அத்திவரதர் – பத்து இலன் ஏனும் பணிந்திலன் ஏனும்

அத்திவரதரைப் போய் பார்த்துவிட வேண்டுமென்று ஆசைப்பட்ட என் மனைவியையும் வயதான அத்தையையும் லட்சோபலட்சம் பேர் கூடும் பெருங்கூட்டத்தில் எப்படித் தனியே அனுப்புவது என்று தயங்கையில், ஒரு வாய்ப்பு வந்து கதவைத் தட்டி நின்றது.

காஞ்சிபுரத்தில் மலர்ச்சி வகுப்பெடுக்க போகும் நாட்களில் அங்கு தங்கிய நாட்களில் என் விருப்பத் தேர்வு தேவராஜ சுவாமி என்றழைக்கப்படும் வரதராஜப்பெருமாள் கோவிலின் குளத்தையொட்டிய கல் மண்டபம். மண்டபத்தின் மேற்கூரையின் இருபக்கமும் தொங்கும் கற்சங்கிலிகளைப் பார்த்து வியத்தலும், அங்கு கிடைக்கும் அட்டகாசப் புளியோதரையை படியிலமர்ந்து ருசித்துக் கொண்டே கோவிலுக்கு வருவோரை வெறுமனே கவனித்து அமர்ந்திருத்தலும் என் விருப்ப வழக்கம். (கற்சங்கிலியை படமெடுத்து இருமுறை பதிவிட்டிருக்கிறேன் இந்த மூன்றாண்டுகளில்) அந்த மண்டபத்தின் அருகிலிருக்கும் குளத்தின் உள்ளேதான் இருந்தார் 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை வெளிவந்து ஒரு மண்டலம் காட்சி தரும் அத்திவரதர்.

அதே வரதராஜப் பெருமாள் கோவில் நேற்று வேறாக இருந்தது. கிழக்குக் கோபுரத்து வரிசையிலிருந்து மேற்குக் கோபுரத்திற்கு வரிசையில் வர ஆறரை மணி நேரம் காத்திருப்பு என்று திகைக்கச் செய்தன ஊடகச் செய்திகள். மேற்குக் கோபுரம் அருகில் செல்வதற்கே காஞ்சியை விட்டு வெளியேறி ஓரிக்கையைக் கடந்து சில கிலோமீட்டர்கள் சுற்றிக் கொண்டு வரவேண்டியிருந்தது.

மொகலாயர்களிடமிருந்து காக்க நீருக்குள் ஒளித்து வைத்தார்கள் என்கிறது ஒரு கதை. ஆங்கிலேயர்களிடமிருந்து காக்க பதுக்கினார்கள் என்கிறது இன்னொரு கதை. பிரம்மதேவன் செய்த யாகத்தில் பின்னப்பட்டு போனதாலும், தகிக்கும் சூட்டையடக்க தன்னை தெற்கில் இருக்கும் அனந்தசரஸ் குளத்தின் அடியில் பேழையில் வை, கலியுகம் முழுக்க அங்கேயே கழிப்பேன், 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை வெளியே வருவேன் என்று பெருமாளே பணித்ததாகவும் ஒரு கதை சொல்லப்படுகிறது.

எந்தக் கதையும் விவரமும் தெரியாமல் பாமரனாக பக்தியோடு பார்க்கப் போவது ஓர் உன்னத அனுபவம். வரிசையில் நகரும் போதே ‘இதோ வலது புறம் திரும்பினால் அடுத்து மண்டபத்தில அத்தி வரதர்தான்!’ என சீருடைக் காவலர்கள் சொல்ல, உள்ளே ஏதோ ஓர் உணர்வு பரவுகிறது.

நகர நகர, மக்களின் பெருஞ்சத்தம், பிற ஓசைகள் எல்லாம் கடந்து உள்ளே ஓர் குவியம் வருகிறது. திடீரென்று தெரிகிறார் கிடந்த கோலத்தில் இருக்கும், அத்தி மரத்தால் செய்யப்பட்டதாகச் சொல்லப்படும் ஒன்பது அடி வரதர். கருமையான பூச்சில் கவரும் நேர்த்தியான நாசி கொண்ட முகமும், அரையில் இளஞ்சிவப்பு பட்டும், நன்றாகத் தெரியும் பாதங்களும் என கிடைத்த நேரத்தில் விழுங்கிக் கொள்ளலாம்.

‘உன்னை யார் நீருக்குள் வைத்தது? 1979ல் வந்தாயோ, அடுத்து 2059ஆ? எனக்கு ஒண்ணுமே தெரியலியே!

மந்திரம் தெரியாது, முறைகள் தெரியாது, விவரம் ஒரு மண்ணும் தெரியாது.

ஆனாலும்… என்னைக் கொண்டு வந்து நிறுத்திட்டியே! கோடி நன்றி!’

உள்ளம் கதறுகிறது. வெளியே வரும் போது மாணிக்கவாசகரின் வரிகள் வருகின்றன மனதில். நம் நிலைக்கு அச்சு அசலாகப் பொருந்தும் வரிகளை அழாமல் முணுமுணுக்கிறேன்….’

‘பத்து இலன் ஏனும் பணிந்திலன் ஏனும் உன் உயர்ந்த பைம் கழல் காணப்
பித்து இலன் ஏனும் பிதற்றிலன் ஏனும் பிறப்பு அறுப்பாய் எம்பெருமானே
முத்து அனையானே மணி அனையானே முதல்வனே முறையோ என்று
எத்தனையானும் யான் தொடர்ந்து உன்னை இனிப் பிரிந்து ஆற்றேனே..’

#அத்திவரதர்
#AtthiVaradhar

– பரமன் பச்சைமுத்து
காஞ்சிபுரம்
21.07.2019

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *