஸ்பைடர்மேன், பார்க்கரின் மீது அன்பை ஊற்றும் அத்தை, எல்லாம் முடிந்தது இனி எல்லாம் சுகமேயென்று எண்ணும் போது ‘ஸ்பைடர் மேன் ஒரு சமூக விரோதி!’ என்று செய்தி பரப்பி திகில் கிளப்பும் ஊடக அதிபர் என்ற ஸ்பைடர்மேன் காமிக்ஸின் அடிப்படை சங்கதிகளை மாற்றாமல் அப்படியே வைத்து அதையொட்டி சுவராசியக் கதை பின்னியிருப்பது நன்று. அதிலும் குறிப்பாய் மற்ற ஸ்பைடர்மேன் படங்களைப் போலல்லாமல் ‘நீ ஸ்பைடர்மேன் என்பதால்தான் உன் மேல ஒரு கண்ணு எனக்கு!’ என்று காதலைச் சொல்லத் தவிக்கும் பீட்டர் பார்க்கரிடம் எம்ஜேவே சொல்வது மார்வல் ஸ்டுடியோவின் குபீர்.

மரிப்பதற்கு முன்பு டோனி ஸ்டார்க் வைத்துவிட்டுப் போன பொக்கிஷக் கருவியான அந்த அசகாய ‘ஈடித்’ கண்ணாடி, ‘டோனியே உன்னைதான் தேர்ந்தெடுத்து சொல்லிட்டுப் போனார்! ஆனா நீ…’ வகை வசனங்கள், டோனி ஸ்டார்க்கின் கருவிகளைக் கொண்டு தரவுகளைக் கையிலெடுத்து தரணியையே ஆளத் துடிக்கும் வில்லன் என படம் முழுக்க ‘அயர்ன் மேன்’ டோனி ஸ்டார்க் பாத்திரம் மறைமுகமாக வந்து கொண்டே இருப்பதால், அவெஞ்சர்ஸ் சீரிஸின் முந்தைய படங்களை முக்கியமாக ‘எண்ட் கேம்’மை பார்த்தவர்களுக்கே காட்சிகளின் முழுப் பின்னணியும் விளங்கும்.

எம்ஜேவை புத்திசாலியாகக் காட்டியவர்கள், இன்னும் கொஞ்சம் அழகியாகக் காட்டியிருக்கலாம். பிற ஸ்பைடர்மேன் படங்களைப் போலல்லாமல் சிறுவர் சிறுமியாகவே (பதின்ம வயது) அமைத்தது அழகு.

ஸ்பைடர்மேனை நிலைகுலையச் செய்ய, வில்லன் மிஸ்டீரியோ செய்யும் ஆர்ட்டிஃபீசியல் இண்டலிஜென்ஸ் திடீர் திடீர் மாயை பிம்பங்கள் சிறுவர்களை வெகுவாகக் கவரும். பீட்டர் பார்க்கரின் பள்ளித்தோழர்கள் ஆசிரியர்கள் வழியே நகை தர முயற்சித்திருக்கிறார்கள். ஆசிரியர்கள் அறுவை. ஆனால், பார்க்கரின் தோழர்கள் புன்னகைக்க வைக்கிறார்கள்.

வி-டாக்கீஸ் வெர்டிக்ட் : ‘ஸ்பைடர் மேன் ஃபார் ப்ரம் ஹோம்’ – ‘அயர்மேன்’னுக்கு ஓர் அஞ்சலி. பார்க்கலாம்.

– திரை விமர்சனம் : பரமன் பச்சைமுத்து

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *